தங்கப்பெருமாள் பாரதத் தாயின் துர்ப்பாக்கியம்
தமிழ்நாட்டின் அருந்தவப்பயன், நமது ஆருயிர் நண்பர் ஸ்ரீமான் வா.மு. தங்கப்பெருமாள் பிள்ளை இம்மாதம் 6 – ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் நீத்தார் என்னும் சேதியை எழுதவே மெய் நடுங்குகிறது. அவருக்கு இன்னமும் ஆண்டு முப்பது கூட ஆகவில்லை. அவர் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள் கருங்கல் பாளையம் என்னும் கிராமத்தில் வாத்தியார் வீடு என்று சொல்லும்படியான புராதனமும் கண்ணியமும் வாய்ந்த ஒரு வைணவ வேளாள செல்வக் குடும்பத்திற்குச் செல்வமாய் பிறந்தவர். அவரது இளம் வயதிலே, அதாவது 12 – வது வயதிலேயே தந்தை இறந்து போனார். ஆயினும் சிறிய தந்தையார் ஆதரணையால் கல்வி கற்கப்பட்டு தனது 21 – வது வயதில் க்ஷ.ஹ பட்டம் பெற்று, 24 – வது வயதில் க்ஷ.டு.பட்டமும் பெற்று, ஈரோடு ஜில்லா முனிசிபு கோர்ட்டில் 1921 – ம் வருஷத்தில் வக்கீல் தொழிலை ஆரம் பித்தார். ஆரம்பித்த மாதமே 200 ரூபாய் வரும்படி கிடைத்தது. அடுத்தமாதம் 250 ரூ. வரும்படி கிடைத்தது. மற்றும் இரண்டொரு மாதங்களிலேயே மாதம் 300 ரூபாய்க்கு மேல் வரும்படி வந்து கொண்டிருக்கும்படியான நிலைமை ஏற்பட்டதோடு ஊருக்குள் பிரபலமும் செல்வாக்கும் ஏற்பட்டு தான் படித்து வந்த மகாஜன ஹைஸ்கூல் என்னும் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நிர்வாக அங்கத் தினராயும், ஈரோடு நகர பரிபாலன சபைக்கு நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கும் படியான பொதுஜன அபிப்ராயத்தைப் பெற்றார். அவர் தனக்கு விபரம் தெரிந்த காலம் முதலே பொது விஷயங்களில் ஊக்கமும் தன்னைப் போன்ற இளம் வாலிபர்களின் மிகுதியான கூட்டுறவும் தமிழ் பாஷையினிடம் ஒருவித தனிப் பற்றுதலும் உடையவராயிருந்ததோடு தனது ஊராகிய கருங்கல் பாளையத்தில் ஒரு சிறு வாசகசாலை என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பொதுநல விஷயங்களையும் தமிழர் பெருமை யையும் பற்றி அடிக்கடி தமது நண்பர்களிடம் பேசுவதும் அவ்வாசக சாலைக்கு வருஷா வருஷம் ஆண்டுவிழா என்னும் பேரால் தமிழ் நாட்டுப் பெரியார்களை அதாவது, ஸ்ரீமான்கள் பாரதியார், வரதராஜுலு நாயுடு, வ.வெ.ஸு ஐயர், திரு.வி.க. முதலியார், மூ.வெ. நாட்டார் முதலியவர்களைத் தருவித்து கொண்டாட்டங்கள் நடத்துவதுமான விஷயங்களில் பெரிதும் தனது சகாக்களோடு ஊக்கங்காட்டி வந்தவர். இந்நிலையில் 4, 5 மாதம் கூட தனது வக்கீல் தொழில் நடத்தியிருக்க மாட்டார், இதற்குள்ளாக காந்திய டிகளின் ஒத்துழையா இயக்கம் ஆரம்பமாயிற்று. தனது வக்கீல் தொழி லோடு ஒத்துழையா இயக்க சம்பந்தமான பொதுக்கூட்டங்கள் ஈரோட்டில் நடை பெற்று வந்த சமயங்களில் நமது பிள்ளை அவர்களே அநேகமாய் அக்கிரா சனம் வகிக்க கேட்டுக் கொள்ளப்படுவதும் இவரது அக்கிராசனத்தின் கீழ் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியோர் பேசுவதும் வழக்கமாகியிருந் தது. இப்படியே இருக்க ஒரு நாள் கூட்டத்தில் நமது பிள்ளையவர்கள் தனது முடிவுரையில் தான் நாளை முதல் கொண்டு வக்கீல் தொழிலுக்குப் போவதில்லை என்கிற சேதியை அறிவித்துவிட்டார். இவ்வறிவிப்பானது அக் கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் அவரிடம் அளவு கடந்த பக்தியும் அன்பும் ஏற்படுத்திவிட்டது. பிறகு காங்கிரஸ் நிர்வாகத்திலும் அவர் இழுக்கப் பட்டார். உடனே ஜில்லா காரியதரிசி ஆனார். அடுத்தாற் போல் மாகாண நிர்வாகசபை அங்கத்தினரானார். பெயர் பெற்ற ஈரோடு கள்ளுக்கடை மறியலில் இவர் குற்றஞ் சாட்டப்பட்டு நாயக்கர் உள்பட 40 தொண்டர்களோடு மேஜிஸ்ட்ரேட்டால் தண்டிக்கப்பட்டு சிறைவாசமிருந்தார். சிறையினின்று