இனி என்ன செய்யவேண்டும்?
சென்னை மாகாண நிர்வாகத்திற்கு புதிய மந்திரிகள் நியமன மாய்விட்டது. அதாவது, ஸ்ரீமான்கள் டாக்டர் ஞ. சுப்பராயன், ஹ. ரங்கநாத முதலியார், சு.சூ. ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய மூன்று கனவான்கள் நியமனம் பெற்றுவிட்டார்கள். இவர்களுள் முறையே ஒருவர் ஜமீன்தார். ஒருவர் பிரம்மஞான சங்கத்தார். ஒருவர் சர்க்கார் பென்ஷன் உத்தியோ கஸ்தர்.
ஆனபோதிலும் இவர்கள் தங்களுக்கு என்று யாதொரு தனி கொள்கையும், இயக்கமும் இல்லாதவர்களாகையால் தனித்தனியாக சமயம் போல் அவர்களுக்குத் தோன்றியபடி நிர்வாகத்தை நடத்திக் கொண்டு போவார்கள் என்றேதான் நாம் நினைக்க வேண்டும். அதோடு மந்திரிகள் மூவரும் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்று சொல்வதாயிருந்தாலும் தங்கள் தங்கள் காலிலேயே நிற்கத்தகுந்த பொதுஜன ஆதரவோ, கட்சி பலமோ, கொள்கை பலமோ இல்லாதவர்கள். ஆதலால் நமது முன்னேற்றத்தின் எதிரிகளான பார்ப்பனர்களின் தயவில்லாமல் அரை நிமிஷமும் உயிர்வாழ முடியாதவர்கள். ஆனதால் இம்மந்திரி நியமனம் பார்ப்பனர்களுக்கு அனு கூலமே தவிர பார்ப்பனரல்லாதார்களுக்கு ஒன்றும் அனுகூலம் இல்லை யென்றே சொல்லவேண்டும். தேசத்திற்கு மந்திரிகளால் நன்மையோ தீமை யோ ஏற்படக்கூடும் என்று ஒருபொழுதும் நாம் எண்ணியதும் கூறியதும் இல்லை. ஆதலால் தேச முன்னேற்றத்திற்கு இவர்களிடமிருந்து நாம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. நிற்க, இனி ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்யப் போகிறது. அடுத்த தேர்தல் வரையில் அதாவது இன்னும் மூன்று வருஷ காலத்திற்கு மந்திரி பதவி காலமாய் விட்டதற்கு துக்கம் கொண்டாடப் போகிறதா அல்லது உருப்படியான ஏதாவது ஒரு பிரசாரத்தை செய்து பார்ப் பன ஆதிக்கத்தை அழித்து பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றப் போகிறதா என்பது தான் நமது கவலை. உண்மையில் மந்திரி பதவி போய் விட்டதால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு ஒன்றும் தடை ஏற்பட்டு விடவில்லை. தற்கால மந்திரி பதவியால் பார்ப்பனரல்லா தாருக்கு அதிகமான கெடுதி ஏற்பட்டு விடுவதாய் வைத்துக்கொண்டாலும் அது என்னவாயிருக்கக் கூடும். பார்ப்பனரல்லாதாருக்கு சர்க்கார் உத்தியோக மில்லாமல் செய்யக்கூடும். சர்க்கார் உத்தியோகங்களில் இருக்கும் பார்ப்பன ரல்லாதார் பலருக்கு உத்தியோகம் போகக்கூடும். இதற்கு மேல் ஒரு கடுகளவு கெடுதிகூட ஏற்பட கொஞ்சமும் இடமில்லை. இதைத்தவிர வேறு ஒரு கெடுதியும் பார்ப்பனரல்லாதாருக்கு செய்துவிடவும் முடியாது. செய்யவும் அதில் இடமில்லை. இம்மாதிரி மாறுதல் ஏற்பட்ட சமயத்தில் நமது நாட்டு மக்கள் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனை யின்பேரில் தலைவர்கள் என்போர்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ஆகிய கட்சிப் பத்திரிகைகள் யாதொரு தகவலும் தெரிவிக்கா மல் வாய்மூடிக் கொண்டிருப்பதின் இரகசியம் விளங்கவில்லை. இதைக் கவனிக்கும் போது அக்கட்சித் தலைவர்களுக்கு இனியும் மந்திரி பைத்தியம் இருப்பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது. ஆதலால் இனியும் இது போலவே வாய்மூடிக் கொண்டிருக்காமல் உடனே கோயமுத் தூர், திருச்சி, மதுரை ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பார்ப்பன ரல்லாதார் மகாநாடு கூட்டி இனியும் தீவிரமான திட்டம் வகுத்து பார்ப்பனர் அடக்கு முறையையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து நின்று உடனே வேலை செய்யத் தொடங்கவேண்டும். இல்லையேல் நமது எதிரி கள் “பார்ப்பன ரல்லாதார் கட்சி உத்தியோகக் கட்சி என்பதும் பார்ப்பனரல் லாதார் கட்சி ஒழிந்தது” என்பதும் நிஜம் என்று எண்ண இடமுண்டாகி விடும்.
குடி அரசு – தலையங்கம் – 05.12.1926