சைவப் பெரியார் மகாநாடு
திருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ண சாமி பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப்பற்றி நாம் முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.06.1929