தொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும்
இயற்கை அமைப்பிலேயே கைத்தொழில்களையும், தொழிலாளர்
களையுமே ஜீவநாடியாகவும் அணியாகவும் கொண்டு நிலவிய நம் நாடானது எந்தக் காலத்தில் ஆரியர்களால் மேல்கண்ட இரண்டுமற்ற அன்னிய நாட்டாருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு அன்னிய நாட்டு நன்மைக்காக ஆளப்படும் அன்னிய ஆதிக்கத்திற்கு – அடிமை ஆக்கப்பட்டதோ அன்று முதலே நம்நாட்டுத் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அருகிப் போக வழி ஏற்பட்டதல்லாமல் தொழிலாளர்களும் தரித்திரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக நேர்ந்து வருடா வருடம் லக்ஷக்கணக்கான கைத்தொழிலாளர்கள் தொழிலில்லாமல் வேற்று நாடுகளுக்கு மிருகங்களாக ஏற்றுமதி செய்யப் பட்டும் வருகின்றார்கள்.
எஞ்சியுள்ள தொழில் மக்கள் உள் நாட்டு ஒரு சிறு கூட்டத்தினராகிய பேராசை கொண்ட முதலாளிகளிடமும், நம்மிடமும் நம் நாட்டிடமும் ஒரு சிறிதும் அன்பும் இரக்கமும் பற்றுதலும் அற்ற வெளிநாட்டு முதலாளி
களிடமும் கொடுமைப்பட்டு வருகின்றார்கள்.
இதன்பலனேதான், நம்நாட்டில் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும், கதவடைப்பும், சத்தியாக்கிரகமும் பெண்டு பிள்ளை குட்டி களுடன் பட்டினி கிடப்பதும் அடிபடுதலும், உதைபடுதலும், துப்பாக் கியால் சுடுபடுதலும், ஈட்டியால் குத்தப்படுதலும், சிறையில் அடைக்கப்படு தலும் ஆன காரியங்கள் நடந்தவண்ணமாகவே இருக்கின்றன. நாம் நன்றாய் அறிந்த இந்த சுமார் பத்து வருஷம் தொழிலாளர் உலகத்தில் நடந்ததான கொடுமைகள் நினைத்தால் வயிறு பற்றி எரிகின்றது. இதைப்பற்றி ஏன் என்றுகூட கேட்க பொதுமக்களிடை எவ்வித இயக்கமும் இல்லை. யாதொரு உண்மைத் தலைவருமில்லை. தொழிலாளர்கள் பெயரைச் சொல்லிக் கொண் டும் அவர்களை காட்டிக் கொடுத்தும் அவர்களது உழைப்பால் பிழைக்கும் தேசீயத் தலைவர்களுக்கும் தேசீய இயக்கங்களுக்கும் மாத்திரம் நம் நாட்டில் குறைவில்லை.
நம்நாட்டு ஏழைக் கைத்தொழில் மக்களின் கூலிகளின் வாயில் மண்ணைப்போட இதுவரையில் எத்தனைவித இயந்திரப் பிசாசுகள் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்திருக்கின்றன என்பதை அறியாதார் யார்? இதைப்பற்றி யாராவது கவலை கொண்டு அதற்காக ஏதாவது பரிகாரம் செய்திருக்கிறார்களா? அர்த்தமற்ற சைமன் கமீஷன் பகீஷ்காரத்திற்காக கூச்சல் போட மாத்திரம் “தேசீய” இயக்கங்களுக்கு குறைவில்லை. தேசீய தலைவர்களுக்கும் குறைவில்லை. அதற்கு செலவு செய்ய நம் மூட மக்களின் பணமும் இருக்கின்றது. அன்றியும் ஏதாவது ஒரு சிறு கிராமத்தில் ஒரு ஏக்கராவுக்கு இரண்டணா நிலவரி உயர்ந்து விட்டால் உடனே வரிகொடா இயக்கம் ஆரம்பித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து பெரியதனம் செய்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் பல இயக்கங்கள் இருக் கின்றன; அதற்கேற்ற தலைவர்களுமிருக்கின்றார்கள். சைமன் கமீஷனை பகிஷ்காரம் செய்வதாக கூச்சல் போடுவதால் நாட்டிற்கு என்ன விதமான நன்மை விளையக்கூடும் என்பதை யாராவது உணர்கிறார்களா? சர்க்காரே பஹிஷ்காரக் கூச்சலுக்கு பயந்து ஒரு சமயம் இணங்கி