ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்
ஈரோட்டில் ரயில்வே ஷ்டேஷனுக்கு அருகாமையில் திரு. வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அக்கிராசனத்தின் கீழ் ஜூலை 21-ல் ஒரு தொழிலாளர்கள் வேலை நிறுத்த மீட்டிங்கு கூடியது.
மீட்டிங்குக்கு ஏராளமான ஜனங்களும் தொழிலாளர்களும் கூடியிருந் தார்கள். திருவாளர்கள் தேவ அன்பும், முத்துகிருஷ்ணன், அரூர் வேடி செட்டியார், மண்டி சி. குமாரசாமி கவுண்டர் முதலியோர்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டி பேசினார்கள்.
மறுநாள் கோணைவாய்க்கால் டேராகாட்டில் திரு. நாயக்கர் அக்கிராச னத்தில் ஒரு மீட்டிங்கு கூடியது.
அதற்கும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். அங்கு இரண்டு மூன்று நாளாக லைன்களில் நடந்த விஷயங்களை எடுத்துச்சொல்லி சத்தியாக் கிரக விஷயமாய் பேசப்பட்டது.
மறுபடியும் 25-தேதி புதன்கிழமை கடைவீதி அலிசவுக்கில் ‘தாஜுல் இஸ்லாம்’ பத்திராதிபர் ஜனாப் நைனாமுகம்மது சாயபு அவர்கள் தலைமை யில் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது.
தொழிலாளர்களும் திருவாளர் ஆ.ஹ.ஈஸ்வரரும் மற்றும் சில நண்பர் களும் பேசி சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.
27-7-28 ந் தேதி சாயந்திரம் 7-மணிக்கு, ஈரோடு “ காந்திசவுக்” என்கிற காரைவாய்க்கால் மைதானத்தில் தொழிலாளருக்கு அனுதாபங்காட்ட நு.ஞ. வெங்கிடாசலம் செட்டியார் அக்கிராசனத்தின் கீழ் ஒரு பொதுமக்களின் மகா நாடு நடைபெற்றது, தொழிலாளர் சகோதரர்கள் ஸ்ரீமான்கள் தேவ அன்பும், முத்துகிருஷ்ண நாயுடு அவர்களும் பேசினார்கள்.
பிறகு ஸ்ரீமான்கள் சுப்பண்ண ஆசாரியார் ஆ.ஹ.ஈஸ்வரன், ஈ.வெ. ராம சாமி நாயக்கர் அவர்களும் பேசினார்கள்.
தீர்மானங்கள் :- ஸ்ரீமான் நயக்கர் அவர்களால் பிரரேபிக்கப்பட்டு, அக்கிராசனர் அவர்களால் பொது மக்களின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, ஏகமனதாய் நிறைவேறியது.
1. ரயில்வே பொது வேலை நிறுத்த சம்பந்தமாக கவர்ன்மெண்டாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கும், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட
வர்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களால் வருந்தும் குடும்பத்தாருக்கும் இக்கூட்டம் அனு
தாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.
2. தொழிலாளர்கள் கோரிக்கைகள் மிகவும் இரக்கமானது என்று தீர்மானிப்பதோடு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களுக்கு பொது ஜனங்கள் தங்களால் கூடிய ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதாக இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
3. அரசாங்கத்தார், போலீசார், ரயில்வே அதிகாரிகள் ஆகியவர்கள் எவ்வளவோ கோபமூட்டத்தக்க செய்கை செய்தாலும் தொழிலாளர்களும் பொது ஜனங்களும் பொறுமையாகவே இருக்க வேண்டும் என்றும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொறுமை இழந்துவிடக் கூடாது என்றும் இக்கூட்டம் வேண்டிக்கொள்ளுகின்றது.
மேல்கண்ட தீர்மானங்கள் தீர்மானிக்கப்படுகையில் திரு. நாயக்கர் பேசியதாவது :-
சகோதரர்களே! தொழிலாளர்கள் குறைகள் உண்மையானவை என்பது எனது அபிப்பிராயம்.
ரயில்வேக்காரர்கள் திடீரென்று மூன்று நான்காயிரம் பேர்களை வேலையிலிருந்து விலக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அது உண்மையான சிக்கனத்தை முன்னிட்டாவது அல்லது லாபம் கட்டவில்லை என்பதற்காவது அல்லது ஜனங்களின் நன்மைக்காக ரயில் சார்ஜை குறைப்ப தற்கென்றாவது இத்திட்டத்தை அனுசரிப்பதானால் எனக்கு சந்தோஷமே.
