இதுகூட வகுப்பு துவேஷமா?
திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு தமிழில் தேவார பாராய ணமும் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம். அங்கு வேத பாராய ணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். கோவிலில் தேவா ரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது.
தேவாரம் படிக்காததினால் மோக்ஷம் கெட்டுப்போய் விட்டது என்ப தாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராய ணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவா னேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டு பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 21.11.1926