பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது -சித்திரபுத்திரன்

சென்னை சட்டசபையில் கொழுத்த சம்பளம் பெறும் மந்திரிகளை பொறாமைக் கொண்டு வேண்டுமென்றே உபத்திரவப்படுத்த நமது பிராமணர் களுக்கு ஸ்ரீமான்கள் ஊ.ராமலிங்க ரெட்டியார் அவர்களும் ஹ.ராமலிங்க செட்டியார் அவர்களும் வலக்கை இடக்கை போல் கொஞ்சக் காலமாய் இருந்து வருகிறார்கள். இதில் ஸ்ரீமான் ரெட்டியாருக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டது. இதனால் பிராமணர்க ளுக்கு ஒரு கை ஒடிந்ததென்றுதான் சொல்ல வேண்டும். மந்திரிகளுக்கும் ஒரு உபத்திரவம் குறைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதுபோலவே நமது ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கும் ஒரு உத்தியோகம் ஏற்பட்டு விட் டால் பிராமணர்களின் மற்றொரு கையும் தற்கால சாந்தியாய் ஒடியும். மந்திரிகளின் முழு உபத்திரவமும் நீங்கிப் போகும். மந்திரிகளின் அறியாமை யினால் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மந்திரிகள் நழுவ விட்டுவிட்டார்கள். அதாவது, சட்டசபை பிரசிடெண்டு உத்தியோகத்தை செட்டியாருக்கு கொடுக்கத் தவறிவிட்டதுதான். இதை மந்திரிகளின் மன்னிக்க முடியாத குற்ற மென்றுதான் சொல்வேன். இவ்விருவருக்கும் தயவுக்காக யாரும் உத்தி யோகம் கொடுக்க வேண்டியதில்லை. இருவரும் அந்தந்த ஸ்தானங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் – உரியவர்கள் என்றே சொல்வேன். (அந்த ஸ்தானங்கள் பொதுமக்களுக்கு உபயோகப்படக் கூடியதா அல்லவா என்பது வேறு விஷயம்) அவரவர் உரிமை அவரவர்களுக்கு அளிக்கப்படாவிட்டால் விதியை எதிர்பார்த்து பொறுமையுடனிருந்து பெருவோர் சிலர்; விதியையும் பொறுமையையும் வீதியிலெறிந்து விட்டு யுத்தம் செய்து பெறுவோர் சிலர்; அவ்வித யுத்தம் சிலர் தர்ம வழியில் செய்வார்கள்; சிலர் அது நீங்கிய வழியில் செய்வார்கள். ஆனால், நமது மந்திரிகள் இவர்களின் தர்ம யுத்தத் திற்கு மடங்காத மந்திரிகளாய்ப் போய்விட்டதால் பிராமணர்களோடு சேர்ந்து கொண்டு யுத்தம் புரிய வேண்டியதாயிற்று- வேண்டியதாயுமிருக்கிறது. ராமாயணம் என்னும் கதைப்படி ராமரே தனது உரிமையைப் பெற “ராக்ஷ தர்களில் ஒருவரான விபூஷணனுடன் ஒப்பந்தம் பேசிக்கொண்டு அவனை ஆழ்வாராக்கி ராவணனோடு சண்டை செய்ய வேண்டியிருந்ததென்றால், நமது ஸ்ரீமான்கள் ரெட்டியாரும் செட்டியாரும் பிராமணர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களைத் தலைவர்களாக்கி உரிமை பெறுவது தப்பாகுமா? சரியோ – தப்போ தமிழ் மந்திரி பதவியின் முதல் சந்தர்ப்பத்தை ஸ்ரீமான் செட்டியாருக்கு கொடுத்திருக்க வேண்டியது கிரமமானதாகும். செட்டியாரின் அவசரமும் மந்திரிகளின் வீம்பும் இக்கிரமத்திலிருந்து தவறும்படி செய்து விட்டது. இவர்கள் இருவரின் தவறுதல்கள் தமிழ் மக்களை பெரிதும் துன்பத்திற்காளாக்கப் போகிறது. ஆகையால், இனியாவது மந்திரிகள் ஸ்ரீமான் செட்டியாருடன் ராஜி பேசிக் கொண்டு அந்த உபத்திரவத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள வழிதேட வேண்டியது. இல்லாவிட்டால் “குடிக்க முடியா மல் போனால் கவிழ்த்த வேண்டியது” என்கிற தத்துவம் தலை சிறந்து விளங்கும். ஆத்துத் தண்ணீரை அப்பா குடி, அய்யா குடி என்று சொல்ல வேண்டியதுதான்.

குடி அரசு – கட்டுரை – 14.03.1926

You may also like...

Leave a Reply