அப்படிக்கில்லாமல், சீமையில் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்ப தற்காக அங்கிருந்து யந்திரங்கள் தருவிக்கவும், வெள்ளைக்காரர்களுக்கும் அவர்கள் சார்பாருக்கும் வேலை கொடுப்பதற்கும் இம்மாதிரி சூழ்ச்சி செய் கின்றார்கள். தென்னிந்திய ரயில்வேக்காரர் மற்ற எல்லா ரயில்காரர்களைவிட அதிக கொள்ளை அடிக்கின்றார்கள். மற்ற ரயில்களில் மெயிலுக்குக் கூட மைலுக்கு இரண்டரைக் காசு சார்ஜ். ஆனால் இவர்கள் நான்கு காசு, நாலரைக் காசு வாங்குகிறார்கள். வண்டி சவுகரியம் மற்ற வண்டிகளைவிட எஸ்.ஐ.ஆர் ரயிலில் மிகக் கொடுமையானது. சம்பளம், கூலி முதலியவைகளும் நம் மவர்களுக்கு மற்றவர்களைவிட மிகக் கொஞ்சமாகவே கொடுக்கின்றார்கள். இந்த நிலைமையில் இவர்கள் சிக்கனமென்பது இந்தியர்கள் வாயில் மண் ணைப்போட்டு வெள்ளைக்காரர்கள் வயிறு வெடிக்கச் செய்யும் கொடுமை யேயாகும்.
நிற்க, ரயில்களில் நடந்த அபாயங்களுக்கெல்லாம் ரயில்வே அதிகாரிகளே காரணமாவார்கள். ஏனெனில், வேலை நிறுத்தம் செய்வதாக முன்னெச்சரிக்கை கொடுத்துத்தான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது ரயில்வேக்காரர்கள் எச்சரிக்கையாய் இருந்திருக்கவேண்டும். ஒரு வேலை நிறுத்தம் என்றால் என்னென்ன காரியங்கள் நேருமென்பது அதிகாரிகள் அறிந்த விஷயம்
தான். மேல்நாடுகளின் வேலை நிறுத்த அனுபவம் தெரிந்த வெள்ளைக்
காரர்கள் அலட்சியமாய் இருந்தது மிகவும் கண்டிக்கத்தகுந்தது. கலகக்
காரர்களும் காலிகளும் தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்ட வாலிப ரத்த ஓட்டமுள்ளவர்களும் இன்னமும் என்னென்ன செய்வார்கள் என்பது நாம் சுலபத்தில் முடிவுகட்டக்கூடியதல்ல. இதற்காக தொழிலாளர்கள் மீது குற்றம் சொல்லுவது அறியாமையே யாகும்.
உதாரணமாக, திருச்சி பாலக்கரை ஸ்டேஷனுக்கருகில் லயனில் உள்ள கேட்டில் கதவில்லை என்றும், காவலில்லை என்றும் தெரிந்து வண்டியை விட எப்படி ரயில்வே அதிகாரிகள் சம்மதித்தார்கள் என்று நான் கேட்கின் றேன். அப்படி கவலையின்றி இஞ்சின் விட்டதால் மோட்டார் பஸ் மீது ஏறி 10 பேர்கள் கச கச வென்று நசுங்க நேர்ந்தது. இதற்கு யாரை தண்டிக்க வேண் டும் என்பதை நீங்களே யோசியுங்கள். நல்ல அரசாங்கமாயிருந்தால் இஞ்சின் ஓட்ட ஆதாரமாயிருந்தவர்களில் 10 பேரை தூக்கில் போட்டு இனி இம்மாதிரி நடக்காமல் பந்தோபஸ்து செய்திருக்கும். .அப்படிக்கில்லாமல் மேல் கண்ட 10 பேர் நசுக்கப்பட்டு போனதற்காக விசனப்பட்ட ஜனங்களை சுட்டார்களாம். இது என்ன ஒழுங்கு! இது அதிகாரம் இருக்கின்றது என்கிறதும் துப்பாக்கியும், குண்டும், மருந்தும் சொன்னபடி கேட்க போலீஸ்படையும் இருக்கின்றது என்கிறதுமான ஆணவத்தைக் கொஞ்சமாவதும் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்கின்றேன். இம்மாதிரி கொடுமைகளும், ஆத்திரம் மூட்டத்தக்க காரியமும் செய்துவிட்டு பொறுமையா யிருங்கள்! சாந்தமாயிருங்கள் என்று சொன்னால் அது வார்த்தை அளவில் இருக்குமேயல்லாது காரியத்தில் பயனளிக்குமா?
