வருணாசிரம மகாநாடு
சென்ற வாரம் ‘இரண்டு மகாநாடுகள்’ என்னும் தலைப்பின் கீழ் நமது முன்னேற்றத்திற்கு விரோதமான கிளர்ச்சிகளைப் பற்றி எழுதி முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு இந்த வாரம் வருணாசிரம மகாநாடு, பார்ப்பனர்கள் மகாநாடு ஆகியவைகளைப்பற்றி எழுதுவதாகக் குறிக்கப்பட்டிருந்தோம். அதோடு இந்த வாரம் சென்னையில் திரு.எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்த முக்கியத் தலைவரான திரு.சாமி வெங்கடாசலம் செட்டியார் சீர்திருத்த சம்மந்தமாகவும் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் சம்மந்தமாகவும் தமது அப்பிப்பிராயத்தை ஒரு உபன்யாசம் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்.
அதுவும் ஏறக்குறைய பார்ப்பனர்கள் மகாநாடு, வருணாசிரம மகாநாடு, சைவப் பெரியார் மகாநாடுகள் போன்றவைகளின் அபிப்பிராயத் தையே வர்த்தக யுத்தி முறையில் பேசியிருக்கின்றார். அதன் சாரமும் அதற்கு திரு. எ.ராமசாமி முதலியார் அவர்களின் விளக்கமான சமாதானமும் வேறு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம்.
திரு.சாமி வெங்கிடாசலமவர்கள் வவ்வாலைப்போல் பார்ப்பனர் களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும் என்னும் முறையில் எவ்வளவோ சாமர்த்தியமாகப் பேசியிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரை தான் சூத்திரன் அல்லவென்ற எண்ணத்தினால் வருணாசிரமத்தை காப்பாற்ற எண்ணி அதை மக்களிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
திரு.சாமி அவர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்தை ஆதரித்தாலும் பார்ப்பனர்கள் திரு.சாமியையும் சூத்திரர்கள் என்பவர்களின் கணக்கில்தான் சேர்த்து வாழ்க்கையில் கோவில், ஓட்டல் முதலியவைகளில் ‘சூத்திரன்’ மரியாதைதான் கொடுத்து வருகின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. அன்றியும் திரு.சாமி வெங்கிடாசலம் அவர்களின் வருணம் என்பதான வைசிய வருணத்திற்கு வருணாசிரம தர்ம வியாக்கியானமொன்றில் ‘பிராமண ஆணும், க்ஷத்திரிய பெண்ணும் சேர்ந்து பிறந்த பிள்ளை வைசியனாகின்றான்’ என்று எழுதி இருப்பது தெரியுமா? தெரியாதா? அல்லது தெரிந்தே வருணாசிரமத்தை ஆதரிக்கின்றாரா? என்பது விளங்கவில்லை.
நிற்க, மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி முதலிய பார்ப்பன மகாநாடுகளில் அதன் தலைவர்கள் பேசியிருப்பதை பார்த்த பிறகாவது திரு.சாமிவெங்கிடாசலம் செட்டியாரவர்களுக்கு ஏதாவது மாறுதல் உண்டா குமோ அல்லது பழைய எண்ணமேதான் இருக்குமோ என்பது குறிப்பிட முடியாதது. மேற்படி மகாநாட்டுத் தலைவர்கள் பேசியிருப்பதின் சாரமாவது:-
பிராமண மகாநாட்டு வரவேற்பு அக்ராசனர் சொற்பொழிவுச் சாரம்
மோட்சத்திற்கு ஆதாரம் வேதம், வேதத்தை அப்யசிக்கின்றவர்கள் பிராமணர்கள்; கிரேக்கர், பார்சி, டச்சு, போர்ச்சுகீசு, பிரஞ்சு, மகமதியர் ஆகிய நம் மத, துவேஷ, ராஜாக்கள் காலத்திலும் இம்மாதிரி ஒரு மகாநாடு கூட்ட வேண்டிய அவசியமல்லாமல் நமது மதம் நிலைநின்றிருக்கின்றது.