வெளிவந்ததும், அதிமும்மரமாக ஜில்லா முழுதும் சுற்றும் படியான வேளை யில் தனது மெல்லிய சரீரத்தின் சவுகரியங்களையும் தனது வாழ்க்கை போகத்தின் பழக்கங்களையும் கொஞ்சமும் கவனியாமல் கிராமம் கிராமமாய் திரிந்து வேலை செய்து வந்தார். இன்னிலையில் ஜில்லா தலைவராகவும் மாகாண காரியதரிசியுமானார். இதன் பலனாய் மாகாணமெல்லாம் சுற்றவும் திருச்சியில் மாகாண கமிட்டி காரியாலயத்திற்குத் தன் பத்தினி சகிதமாய் போய் மாதக் கணக்காய் குடியுமிருக்கவும் செய்து வந்தார். ராஜீயநிலை மாறி நிலைகுலைந்ததின் பலனாய், காங்கிரஸ் நிர்வாகத்தில் கலந்து கொள்ள இஷ்ட மற்றவராகி, சகலவித நிர்வாகத்திலிருந்தும் விலகிக் கொண்டு “குடி அரசு” என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்த முற்பட்டார். இது சமயம் கதர் போர்டு காரியதரிசி பதவியையும் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப் பட்டதாலும் உடல் நலிவு ஏற்பட்டு படுக்கையில் கிடக்கத்தக்க அசவுகரியத்தோடு இருந் ததாலும், “குடி அரசு” நிர்வாகத்தை நாயக்கரிடம் ஒப்புவித்து விட்டு விலகி னார். அடுத்தாற்போல், உடல் நலம் செய்து கொள்ள சென்னைக்குப் போகவேண்டியிருந்ததால், கதர் போர்டு காரியதரிசி பதவியையும் ஸ்ரீமான் நாயக்கரிடம் ஒப்புவித்துவிட்டு சென்னைக்குப் போனார். அங்கும் ஒன்று இரண்டு மாதம் இருந்து சிகிச்சை செய்து கொண்டார். பின் வைத்தியர்கள் அநுமதியின் பேரில் ஊருக்கு வந்து 3,4 மாத காலம் படுக்கை யிலேயேயிருந்து சிகிச்சை செய்து வந்தார். என்ன செய்தும் அதிசாரக் கழிச்சல் என்னும் அவருக்கு ஏற்பட்ட வியாதி குணப்படாமல் அவரது முடிவுக்கே கூற்றுவனாயிருந்து கொள்ளை கொண்டு விட்டது. படுக்கையில் இருக்கும்போதும் எழுதுவதும், படிப்பதும், சவுக்கியமான பிறகு தேசத்திற்கு என்ன செய்வது என்று வேலைத் திட்டம் போடுவதிலும் காலத்தைக் கழிப்பார். யாரிடமும் கடினமாகப் பேசமாட்டார். ஒருவருக்கும் மனவருத்தம் ஏற்படும் படி நடக்க மாட்டார். தான் சொல்லுவது உண்மையானாலும் அதனால் யாருக்காவது சலிப்பு ஏற்படும் என்று பட்டால் பயந்து நிறுத்திக் கொள்வார். தாராளக் கையன். தமிழ்நாட்டுத் தொண்டர்கள் என்போர் அநேகர் அவரிடம் வந்து அடிக்கடி ஏதாவது பெற்று போவார்கள் . நண்பர்களுக்கு சமயங்களில் அவரைப்போல் உதவி செய்பவர்கள் மிகச் சிலர்தானிருப்பார்கள். இல்லை என்று சொல்வதானால் தனக்கும் ஒரு பெரிய பாவத்தைச் செய்கிறோமே என்று நடுங்குவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அநேக புத்தகங்கள் வாசித் தவர். தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆராய்ச்சிக்காரர்களில் நமது பிள்ளையும் ஒரு முக்கியமானவர் என்று சொல்லவேண்டும். அவர் காரியாலயம் ஒரு புத்தகாலயம்போல் இருக்கும். ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று எப்பொழுது பார்த்தாலும் இதே வேலைதான். நமது நாட்டில் மக்கள் உயர்வு தாழ்வு என்பது எப்படி ஒழியும் என்கிற கவலை அவருக்குள்ள மற்ற எல்லாக் கவலையையும் விட முன்னின்று கொண்டேயிருந்தது. முடிவாய்க் கூறு மிடத்து தன்னலத் தியாகத்தில் ஈடற்ற ஒரு தேசபக்தர் – உண்மைத் தொண்டர்- அஞ்சா நெஞ்சர் – ஆருயிர்த் தோழர்-தமிழ்நாட்டின் ஒரு முக்கிய உருபு- கோவை ஜில்லாவின் வலக்கண்-ஈரோட்டின் முடி மறைந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இப்பேர்ப்பட்ட ஒரு ரத்தினத்தைப் பிரிந்த அவரது குடும்பத்தார், ஆருயிர்ப் போன்ற மனைவி, பரதன் போன்ற தம்பி முதலி யோர்களுக்கும், கன்றை இழந்த தாய் போன்ற தமிழ் மக்களுக்கும் ஈசனே ஆறுதல் அளிப்பாராக.
குடி அரசு – தலையங்கம் – 07.03.1926