தவிர, 144 போடுவதாலும் ஜெயிலில் வைப்பதாலும் என்ன காரியத்தை சாதிக்க முடியும்? 144ஐ மீறுவது வெகு கஷ்டமான காரியமா என்று கேட்கின்றேன். பலாத்காரமான காரியங்கள் யாராலானாலும் சரி, நடந்த தாகக் காணப்படாதிருந்தால் 144ஐ மீறும்படியே கட்டளை இட்டிருப்பேன். ஜெயிலில் போடுவதால் யாரும் பயந்துவிட மாட்டார்கள். ஜெயில் அனு போகம் எனக்கு நன்றாய் தெரியும். மூன்று நான்கு தடவை நான் அனுபோகித் துப் பார்த்தவன். உள்ளே போய் வெளியில் வரும்போது உடல் இடை 10 ராத்தல் அதிகமாகவேதான் வரக்கூடும். ஆதலால் அந்த பூச்சாண்டிக்கு யாரும் பயப்படமுடியாது. மரியாதையாக தொழிலாளர் கோரிக்கைகளுக்கு இணங்கியோ அல்லது அவர்களை சமாதானப்படுத் தியோ ஒரு முடிவுக்கு வருவதுதான் நலமாக முடியும். கடைசியாக நான் பொது மக்களையும் தொழி லாளர்களையும் கேட்டுக் கொள்வதாவது:-
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பலாத்காரமும் பொறுமை இழத் தலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பலாத்காரம் ஏற்படுவது அதிகாரிகளுக்கு நன்மையாகவும் நமக்கு கெடுதியாகவும் முடியும். ஒத்துழையாமையின் போது கூட திடீரென்று திருவாளர் காந்தி இயக்கத்தை நிறுத்த நேர்ந்ததற்குக் காரணம் பலாத்காரம் ஏற்பட்டதுதான். அதனாலேயேதான் அவ்வியக்கம் தோல்வியடைந்ததாக கருத நேரிட்டது. ஆதலால் பலாத்காரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். போலீசார் மீது குற்றம் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை. அவர்கள் சம்பளத்திற்காக, மேல் அதிகாரி சொன்னபடி கேட்கும் நிபந்தனை இல்லாத அடிமைகள். அவர்கள் எஜமான் சொன்னபடி நடக்கா
விட்டால் வேலை போய்விடும். 144 போட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் நாம் குற்றம் கண்டுபிடிப்பது முட்டாள்தனம். வெள்ளை அதிகாரிகள் சொன்னபடி உத்திரவு போடாவிட்டால் வேலை போய்விடும். அப்புறம் உபாதான மெடுக்க வேண்டியதோ கருமாந்திர வீட்டில் தக்ஷிணைக்கு போக வேண்டியதோ அவர்கள் கடமையாகி விடும். ஆதலால் பொறுமை இழக்காமல் பலாத்கார மில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களாலான உதவி கடைசி வரை செய்யக் காத்திருக்கின்றோம். பலாத்காரம் ஏற்பட்டால், அதுவும் தொழிலாளர் களால் நடந்தது என்பதாக தெரிந்தால் நாங்களும் விலகிக்கொள்வோம் என்பதைக் கண்டிப்பாய் சொல்லுகின்றேன். மற்றபடி இங்கு நடத்தப் போவ தாய் சொல்லப்படும் சத்தியாக்கிரகத்திற்கு என்னாலான பண உதவியும் ஆள் உதவியும் செய்யத் தயாராயிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தார்.
குறிப்பு : 21.6.1928 இல் ஈரோடு தொடர்வண்டி நிலையத்தின் அருகில் தொழிலாளர் வேலை நிறுத்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒட்டிப்பேசியது.
strong>குடி அரசு – துணைத் தலையங்கம் – 29.07.1928