கடவுளும் மதமும் “காப்பாற்றப்பட்டால்” சுயராஜ்யம் வந்துவிடுமா?
சென்னை சட்டசபை இவ்வருஷக் கோடியில் அனேகமாய் கலைக்கப் பட்டுவிடும் என்கின்ற விஷயம் வெளியானதும் பார்ப்பனர்கள் வழக்கம்போல் இப்போதிருந்தே தேர்தல் நாடகம் நடிக்கத் தீர்மானித்து, திருவாளர்கள் எஸ். சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி முதலிய அவரு டைய சிஷ்யர்களும் ஒருபுறமும் ஜனாப்கள் பஷீர் அகமது, அமீத்கான், ஷாபிமகமது ஆகியவர்கள் ஒருபுறமும் திருவாளர்கள் குழந்தை, ஜயவேலு, அண்ணாமலை, பாவலர், கல்யாணசுந்தரமுதலியார் ஆகியவர்கள் ஒரு புறமும் கிளம்பி இப்பொழுதிருந்தே ஊர் ஊராய்ச் சுற்றி தெருக்கூத்தாடிகள் போல தேர்தல் நாடகம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தார் சென்ற தேர்தல்கள் வரையில் பாமர மக்களிடம் தாங்கள் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதாயும், பார்ப்பனரல்லாதார் கட்சியாய ஜஸ்டிஸ்கட்சியார் சுயராஜ்ஜியத்துக்கு விரோதமா யிருப்பதாகவும், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுக்காமல் காங்கிரஸ்காரர்களாகிய தங்களுக்கே ஓட்டுக் கொடுத்து தங்களையே சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லிவந்தார்கள். ஆனால் சுயராஜ்ஜிய புரட்டுகள் முழுவதும் இப்போது பொதுஜனங்களுக்கு வெட்ட வெளிச்சம்போல் வெளிப்பட்டுப் போனவுடன் இப்போது பரராஜ்ஜியம் அதாவது மோக்ஷ ராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் அதற்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் விரோதமாயிருந்து கொண்டு சாமியையும் மதத்தையும் வைகின்றார்கள் என்றும் ஆதலால் தாங்கள் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற சட்டசபைக்கு போக வேண்டியிருப் பதாகவும், அந்தப்படி தங்களை சட்டசபைக்கு அனுப்பினால்தான் கடவுளும், மதமும் காக்கப்பட்டு மக்களுக்கு பரராஜ்ஜியமாகிய மோக்ஷ ராஜ்ஜியம் கிடைக்குமென்றும் பேசி ஓட்டுக்கேட்டு வருகின்றார்கள். இந்த மாதிரி ஓட்டு வேட்டையை பார்ப்பனர்கள், தங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சில கூலிகளை மாத்திரம் ஏவிவிட்டு அவர்கள் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுவதுபோல் வேஷம் போட்டு ஜஸ்டிஸ் கட்சியை வைது கொண்டே இருக்கும்படி செய்து, அதனால் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்கும்படி செய்து பார்த்தார்கள். ஆனால் நாம் ஆரம்பத்திலேயே இதன் இரகசியத்தை தெரிந்து “இது ஐயங்கார் கூலிப்பிரசாரமே தவிர இதில் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொண்ட பிரசாரம் ஒன்றும் இல்லை, ஐயங்காரைக் காப்பாற்ற அவர்களது கூலிகள் சென்ற தேர்தலில் சுயராஜ்ஜியப் பிரசாரம் செய்தது போல் இந்த தேர்தலுக்கு மோக்ஷ ராஜ்ஜியப் பிரசாரம் செய்கின்றார்கள்” என்று சொன்னோம். இதற்கு அக்கூலிகள் தங்களது மோக்ஷ ராஜ்ஜியப் பிரசாரத்திற்கும் ஐயங்காருக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். ஆனால் சமீபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் வாயாலேயே இதன் உண்மை தாராளமாய் வெளியாய்விட்டது.
