பார்ப்பனரல்லாதார் மகாநாடு
சென்ற வாரம் “குடி அரசு” தலையங்கத்தில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எழுதி இருந்தோம். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் இம்மாத கடைசி வாரத்தில் மதுரையில் ஒரு பார்ப்பன ரல்லாதார் மகாநாடு கூட்டப் போவதாக அறிந்து சந்தோஷமடைகிறோம். கூட்டுவதில் காங்கிரஸ் மகாநாடுகள் என்ற பெயரால் பார்ப்பனர்கள் கூட்டம் கூடி பொது மக்களை ஏமாற்றி தங்கள் வகுப்பார் ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபைகளிலும் ஸ்தானம் பெற சூழ்ச்சிகள் செய்வது போலவும் , சர்க்கார் உத்தியோகம் பெற தந்திரங்கள் செய்வது போலவும் இல்லாமல் நாட்டிற்கும், சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் உண்மையான நன்மைகள் ஏற்படும் படியாகவும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை காப்பாற்றப்படும் படியாக வும், ஏற்ற கொள்கைகளை வைத்து அதற்கான திட்டங்களை வகுத்து காரியத்தில் நடத்த முயலவேண்டுமென்பதையும் தெரிவித்துக் கொள்ளு கிறோம்.
தலைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களாவன:-
மகாநாட்டுக்கு பலவித ராஜிய அபிப்பிராயமுள்ள பார்ப்பனரல் லாதார்களை எல்லாம் அழைக்க வேண்டும். யார் யாருடைய உண்மை யான கூட்டுறவும் ஒத்துழைப்பும் எவ்வளவுக் கெவ்வளவு கிடைக்குமோ அவைகளையெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவர்களாயிருப்பவர்கள் பிரசார வேலைகளை ஆறுமாத காலத்திற்காவது தொடர்ந்து முறையாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறைந்தது 5 லக்ஷ ரூபாயிக்கு குறையாமல் பண்டு சேர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களும், வக்கீல் களும் தங்கள் வரும்படிகளில் ஏதாவது ஒரு பாகத்தை மாதா மாதம் கொடுத்து வரும்படியாக ஏற்பாடு செய்து அவற்றை ஒழுங்காய் வசூலிக்க ஏற்பாடுகளும் செய்யவேண்டும்.
மாதம் தோறும் வரவு செலவு கணக்குகள் வெளியாக வேண்டும்.
ஒவ்வொரு ஜில்லாவிலும் தாலூக்காவிலும் தக்க கிராமங்களிலும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை சபைகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஜில்லாக்கள் தோறும் காரியதரிசியையும் பிரசாரகரையும் நியமித்து நமது கொள்கைகளை பரவச் செய்ய வேண்டும்.
தமிழ் தினசரி பத்திரிகையை இன்னமும் கொஞ்சம் பலப்படுத்தி குறைந்த பக்ஷம் 10,000 பிரதிகளாவது தமிழ்நாட்டில் உலாவும்படி செய்ய வேண்டும்.
கொள்கைகளாவன
இந்திய மக்கள் சுயமரியாதையையும் சுயராஜ்யத்தையுமடைய முக்கிய சாதனமான கதரை ஒவ்வொருவரும் இன்றியமையாத சாதன மாய்க் கொள்ள வேண்டியதோடு கதரை அணிவது முக்கியக் கடமை களில் ஒன்றாய்க் கொள்ள வேண்டும்.
தீண்டாமையை அடியோடு ஒழிப்பதோடு மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற தத்துவத்தை திரிகரண சுத்தியாய் ஒப்புக் கொள்ள வேண்டும்.
மது விலக்கு நாட்டிற்கே அவசியமானாலும் சிறப்பாய் பார்ப்பன ரல்லாத மக்களுக்கே மிக மிக அவசியமானபடியால் அதை ஒழிக்க வேண்டி யதையும் முக்கியக் கடமையாய்க் கொள்ள வேண்டும்.
கோர்ட்டு விவகாரங்களே பார்ப்பனரல்லாத மக்கள் அடிமைத் தன்மைக்கும், குடும்ப அழிவுக்கும், செல்வங்கள் ஒழிவதற்கும் அடிப் படையான ஆதாரமாயிருப்பதால் சகல விவகாரங்களையும் பஞ் சாயத்து மூலமாக பைசல் செய்ய வசதி ஏற்படுத்தி கோர்ட் விவகாரங் களை ஒழிக்க வழி தேட வேண்டும்.
ஆகிய இக்கொள்கைகளை அடிப்படையாக வைத்து காரியத்தில் கொண்டு வரக்கூடிய அளவுக்கு திட்டங்களை ஏற்படுத்தி பிரசார வேலை செய்ய வேண்டும். இதல்லாமல் உத்தியோகங்களையும் பதவிகளையும் பெறுவது மாத்திரமே, பார்ப்பனரல்லாதார் இயக்கங்களின் கொள்கை என்றும் திட்ட மென்றும் பிறர் நினைக்கும் படியாகவாவது நடந்து கொண்டால் உத்தி யோகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்கள் போக மற்றவர்கள் இச்சங் கத்தில் சேர மாட்டார்கள் என்பதையும், பதவிக்கும் உத்தியோகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் உள்ள சங்கம் ஒரு நாளும் உருப்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நாம் அறிந்தபடி இம்மாதக் கடைசியில் மதுரையில் கூட்டப் போகும் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு (கூடுவதாயிருந்தால்) ஒவ்வொரு ஜில்லா தாலூக்காகிராமங்களிலிருந்தும் ஏராளமான கனவான்கள் வர வேண்டும். அசார்சமாயிருக்கக் கூடாது. சர்க்கார் அதிகாரிகள் கூட வருவதில் யாதொரு ஆnக்ஷபணையும் இராது என்றே நினைக்கிறோம். இது ஒரு ( குறிப்பிட்ட சமூக) ஜாதிய மகாநாடே அல்லாமல் ராஜீய மகாநாடு அல்லவென்றே சொல்லுகிறோம். உதாரணமாக பிராமணர் மகாநாடு என்றும் வருணாசிரம தர்ம பரி பாலன மகாநாடு என்றும் ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும் பல மகாநாடுகள் பார்ப்பனர்கள் கூட்டுவதில் அநேக உத்தியோகஸ்தர்கள் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அதுபோலவே மற்ற சமூகத்தார் கூட்டும் சமூக மகாநாடுகளிலும் அந்தந்த சமூகத்தார் பங்கெடுத்துக் கொள்ளுகிறார் கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு வர யாரும் எந்த உத்தியோ கஸ்தர்களும் பயப்பட வேண்டியதில்லை. வீணாக நம் உத்தியோகஸ்தர்கள் பயப்படுவதினாலேயே நமது உத்தியோகஸ்தர்களுக்கு பெரும்பாலும் சுய மரியாதை இல்லாமல் போகக்கூட நேரிடுகிறது. ஆகையால் பெருவாரியான ஜனங்கள் ஆஜராகி ஒற்றுமைப்பட்டு நடவடிக்கையில் கலந்து நமது சுயமரியாதைக்கும் முற்போக்குக்குமான காரியத்தைச் செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். இதுபோன்ற சமயம் இனி கிடைக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 12.12.1926