நாம் தினமும் செய்துவரும் பிரார்த்தனை பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் nக்ஷமம் உண்டாக வேண்டும்; ராஜா (இதற்கேற்றபடி) நீதியாய் நடக்கவேண்டும் என்பவைகளாகும். இம்மாதிரி பிரார்த்தனை எந்த மதத்திலாவது உண்டா? இப்பொழுது நாடார், சுயமரியாதைக்காரர், ஸ்திரீகள், விதவைகள், யுவர், யுவதிகள் முதலியவர்கள் சங்கங்கள் விருத்தியடைந்து வருகின்றது. நமது அப்பிராமணர்கள் (சூத்திரர்கள்) நம்மீது துவேஷம் கொள்ளுகின்றார்கள். இவைகள் எல்லாம் நாம் ஈடேற விடாமல் செய்யத்தக்கதல்லவா?
சூத்திரர்கள் அவர்களுடைய கடமைகளை கடந்ததால் பிராமணர்கள் சுய நலக்காரர்களாக வேண்டியதாயிற்று.
மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் சட்டசபைகள் பிரவேசிக்கக்கூடாது (அவர்கள் யார்).
சதிகாப்பு, விதவாவிவாகம், ஜாதி பேதவிலக்கு தர்மசொத்து ஆகியவைகளைப் பற்றி சட்டம் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
இன்னும் ருதுமதி, கல்யாண ரத்து, பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவைகளுக்கும் சட்டம் வேண்டுமாம்.
தேவதாசிகளைத் தூஷிக்கவும், பாலியவிவாகத்தை தடுக்கவும் வந்துவிட்டார்கள். இவைகள் எல்லாம் இந்து மதத்தையே வேரறுக்கச் செய்வதே தவிர இதனால் ஒரு பலனும் விளையாது.
(இவைகள் இந்து மதக் கொள்கையானால் இந்துமதமிருக்க வேண்டுமா?)
பெண்களை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி கற்பித்தல் கூடாது.
அப்படிச் செய்வதால் அவர்களும் ஆண்களாகி விடுவார்கள். பெண்களுக்கு குடும்ப காரியம், கற்பு, புத்திராபிவிர்த்தி செய்வதற்கும் ராமாயண பாரதம் கற்பித்தல் ஆகியவைகளே போதுமானது.
சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பதை பற்றியும் சூத்திரன், பஞ்சமன் என்று அழைப்பதை பற்றியும் ஆட்சேபித்து சிலர் கிளர்ச்சி செய்துவருகின்றார்கள்.
சூத்திரன் என்ற சொல் மிகப் பரிசுத்தமானது.
யாக எக்யாதிகளுக்கு சூத்திரன் அவசியமானவனாகிறான்.
பஞ்சமர், தீண்டாதார் என்று வித்தியாசப்படுத்திக் கொண்டு அப்படி ஒரு ஜாதி இருப்பதாய் வித்தியாசம் கற்பிப்பது கொடிதான காரியமாகும்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஆகியவர்கள் அவரவர்கள் கடமையிலிருந்து தவறும் போதுதான் பஞ்சமர்களாகின்றார்கள்.
அப்படி தன் வருண தர்மத்திலிருந்து தவறினவன் மறுபடியும் அந்த வருணத்தை அடைய முடியாது.
தினமும் ஸ்நானம் செய்யாததினாலேயே தீண்டாதவர்களாகின்றார் கள். தீண்டாமையை விலக்க தீண்டாதவர்களே சம்மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் தீண்டாதவர்களிடம் உயர்குணமிருக்கிறது. உள்ளது போதும் என்று திருப்தியடைகின்றார்கள்.
தலைவர் உபன்யாசத்தின் சாரம்
“துவேஷமும் தெய்வ தூஷணையும் ஏற்பட்டு விட்டதால் பிராமண சபை கூட்டவேண்டியதாயிற்று. ஒவ்வொரு வர்ணத்தாரும் அவரவர்கள் தர்மப்படி நடந்தால் எல்லோரும் நன்மையடையலாம்.