அதாவது, சமீபத்தில் திரு.எஸ்.சீனிவாசய்யங்காரும் அவர்களது வால்களும் கூலிகளும் கடலூர் கும்பகோணம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்கு நடத்திய தேர்தல் கூத்துகளில் ராமசாமி நாயக்கர் கடவுளையும் மதத்தையும் கோவில்களையும் குற்றம் சொல்லுகின்றார். ஜஸ்டிஸ் கட்சியார்கள் அவரை ஆதரிக்கின்றார்கள். ஆதலால் ஜஸ்டிஸ் கக்ஷியாரை சட்டசபைக்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லி இருக்கின்றார். எனவே ஐயங்கார் சங்கமும் ‘ஆஸ்தீக’ சங்கமும் ஒரே உட்கருத்தைக் கொண்டு தான் வேலை செய்கின்றன என்பதும் ஐயங்கார்கள் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்க வேண்டி கடவுளையும் மதத்தையும் காப்பாற்றமுற்பட்டால் அவர்களது கூலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு கூலி கிடைக்க கடவுளையும், மதத்தையும் காப்பாற்றப் புறப்பட்டிருப்பதாய்ச் சொல்லிக் கொள்ள வேண்டியவர் களாயிருக்கின்றார்கள் என்பதும் விளங்கவில்லையா? எனவே, இந்தத் தேர்தல் நாடகத்திற்குப் பயந்து ஜஸ்டிஸ் கக்ஷி பிரமுகர்களில் சிலர் நம்மிடம் வந்து சுயமரியாதை இயக்கத் தத்துவத்தை ஐயங்கார் கூலிகள் திரித்துக் கூறுவதன் மூலம் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து சற்று அதை நிறுத்திவைக்க வேண்டுமென்று தெரிவித்தார்கள். நாம் அதற்கு சொன்ன பதில் என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டு கிடைப்பதே நமது லட்சியமல்ல வென்றும் நமது கொள்கைகள் நிலை பெற்று அவைகள் அமுலில் வரவேண்டியதே நமது கவலை என்றும், இக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் முறையிலும் நடத்தி வைக்கச் சம்மதிக்கும் முறையிலும் தான் ஜஸ்டிஸ்கட்சிக்கு ஓட்டுக்கிடைக்க நாம் ஆசைப்படுவோமே ஒழிய பெயரளவில் எக்கட்சியையும் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை என்றும், சுயமரியாதை இயக்கத் தத்துவத்தைப் பற்றி பார்ப்பனர்கள் கூலிகளைப் பிடித்து திரித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்து ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டில்லாமல் செய்து விடுவார்களே என்று உண்மையாகவே உங்களுக்கு பயமிருக்குமானால், அதே கூலிகளைப் பிடித்து மேலால் நாலோ, ஐந்தோ சேர்த்துக் கொடுத்து அவர்களைக் கொண்டே ஐயங்கார்களின் யோக்கியதையை வெளியாக்கும் உண்மைப் பிரசாரம் செய்விக்க நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது? என்றும் நீங்களும் வெளி இடங்களுக்குச் சென்று ஆங்காங்கு ஏன் உண்மையை எடுத்துக் கூறக்கூடாது என்றும்தான் நாம் மறு மொழி சொன்னோம். அதன் மீது அவர்களும் பிரசாரத்திற்குக் கிளம்புவதாகத் தெரிகின்றது. எனவே, நம்மைப் பொறுத்தவரை நம்மை எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குற்றம் கூறிப் பிரசாரம் செய்வதைப் பற்றி நமக்கு பயமில்லை. அன்றியும் நமக்கு ஓட்டுக் கிடைக்காமல் போவதால் பெரிய நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. நம்மை எவ்வளவு பெரிய நாஸ்திகர் என்று அழைத்தாலும் கவலை இல்லை. ஒரு காரியத்தில் இறங்கினால் அதன் எதிரிகளால் சொல்லப்படும் பழிகளை ஏற்கவும், அவைகளுக்கு சமாதானம் சொல்லி சமாளிக்கவும், அதற்கு உயிர் கொடுக்கவும் சக்தி இல்லாதவர்கள் பெரிய காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுவது பைத்தியக் காரத்தனமாகும். ஆதலால் எவ்வளவு பழிப்புகள் வந்தாலும் சமாதானம் சொல்ல அவைகளை மனதார வரவேற்கின்றோம்.