வந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் நம் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரணமாக இந்தியாவுக்கு சுயராஜ்யத் திட்டம் ஏற்படுத்தும் யோக் கியதை, உரிமை, அதிகாரம் ஆகிய இவைகள் ஒரு சிறிதும் வெள்ளைக் காரனுக்கோ பார்லிமெண்டுக்கோ கிடையாது என்பதை பிரிட்டிஷ் சர்க்கா ராரே ஒப்புக்கொண்டு அவற்றை இந்தியர்கள் தலையிலேயே போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது இந்தியர்களின் சுயராஜ்யத் திட்டம் என்பது என்ன என்னவாக இருக்க முடியும், யார் யாரால் கோலப்படுமென்பதை சற்று யோசிக்க வேண்டும். திருவாளர்கள் சீனிவாசய் யங்கார், இரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, எம்.கே. ஆச்சாரியார், பெசன்டம்மை, விஜயராகவாச்சாரியார், மாளவியா ஆகியவர்கள் இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனித்தனி திட்டமா? அல்லது வர்ணாசிரம சபையார் என்பவர்களும் பிராமண சபையார் என்பவர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களா? அல்லது ஆதிதிராவிடர்கள் ஏற்படுத்தும் திட்டமா? அல்லது இந்து மகாசபையார் போடும் திட்டமா? அல்லது மகமதிய மகாசபையார்கள் ஏற்படுத்தும் திட்டமா? அல்லது கிருஸ்தவ சங்கத்தார்கள் ஏற்படுத்தும் திட்டமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் திட்டமா? அல்லது அதற்குள் முளைத்த காங்கிரஸ், சுயராஜ்யக்கக்ஷிக்காரர் திட்டமா? அல்லது காங்கிரசு சுயேச்சைக்கக்ஷியார் திட்டமா? அல்லது திருவாளர்கள் சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், சாப்ரு ஆகிய தனிப் பார்ப்பனர்கள் தலைமை கொண்ட மிதவாதிகள் சங்கத்தார் திட்டமா? அல்லது திரு. ஜயக்கர், திரு. ஜின்னா போன்ற வக்கீல் கொள்ளைக்காரர்கள் தனித்தனியாக ஏற்படுத் தும் திட்டமா? அல்லது ‘ஜஸ்டிஸ்’ கக்ஷியார் என்பவர்கள் திட்டமா? அல்லது அதற்குள் முளைத்த ஒழுங்கு முறைக்காரர் திட்டமா? அல்லது சர்வகக்ஷி மகாநாடு என்பதாக ஒரு மகாநாட்டைக் கூட்டி அதில் எல்லாக் கட்சி யாருக் கும் எல்லாக் கூட்டத்தாருக்கும் இடம் இருப்பதாக வேஷம் போட்டு தங்கள் கூட்டத்தாரைத் தவிர வேறு யாரும் வருவதற்கு இடமில்லாமல் சூழ்ச்சி செய்து, அதற்கு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவத் தன்மை இருக்கின்றது என்பதுகூட அம்மகாநாடு கூட்டுபவர்களுக்கும் அம்மகாநாட் டில் கலந்து கொள்ளுகின்றவர்களுக்கும் கூட தெரியாமல் ஒரு சிலர் ஒன்று கூடி, அதிலும் ஒரு முடிவுக்கு வராமல் தங்கள் தங்கள் சுய நன்மைக்கோ அல்லது ஒரு சில வகுப்பு நன்மைக்கோ ஏற்ற விஷயங்களையே பிரதானமாகக் கொண்டு விடியவிடியப் பேசி, கடைசியில் ஒரு முடிவுக்கு வராமல் அவரவர்கள் வந்தவழி திரும்புகின்றதான அந்தத்திட்டமா? அல்லது திருவாளர்கள் அண்ணாமலை, குப்புசாமி, அமீத்கான், ஆதிநாராயண செட்டியார், குழந்தை, முத்துரங்கம், வரதராஜலு, ரத்தினசபாபதி, மாரிமுத்து உன்னியார் போன் றார்கள் மூலை மூலைக்கு ஜஸ்டிஸ் கட்சியையும் மற்றும் பார்ப்பனரல்லாதார் களையும் வைதுக் கொண்டு பார்ப்பனர்கள் மீதில் கவிபாடிக் கொண்டு பார்ப்பனர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டு தலையாட்டி வரும் திட்டமா?
