சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும் தென்னாட்டு பிராமணர் சக்தி
பிராமணக் கக்ஷியாகிய சுயராஜ்யக் கக்ஷி சட்டசபைகளில் மது விலக்கு செய்யும் ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்று இன்னமும் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் பிரசாரம் செய்து வருவது பொது ஜனங்களுக்குத் தெரியும். ஆனால், மதுவிலக்குக்கும் சுயராஜ்ய கக்ஷிக் கும் எவ்வளவு பொருத்தமிருக்கிறது என்பதை ஓட்டர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
1. சுயராஜ்யக் கக்ஷித் தலைவர் பண்டிதர், வட இந்தியாவில் சாராயம் காய்ச்சும் ஒரு பெரிய கம்பெனியில் பங்குக்காரர் என்று கேள்விப் படுகிறோம். அல்லாமலும் மதுவருந்துவது குற்றமல்ல வென்று நினைத்து அளவாய்க் குடிக்கும் மேல் நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டவர்.
2. சுயராஜ்யக் கக்ஷித் தலைவரை நடத்துகிறவரும் சுயராஜ்யக் கக்ஷி யைத் தோற்றுவித்தவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான ஸ்ரீமான் ஏ. ரெங்க சாமி அய்யங்கார் ஒவ்வொரு வீட்டிலும் பிராந்தி என்னும் சாராயம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று விளம்பரம் செய்து சாராயம் விற்கிறவர்.
3. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
4. ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரோ தன் தென்னை மரத்தில் கள் உற்பத்தி செய்வதில் பணம் சம்பாதிக்கிறவர். அவர் இல்லையென்று சொன்னாலும், சிலருக்குப் பணம் கொடுத்து இல்லையென்று எழுதச் சொன் னாலும், பொள்ளாச்சி கான்பரன்சுக்கு போக ஸ்ரீமான்கள் சி. ராஜ கோபாலாச்சாரியாரும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் ரயிலில் பிரயா ணம் செய்யும்போது கிணத்துக்கடவு ஸ்டேஷனண்டை வண்டி நின்றதும் ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார் தோப்பில் உள்ள மரங்களில் கள்ளுமுட்டி கட்டியிருந்ததை ஒருவர் காட்டி நேரில் பார்த்தார்கள்.
இவர்கள் சட்டசபைகளில் கள்ளை நிறுத்துகிறவர்கள்; ஸ்ரீமான் சி.ராஜ கோபாலாச்சாரியார் இவர்களுக்கு பிராமணரல்லாதாரின் வோட்டுகளை வாங்கிக் கொடுப்பவர்; பிராமண சக்தியின் வலிமை என்னே! என்னே!! இவர்கள்கூடத் திரியும் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் தன்மை என்னே! என்னே!!
குடி அரசு – கட்டுரை – 18.04.1926