“மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்” தேவார பாராயணத்திற்கு தடை உத்திரவு ( இஞ்சங்ஷன் )
நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத் துடனும் ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன் கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்திரவு வாங்கி விட்டார்களாம். கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். “இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங் காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டுவிட்டார்கள்” என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயிருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள் கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்துமதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப்பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத்துரோகம் போலும்!
குடி அரசு – செய்தி விளக்கம் – 05.12.1926