மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு
சைமன் கமீஷன் விஷயமாகப் பார்ப்பனர்கள் ஆரம்பித்த பகிஷ் காரப் புரட்டுக்கு ஒருவிதத்தில் சாவுமணி அடித்து விட்டதானாலும் மறுபடி யும் சிலர் செத்த பாம்பை ஆட்டுவது போல் சத்தில்லாத விஷயங்களைக் காட்டிக் கொண்டு பாமரமக்களை ஏமாற்ற புதிது புதிதாக வழி கண்டுபிடித்து தங்கள் தங்கள் அரசியல் புரட்டுத் தேரை ஓட்டப் பார்க்கின்றார்கள். இனி இம்மாதிரியான புரட்டுகளுக்கெல்லாம் பாமர மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றே உறுதி கூறுவோம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பஹிஷ்கார வேஷம் இனி செலா வணியாகாது என்று தெரிந்திருந்தாலும் அடுத்து வரப் போகும் தேர்தல் களுக்கு தங்களுக்கு அனுகூலமாக ஏதாவது மார்க்கம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமுடையவர்களும் பார்ப்பனரல்லாதார் கக்ஷி வலுப்படுவதன் மூலம் தங்கள் வாழ்வுக்கு பங்கம் வந்து விடுமோ என்கின்ற சுயநல வாதிகளும் சேர்ந்து பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று போலிக் கூக்குரல் இடுகின்றார்கள். அதைப் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை. ஆனாலும் பகிஷ்காரக் கூச்சலில் ஏதாவது ஒரு சிறு நாணயமாவது இருக் கின்றதா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
சைமன் கமீஷனை பகிஷ்கரிப்பது எதற்காக?
இந்தியர்களை கமீஷனில் சேர்க்கவில்லை என்பதற்காகவா?
அல்லது இந்தியாவின் சுதந்த ரத்தை நிர்ணயிக்க வெள்ளைக்கார ருக்கோ பார்லிமெண்டுக்கோ அதிகார மில்லை என்பதற்காகவா?
அல்லது வேறு எதற்கு ஆக? இதற்கு இதுவரை எந்த அரசியல் தலைவராவது எந்த அரசியல் இயக்கமாவது சரியான பதிலிருக்கவே இல்லை.
மற்றபடி மொத்தத்தில் தற்காலம் சுயமரியாதை இயக்கத்தால் சுயமரியாதை என்கின்ற வார்த்தைக்குச் சற்று மதிப்பு இருப்பதை உணர்ந்து அந்த வார்த்தையை உபயோகப்படுத்திக் கொள்ளக் கருதி “கமீஷனுடன் ஒத்துழைப்பது இந்தியரின் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல” என்று மாத்திரம் சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை. எவ்விதத்தில் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்பதையும் யாரும் விளக்கிக் காட்டவுமில்லை.
‘இந்தியர்களை கமீஷனில் நியமிக்காததற்காக கமீஷனுடன் ஒத்து ழைக்கக் கூடாது’ என்று சேலம் ஜில்லா அரசியல் கான்பரன்சு முதல்முதலாக தீர்மானித்து அந்த பெருமையை அது அடிக்கடி பாராட்டிக் கொண்டாலும் இந்தியர்களில் யாரை நியமிப்பது? எந்த மதத்தினரை நியமிப்பது? அதற்குள் ளடங்கின எந்த வகுப்பாரை நியமிப்பது? அல்லது எந்த அரசியல் கட்சித் தலைவரை நியமிப்பது? என்கின்ற கேள்வி பிறந்தவுடன் ‘திருடனைத் தேள் கொட்டியது’ போல் அந்த பிரசினையை அடியோடு நழுவவிட்டு விட்டு சுயமரியாதை மந்திரத்தை மொட்டையாய் பிடித்துக் கொண்டார்கள். பிறகு கிட்ட நெருங்கி கேட்க ஆரம்பித்த பிறகுதான் ‘பார்லிமெண்டுக்கு இந்தியா வின் சுதந்திரத்தை நிர்ணயிக்க அதிகாரமில்லை’ என்ற புதிய யுக்தி வாதத்தை கண்டுபிடித்தார்கள். ஆனால் இவ்விரண்டையும் பகிஷ்காரப் புரட்டர்கள் எல்லாரும் ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்வதுமில்லை, ஒப்புக் கொள்வ தில்லை என்பதாக தைரியமாய் சொல்லுவதும் இல்லை.
உதாரணமாக ஸ்ரீமதி பெசண்டம்மையார் தனது “காமன் வெல்த் ஆப் இந்தியா” என்கின்ற இந்திய சுயராஜ்ய மசோதா ஒன்றை சேலம் அரசியல் மகாநாட்டிலும் மற்றும் பல காங்கிரஸ் கூட்டங்களிலும் நிறைவேற்றிக் கொண்டு பார்லிமெண்டின் பாதத்தில் வைத்து அதை ஒப்புக் கொள்ளும்படி விழுந்து கும்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இதைப்பற்றி எந்த தேசீயத் தலைவர்களாவது தேசீய சுயமரியாதைக்காரர்களாவது ஒரு சிறிதும் வாய் திறந்தவர்கள் அல்ல.
பார்லிமெண்டை லக்ஷியம் செய்யாதவரும், பார்லிமெண்டுக்கு இந்தியாவின் மீது ஆதிக்கமில்லை என்பவரும், அரசியல் கமீஷனை சமூக விஷயத்தில் கூட பகிஷ்கரிக்க வேண்டும் என்பவருமான மாஜி காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாட்டு தனிப்பெருந் தலைவர் என்பவரும், 30 கோடி மக்களுடைய தலை எழுத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றவர் என்றும் பிரபல தேசீயவாதிகள் என்றும் சொல்லிக் கொள்ளுவோர்களால் சொல்லப்படுபவருமான ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பார்லிமெண்ட் மெம்பர் களால் பிச்சையாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளப் படும் இந்திய சட்டசபை ஸ்தானத்தை முதுகில் தூக்கிக் கொண்டு பார்லி மெண்டுக் காரர் வேஷமான உடையை உடுத்திக் கொண்டு, ‘சமூக விஷயத்தில் அரசியல் கமிஷனை பகிஷ்கரிக்கும்படி நான் சொல்லவில்லை’ என்கின்ற பொய்யை உளறிக் கொண்டு பார்லிமெண்டின் பாதத்தில் வைக்க ஒரு திட்டத்தையும் தயாரித்து தலையில் சுமந்து கொண்டு காயலாக்காரர் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இங்கிலாந்தில் பார்லிமெண்ட் மெம்பர் வீட்டு புறவிடைப்புறம் திரிகின்றார் என்றால் பஹிஷ்காரமெங்கே? சுயமரி யாதை எங்கே? பூரண சுயேச்சை எங்கே? என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும் இது யாருடைய கண்களில் மிளகாய்த்தூள் அள்ளிப் போடுவதற்காக செய்யும் சூழ்ச்சி என்பதாக தேசீயவாதிகள் என்போர்களை கேட்கின்றோம்.
போதாக் குறைக்கு சர்வ கக்ஷி மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி அதன் மூலம் பாமர மக்களின் தலையில் கை வைக்கவும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரையும் குழியில் தள்ளவும் எவ்வளவோ சூழ்ச்சியும் செய்துப் பார்த்தாய் விட்டது.
எனவே இனியாவது இந்தப் புரட்டுகளை தலைகாட்டவிடாமல் அடிக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.
குடி அரசு – துணைத்தலையங்கம் – 10.06.1928