“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி
நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது.
அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்ட தால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத் திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலி யார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர் களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரி யையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப் படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.
எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற் பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
குடி அரசு – கட்டுரை – 07.04.1929