சூத்திரர்கள் வேதம் படிக்காததால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. அவர்களுக்குப் புராணங்கள் இருக்கின்றது. சூத்திரன் என்ற பதம் நல்ல பதம்.
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தர்மம் இருக்கின்றன. அதுபோல் இங்கும் அவனவன் தர்மப்படி நடக்கவேண்டும்.
பிராமணர்களை அப்பிராமணர்கள் (சூத்திரர்கள்) ஏன் தூஷிக்க வேண்டும். சூத்திரர்களில் நாயக்கர், வேளாளர் ஆகியவர்கள் எவ்வளவோ ஆச்சாரமாயிருக்கின்றார்கள்.
சூர்ப்பனகை எதிரில் வந்ததால் சீதை அக்கினிபிரவேசமாக நேர்ந்தது. ஸ்திரீகளை பத்திரமாக காப்பாற்ற வேண்டியது ஆண்கள் கடமை. ஸ்தீரீகள் உத்தியோகத்திற்கு லாயக்கில்லை. மேலதிகாரிகளுக்கு என்னவெல்லாம் செய்ய நேரிடுமோ?”
எனவே பிராமணன்தான் இந்து மதத்திற்கு ஆதாரமானதென்றும் வேதம் படிக்கலாம் என்பதும். தாங்கள் தான் பிராமணர் என்பதும், இந்துமத தத்துவப்படி மற்றவர்களை சூத்திரர்கள் என்பதும், வெகுகாலமாக அநேக இந்து மகமதிய ராஜாக்கள் காலத்தில் கூட தாங்கள் அவர்களை ஏமாற்றி தங்களது ஆதிக்கங்களை நிலைநிறுத்தி வந்திருப்பதும் பிராமணனும் அவனதும் ஆதாரத்திற்கு மாடுகளும் nக்ஷமமாக இருந்தால்போதும்; மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை என்பதும், இதை நிலை நிறுத்தத்தக்கவன்தான் அரசனாக இருக்க வேண்டுமென்பதும், நாடார் முதலிய சமூக மகாநாடுகளும் சுயமரியாதை மகாநாடுகளும் தங்கள் ஆதிக் கத்திற்கு விரோதமானவை என்பதாகக் கருதி இருக்கின்றார்கள் என்பதும், சூத்திரன் பிராமணனுக்கு அடிமையாயிருக்க வேண்டியதும், சூத்திரப் பெண்கள் அவர்களுக்கு தாசிகளாயிருக்க வேண்டியதுமான சூத்திரத் தர்மம் தவறினதாலேயே பிராமணர்கள் சுயநலக்காரர்களாக இருக்கின்றார் என்று சொல்லுவதன் மூலம் பார்ப்பனர் தங்கள் சுயநலத்திற்கு சமாதானம் சொல்லுவதும், சமத்துவம் இருக்கக் கூடாது, தர்ம சொத்துக்களின் கணக்கு கேட்கக் கூடாது, குழந்தைப் பெண்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும், பெண்களுக்கு சொத்துக்கள் இருக்கக் கூடாது, படிப்புக்கூடாது, சுதந்திரம் கூடாது, தாசிகள் இருக்க வேண்டும், விதவைகள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது போன்ற கொள்கைகளே இந்துமதம் என்பதும் மேல் கண்ட கொள்கைகளில் எதைத் திருத்துவதானாலும் இந்துமதத்தை அழித்ததாகுமாதலால் சர்க்கார் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதும், பெண்கள் வீட்டு வேலை செய்வதும் பிள்ளை பெறுவதும் தவிர வேறு உரிமைக்கு லாயக்கில்லை என்பதும், கற்பு பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்கள் விஷயத்தில் கவலை இல்லை என்பதும் ராமாயணம் பாரதம் ஆகியவைகளே தர்மத்திற்கு ஆதாரமானதென்பதும், சூத்திரன், பஞ்சமன், என்று அழைப்பது மிகவும் சரியானதென்றும், அவை அவர்களுக்கு மிகவும் மேன்மையானதென்பதும் சூத்திரன் என்ற சொல் மிகவும் பரிசுத்தமான தென்பதும், பிராமணர்களின் யாகத்திற்கு பயன்படவே சூத்திரன் இருக் கின்றான் என்பதும் சூத்திரன் அவனுக்குள்ள கடமையை செய்யாததால் பஞ்சமனாக வேண்டியதாகின்றதென்பதும் தினமும் ஸ்நானம் செய்யாததால் தீண்டாதவர்களானார்கள் என்பதும், தீண்டாதவர்கள் அப்படியே இருக்க விரும்புவதுதான் உயர்குணமென்பதும், சூத்திரர்கள் புராணங்கள் படித்து அதன்படி நடந்தால் அவர்கள் வேதம் படித்ததற்கு சமான மென்பதும், வேளாளர்கள் நாயக்கர் முதலியவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்பதும் ஆகிய விஷயங்கள் வியக்தமாகவும் நன்றாகவும் பொருள்படும்படி பேசி இருக்கின்றார்கள். இதற்கேற்ற தீர்மானங்களும் செய்திருக்கிறார்கள்.
