ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்
ஸ்ரீமான் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஓ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகரசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்ததால் சட்டப்படி அபேக்ஷக ராயிருக்க அருகரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர்தல் நடத்த உத்திரவிட்டார். இதன் மேல் அத் தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை ஸ்மால் காஸ் கோர்ட்டில் ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிடமே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக் கோர்ட்டில் பார்ப்பன ரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த மூன்று ஜட்ஜிகளால் உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோதமாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப் பனர் அத்தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள். இந்த நிலையில் சென்னை பிரதம நீதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையில் சந்தேகப்பட்டு மூன்று ஜட்ஜிகள் கூடி பைசல் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஒரு ஜட்ஜிடம் போய் எப்படி மாற்றிக் கொள்ள லாம் என்று கூட கோர்ட்டில் பார்ப்பன வக்கீல்களைக் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் சட்ட சம்பந்தமான ஆதாரமிருப்பதாகவும் ஒரிஜினல் என்ற கார ணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும் சொல்லி திருப்தி செய்திருக் கிறார்கள். அப்படியானால் அதையும் என்னிடமே ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் பிரதம நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்த காரணம் இந்தக் கோர்ட்டுக்கு வரக் கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப் பார்த்தால் சட்ட மியற்றுவது பார்ப்பனர்; அதை விவாதிப் பது பார்ப்பனர்; அதற்கு தீர்ப்புச் சொல்லுவதும் பெரும்பாலும் பார்ப்பனர் என்று ஏற்படு கிறது. இந்நிலையில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங் களில் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் கிடைக்குமென்று உறுதியாய் நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 03.10.1926