ஏனெனில் நமது நாட்டு நிலைமைக்கு நாம் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியும் சிறப்பாக பார்ப்பனரல்லாதார் இருந்துவரும் இழிநிலைக்கு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மத தத்துவங்களுமே காரணம் என்பதை நாம் ஒருகாலமும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதையும் அவ் விரண்டையும் தலைகீழாக மாற்றி அவற்றின் உண்மையை வெளியாக்கு வதையே நமது முக்கிய கடமையாய்க் கொண்டிருக்கின்றோம் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகின்றோம். இதனால் நமக்கு எவ்வளவு பெரிய நாஸ்திகப்பட்டம் வருவதானாலும் எவ்வளவு காலம் மீளாத ‘நரகம்’ ஏற்படுவதானாலும் அன்றியும் அதனால் அக்காலத்தில் உயிர்போவ தானாலும் ஒரு சிறிதும் கவலை இல்லை. மற்ற நாட்டினர்களின் கடவுள் உணர்ச்சியைவிட நமது கடவுள் உணர்ச்சியும் பக்தியும் பூசையும் நம்மை ஓட்டாண்டிகளாக்கி அறிவிலிகளாக்கி நம்மை நமது நாட்டை விட்டுத் துரத்திக் கொண்டு வருகின்றது. அதுபோலவே மற்ற நாட்டினர்கள் மதத்தை விட நமது மதம் நம்மை பிரித்துவைத்து இழிமக்களாக்கி அன்னிய ஆட்சிக்கு உட்படுத்தி மனிதத்தன்மை இல்லாமல் வாழச் செய்கின்றது. இவை நேற்று இன்று என்றில்லாமல் ஆராய்ச்சிக்கு எட்டும் சரித்திரகாலம் தொட்டு இப்படியே இருப்பதாய்க் காணப்படுகின்றது. இதற்கு, அர்த்தமில்லாமல் வெள்ளைக்காரர்கள் மீது பழி போடுவதிலும் சுயராஜ்ஜிய சாக்கு சொல்லு வதிலும் பயன் என்ன? என்று தான் கேட்கின்றோம். ஏனெனில் சுயராஜ்ஜிய மும் அதற்கு மேற்பட்ட ராம ராஜ்ஜியம் கிருஷ்ண ராஜ்ஜியம் முதலிய ராஜ்ஜியங்களும் இருந்த காலத்தில் இருந்த நிலையைவிட வெள்ளைக்காரன் ராஜ்ஜிய காலம் எப்படி இந்நிலைக்கு அதிகமான பொறுப்புடையது என்பதுதான்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தெருவில் நடக்கவிடாதது ஆப்பிரிக்கர்களுடைய அகம்பாவமாக இருக்கலாம். அமெரிக்காவில் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை அவமரியாதை செய்தது அமெரிக்கர் களுடைய ஆணவமாக இருக்கலாம். திரு.காந்தியை தண்டித்தது இங்கிலீஷ்காரருடைய இறுமாப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியனை இந்தியாவில் தெருவில் நடக்க விடாததும் இந்துக்கடவுள் கோவிலுக்குள் செல்ல இந்துவை விடாததும் யாருடைய அகம்பாவம், ஆணவம், இறுமாப்பு என்று கேட்கின்றோம்.
திருவாளர்கள், காந்தியும் லஜபதியும் கோவிலுக்குள் சென்று அவர்களது கடவுளை வணங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய கொடுமையையும் அவமானத்தையும் இழிவையும் விடவா திரு தாகூரை அமெரிக்கர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று யோசித்தால் இந்தியர்கள் அயோக்கியர்களா முட்டாள்களா என்பதும், அமெரிக்கர்கள் அயோக்கியர்களா முட்டாள்களா என்பதும் இந்திய அரசர்கள் ஆட்சி ஐரோப்பிய அரசர்கள் ஆட்சியைவிட மேலானதாயிருக்குமா என்பதும் விளங்காமல் போகாது. எந்த நாட்டிலாவது குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையில்லாதவனும் தெருவில் நடக்க உரிமையில்லாதவனும் தங்களது உரிமையை மறுக்கின்றவர்களுடன் சேர்ந்து சுயராஜ்யம் அடைய முயற்சிப் பார்களா என்று யோசித்துப் பார்த்தால் சுயராஜ்ஜியத்திற்கு யார் முட்டுக் கட்டை போடுகின்றார்கள் என்கின்ற உண்மை ஒரு மூடனுக்கும் விளங்காமல் போகாது. கடவுளையும் மதத்தையும் கோவில்களையும் காப்பாற்றுகின்றோம் என்று வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து பார்ப்பனக் கட்சியை சாதிக்கப் போவதாக வெளிவந்திருக்கும் ஆஸ்திக கனவான்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் கோவில்களின் பேராலும் நடக்கும் கொடுமைகளை ஒழிப்பதற்கு ஏதாவது செய்கின்றார்களா, நினைக் கின்றார்களா, செய்தார்களா, நினைத்தார்களா என்றுதான் கேட்கின்றோம். எனவே பார்ப்பனர்கள் தேர்தலுக்கு ஏற்படுத்திக் கொண்ட நாடகத்தில் வரும் வேஷங்களைக் கவனிக்காமல் அந்த வேஷக்காரர்கள் யார்? அவர்களின் அறிவு, ஒழுக்கம், லக்ஷியம், பிழைப்பு, யோக்கியதை ஆகியவைகள் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால் கண்டிப்பாய் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கூற்றின் உண்மை விளங்காமல் போகாது.
குடி அரசு – தலையங்கம் – 28.04.1929