சைவமத சைவப்பெரியார் மகாநாடு தீண்டாதவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுப்பதன் மூலம் தீண்டாமையை நிலைநிறுத்தப் பாடு படுகின்றது, வருணாசிரம மகாநாடும் பிராமண மகாநாடும். ஒரே அடியாய் இருக்கின்றபடியே இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டன. இதிலிருந்து வாசகர்களை நாம் ஒன்று கேட்கின்றோம்.
அதாவது “மேற்கண்ட கொள்கைகளையுடைய இந்து மதமும் அதற்கு ஏற்ற கடவுள்களும் சைவ மதமும் அதற்கு ஏற்ற சிவனும் இருக்க வேண்டுமா? அல்லது அவற்றைக் குழித்தோண்டிப் புதைக்க வேண்டுமா?” என்பதேயாகும். இதுவரை எந்த ஆஸ்தீக சிகாமணியும் தேசீய வீரர்களும் மேற்கண்ட இந்துமத ஆதாரத்தையும் சைவ சமய ஆதாரத்தையும் மறுத்துப் பேசவோ வேறு ஆதாரம் காட்டவோ சிறிதாவது முற்பட்டவரல்ல; ஆனால் இந்துமதத்தையும் வேதத்தையும் ஆகமத்தையும் தர்மத்தையும் புராணங் களையும் காப்பாற்ற மாத்திரம் வரிந்து கட்டி கொண்டு முன்வந்திருக் கின்றார்கள்.
சிலர் தங்களை சூத்திரன் என்று சொல்லிக் கொள்ளப்போவதாகவும் தாங்கள் உண்மையிலேயே சூத்திரர்கள் தான் என்றும் அதிலும் சற்சூத்திரர் கள் என்றும் சொல்லி ஆனந்தபடுகிறார்களாம். பார்ப்பன செல்வாக்கும் அவர்களது பணமும் நமது மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யதக்க வலுவுடையதாக இருக்கின்றது என்பதை நாம் சுலபத்தில் மறுக்க முடியாத வர்களாயிருக்கின்றோம். பார்ப்பனரல்லாத மக்கள் பலருக்கு சுயமரியாதை மகாநாடு விஷயமாய் இருக்கும் ஆத்திரத்தில், அதிருப்தியில் ஒரு பங்குகூட இந்த வருணாசிரம மகாநாட்டிலும் பிராமண மகாநாட்டிலும் ஏற்படாதிருப் பதற்கு நமக்கு காரணமே விளங்கவில்லை. எப்படியானபோதிலும் இந்த மகாநாடுகளும் எதிர்ப்பிரசாரங்களும் நமது கொள்கைகளையும் உத்தேசங் களையும் முயற்சிகளையும் உறுதிப்படுத்துகின்றதே தவிர சற்றாவது தளர்ச்சி யாக்கவில்லை என்பதையும் நமது வாலிபர்கள் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட மதங்களையும் சாமிகளையும் ஒழிக்கத் தயாராயிருக்க வேண்டியது தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 14.04.1929