திருச்சியில் 144
திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் பிரவேசிக்கக்கூடாது என்று திருவாளர்கள் ஜே. கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ஜே. என். ராமநாதன் ஆகியவர்களுக்கு அவ்வூர் மாஜிஸ்திரேட் திரு. சீனிவாசராவ் என்கின்ற ஒரு பார்ப்பனரால் 144ம் உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வுத்திரவு அக்கிரமமான உத்திரவானதால் அதை மீறி பிரவேசித்து சிறை புக தீர்மானித்து திருவாளர்கள் கண்ணப்பரும் தண்டபாணி பிள்ளையும் முடிவு செய்து விட்டார்கள். இன்று அல்லது நாளை திருச்சிக்கு சென்று உத்திரவை மீறுவார்கள்.
பின் வந்த தந்தி
திரு. கண்ணப்பரும் தண்டபாணியும் இன்று காலை 144ஐ மீறுவதற்கு இவ்விடமிருந்து திருச்சிக்கு பிரயாணமாயிருக்கிறார்கள். தங்களது மீறுதலால் எவ்வித கலகமும் பலாத்காரமும் நடைபெறாது என்று உறுதி கூறி திருச்சி பொது மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதாகவும் தங்களை அவசியம் மீற வேண்டும் என்பதாக மனபூர்வமாய் ஆமோதித்திருப்ப தாகவும் திருச்சியில் இருந்து இன்று மாலை தந்தி கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சியில் கோவிலதிகாரிகளின் பலாத்காரம்
திருச்சி மலைக் கோட்டை கோயிலுக்கு சுவாமி தரிசனைக்கு திருவா ளர்கள் ஜே. என். ராமநாதனும் மற்றும் அவர்களின் பல நண்பர்களும் சென்றதற்காக கோவில் அதிகாரிகள் காலிகளை வைத்து வழிமறித்து அடிக்கும்படி ஏற்பாடு செய்து நன்றாக அடித்து துன்பப்படுத்திவிட்டதாக திரு. ராமநாதன் அவர்களால் திருச்சி நியாயஸ்தலத்தில் கோவிலதிகாரிகளின் மீது பிராது தொடரப்பட்டிருக்கின்றது. இந்த பிராதுக்கு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பீசு இல்லாமல் ஆஜராகி வழக்கை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்திரவை மீறி நடப்பதற்காகவும் மேல்கண்ட விவகாரத்தை நடத்து வதற்காகவும் ஏற்படும் செலவுக்காக பொது மக்கள் தங்களால் கூடுமான பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – வேண்டுகோள் – 24.06.1928