அல்லது சுத்தி இயக்கம், சங்கதன் இயக்கம் ஆகிய இயக்கத்தார்கள் தனித்தனியே போடும் திட்டமா? இதுபோன்று மற்றுமுள்ள சங்கங்களின் இயக்கங்களின் திட்டங்களில் எந்த திட்டம் இந்தியாவுக்காக இந்தியப் பிரதிநிதிகளால் போடப்பட்டு இந்திய மக்கள் பெரும்பகுதியோரால் ஒப்புக்
கொள்ளப்பட்ட திட்டம் என்று ஒன்றை நிர்ணயிக்கக் கூடும் என்பதால் இந்த பஹிஷ்கார ‘வீரர்கள்’ நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
இதுபோலவே தஞ்சையிலோ, பர்டோலியிலோ ஒரு கிராமத்தில் போடப்பட்ட அதிக வரி என்பதைக் குறித்து வரிகொடாஇயக்கத்தை நடத்தி அந்த கிராமத்தார் வெற்றி பெற்று வரிகளை குறைத்துக் கொண்டார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் மற்றபடி நாட்டிலுள்ள பூமிகளுக்கெல்லாம் போடப்பட்ட அல்லது போடப்போகின்ற அதிக வரி என்பது இல்லாமல் போய்விடுமா என்று கேட்கின்றோம்.
பர்டோலி விஷயம் முடிவு பெற்றால் பர்டோலிக்கு வெற்றி என்று சொல்லிக் கொள்ளலாம். பக்கத்து ஊர்க்காரருக்கு என்ன லாபம். உதாரண மாக வைக்கத்தில் நடைப்பாத்திய வெற்றி ஏற்பட்டது என்று நாம் சொல்லிக் கொள்ள இடம் ஏற்பட்டது என்பதாகவும், அதனால் சிலருக்கு விளம்பரமும், பெருமையும், கீர்த்தியும் ஏற்பட்டதாகவும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வெற்றி வைக்கத்திற்கு அடுத்த ஆலப்பிழை, அம்பலப்பிழை என்பதான பக்கத்து கிராமங்களுக்குக்கூட பயன்படாமல் வழக்கம்போல் உள்ள கொடு மைகள் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
இதுபோல் இரண்டு வருஷத்திற்கு முன் சட்டசபைகளிலும் பெரிய வெளியேற்றமும் நடந்தது. அதை ஒரு பெரிய தியாகம் என்றும் கொண் டாடப்பட்டது. முடிவில் அதனால் ஏற்பட்ட பலன் என்ன? எனவே இம் மாதிரியான பகிஷ்காரத்தாலும் சத்தியாக்கிரகத்தாலும் வெளியேற்றத்தாலும் வரிகொடா இயக்கத்தாலும், மக்களுக்கோ நாட்டிற்கோ ஏற்படும் வெற்றிகள் எவ்வளவு பெரியதாயிருந்தாலும் அதனால் ஏற்படும் பலன் எவ்வளவு, நாட்டிற்கும், நாட்டின் ஏழை மக்களுக்கும் எவ்வளவு பயன்படக்கூடியது என்பதைத்தான் இங்கு கவனிப்பதற்காக இதை எழுதினோம்.
வங்காளத்தில் நிரபராதிகளான தேசபக்தர்களை யாதொரு காரணமும் சொல்லாமல் சிறையிலடைத்து வைத்திருப்பதற்காக அத்தேச பக்தர்களின் தேச பக்தியை பாராட்டியாவது அல்லது அவர்களது கஷ்டத்தைப் பற்றி
யாவது இதுவரை எந்த தேசீயமோ தேசபக்தர்களோ காங்கிரசோ யாராவது கவலை எடுத்து அதற்காக எந்த பகிஷ்காரமோ சத்தியாக்கிரகமோ வரி மறுப்போ துவக்கினார்களா என்று கேட்கின்றோம்.
சைமன் கமிஷன் நியமனத்தாலும், பர்டோலி மிராசுதாரர்களின் பூமிக்கு போடப்பட்டதாகச் சொல்லும் அதிக வரியாலும், நமது நாட்டிற்கு ஏற்பட்டி ருக்கும் அவமானமும் சர்க்கார் ஆணவமும் நஷ்டமும் பெரிதா? அல்லது வங்காளத்தில் நிரபராதிகளான மேல்கண்ட தேசபக்தர்களை நிஷ்காரணமாய் ஜெயிலில் அடைத்து வைத்திருக்கும் விஷயத்தில் நாட் டிற்கு ஏற்பட்ட அவமானமும் சர்க்காரின் அக்கிரமமும் நஷ்டமும் அத் தேச பக்தர்கள் படும் கஷ்டமும் பெரிதா? என்று நடுநிலைமை வாய்ந்தவர்களைக் கேட்கின்றோம்.
இந்த நிலைகளையெல்லாம் நன்றாய் உணர்ந்த வெள்ளை முதலாளிகளில் ஒரு பகுதியர்களான தென் இந்திய ரெயில்வே கம்பெனிக்காரர் இதுதான் சமயமென்று ஒரே அடியாய் ஆயிரக்கணக்கான தொழிலாள மக்களைப் பட்டினி போட்டு கொல்லத் துணிந்துவிட்டார்கள். அதாவது “தாங்கள் ரயில்வே வேலைக்கு யந்திரசக்திகள் அதிகமாய் ஏற்படுத்திக் கொண்டோம்; ஆதலால் எங்களுக்குக் கையால் வேலை செய்யும் ஆட்கள் 5000 பேர்கள் வரையில் தேவை இல்லை” மற்றும் ஏதேதோ சாக்குகளைச் சொல்லி கூலிகளைக் குறைக்கவும் இந்திய தொழிலாளர்களை நீக்கி விட்டு ஒன்றுக்கு நான்காய் கூலி கொடுத்து வெள்ளைக்கார ஆட்களை சீமையில் இருந்து தருவித்து வைத்துக் கொள்ளவுமான ஏற்பாடுகள் செய்து கொண்டு இதை அமுலில் கொண்டு வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தக் கஷ்டத் திலிருந்து நீங்க நம் தொழிலாள சகோதரர்கள் மேல்படி தென்னிந்திய ரயில் வே அதிகாரிகளை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். தேசீயத் தலைவர் களிடமும் பொது ஜனங்களிடமும் எவ்வளவோ முறையிட்டுப் பார்த்தார்கள்; சட்டசபை அங்கத்தினர்களிடமும் சர்க்கார் அதிகாரிகளிடமும் குறை இரந்து பார்த்தார்கள்; ஒருவர் மூலமாகவாவது ஒரு பரிகாரமும் கிடைக்கவில்லை, கடைசியாக சாத்வீகமான சத்தியாக்கிரகத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இதன் பலனாய் ரயில்வேகாரர்கள் பதினான்காயிரம் பேர்களை வெளியில் தள்ளி தொழிற்சாலையை அடைத்து விட்டார்கள் என்று சமாச்சாரம் தெரிய வருகின்றது. ஐயோ இந்திய நாடே! சென்னை மாகாணமே! உனது ஜீவாதாரமான அருமைச் சேய்கள் பதினாலாயிரம் பேர்கள் அதாவது அவர்கள் குடும்ப அங்கத்தினர்களையும் கணக்கில் சேர்த்தால் ஐம்பதினாயிரத்துக்கு மேல்பட்ட மக்கள் இம்மாதிரி வதைக்கப்படுகின்றார்களே! இதற்காக நீ என்ன செய்யப்போகின்றாய்? இவ்விஷயத்தில் உனக்கு ஈவு இரக்கம் என்பது ஒரு சிறிதும் இல்லையா? என்று கேட்கின்றோம். மலை இருக்கின்றது; ஆறு இருக்கின்றது; வயல் இருக்கின்றது; தோட்டம் இருக் கின்றது. துரவு இருக்கின்றது. தங்கம் விளைகின்றது என்று பெருமை பேசிக் கொள்ளுகின்றாய். நான் வீரர்களைப் பெற்றவளாக்கும், சூரர்களைப் பெற்றவ ளாக்கும் என்று பெருமை பேசிக் கொள்ளுகின்றாய். இப்பதினாலாயிரம் மக்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் சேர்ந்து சுமார் 50000 பேர் களின் இந்த ஆபத்தான நிலைமைக்கு நீ என்ன பரிகாரம் செய்யப் போகின் றாய்? அன்றியும் அவர்கள் தங்களது குறைகளைச் சொல்லி முறையிட்டுக் கொள்ள ஒவ்வொரு ஊர்கள் தோறும் வரப்போகின்றார்கள். அங்குள்ள பெரியார்களும் சுயமரியாதை மக்களும் அச்சகோதரர்களில் ஒவ்வொரு வரையும் அன்புடன் வரவேற்று அவர்கள் குறைகளை பொறுமையாய்க் கேட்டு அவர்கள் எதிர்பார்க்கும் உதவியைச் செய்து அவர்களுக்கு உங்கள் ஆதரவு இருப்பதாக ரயில்வேகாரர்கள் உணரும்படி செய்ய வேண்டியது உங்கள் கடமை என்பதை நாம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
ஏழைத்தொழிலாளர்களே! நீங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டியதில்லை; உங்களது சகோதரர்கள் நீங்கள் செல்லுமிடங்களில் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆனால் நீங்கள் மாத்திரம் இந்த நெருக்கடியான நிலைமையை பொறுமையுடனும் அஹிம்சையுடனும் புத்திசாலித்தனத்தோடும் சமாளியுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 08.07.1928