பொய்ச் சமாதானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மண்ணடியில் ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி ஒன்றும் பேசவில்லை, ஒன்றும் பேசவில்லை என்று அய்யங்கார் பத்திரிகைகளும் அவரிடம் கூலி வாங்கும் பத்திரிகைகளும் விளம்பரப் படுத்திய வண்ணமாகவே இருக்கின்றன. அய்யங்கார் சொன்னதாக வைத்துக் கொண்டாலும் யாருக்கும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. தொழிலாளிகளை ஏமாற்றும் விஷயத்தில் ஸ்ரீமான் அய்யங்காருக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் தயவு வேண்டி வந்து விட்டதால் கூலி கொடுத்து மறுக்கிறார். ஆனால் நன்னிலத்தில் ஸ்ரீமான் நாயுடுகாரை தென்னாட்டுத் திலகரும் மாறி விட்டார், முதலியார் மாரீசனாய் விட்டார், ஆரியாவும் நாயக்கரும் வெளிப் படையாய் காங்கிரசுக்கு விரோதமாய்ப் போய் விட்டார்கள்; இவர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்தும் வேலையையே இவ்வருஷம் செய்யப் போகிறேன் என்று சொன்னதோடு கூட்டத்தில் இருந்த ஒருவர் முதலியார் கூடவா மாறி விட்டார் என்று கேட்டதற்கு ஏழு கிணத்து வீதியில் போய் கேட்டால் தெரியு மென்று சொன்னாரே; இதுகள் அப்போதே பல பத்திரிகைகள் இருந்ததே அதுகளை ஏன் மறுக்கவில்லை? அல்லாமலும் அப்போது தான், டாக்டர் நாயுடுவைப் பற்றி பேசவில்லை மற்றவர்களைப் பற்றித்தான் பேசினேன் என்று சொன்னதோடு, டாக்டர் நாயுடுவுக்கும் கடிதம் கூட எழுதினார். இவை கள் உண்மையா இல்லையா? அப்படியிருக்க இப்போது முதலியாரைப் பற்றி ஒன்றும் பேசவில்லை என்பதை இவ்வளவு விளம்பரப் படுத்த வேண்டிய அவசியமென்ன? முதலியார் வசமிருக்கும் வாயில்லாப் பூச்சி களாகிய தொழி லாள சகோதரர்களை ஏமாற்றி அவர்களது ஓட்டுக்களை ஸ்ரீமான் முதலியார் மூலம் பெறுவதற்கல்லாமல் வேறு காரண மென்ன? ஓட்டுத் தீர்ந்த மறுநாள் ஸ்ரீமான் முதலியாரும் இன்னும் அவரை விட பெரியவர்களும் காங்கிரசை விட்டு ஒழிந்தாலல்லாமல் ஸ்ரீமான் அய்யங் கார் காரியம் நடக்காது என்பது ஸ்ரீமான் முதலியாருக்குத் தெரியா விட்டா லும் தெருவில் போகிறவர்களுக்கெல்லாம் தெரியும். ஸ்ரீமான் முதலியாரோ, நாயுடுகாரோ, நாயக்கரோ, ஆரியாவோ, சக்கரையோ இன்னும் யார் போய் விட்டாலும் அய்யங்காருக்கு எவ்விதக் குறைவும் வந்து விடாது என்பது நமக்கு நன்றாய் தெரியும். இவர்களுக்குப் பதிலாக ஸ்ரீமான்கள் பாவலர், கந்தசாமி செட்டியார், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, இரத்தினசபாபதி முதலியார், மாரிமுத்து பிள்ளை, ஷாபி மகம்மது, அமித்கான், குழந்தை, ஆதிகேசவ நாயக்கர் முதலிய கனவான்கள் இருக் கிறார்கள் என்பதும் இவர்களும் விலகி விட்டால் இவர்களை விட இன்னும் மேலான ஆயிரம் பேர்கள் ஸ்ரீமான் அய்யங்காருக்குக் கிடைப் பார்கள் என்பதும், நமது உறுதியே ஒழிய முதலியார் நின்று போனால் அய்யங்கார் கல்யாணம் நின்றுவிடும் என்று நாம் நினைக்கவில்லை. பொது வாக நமது அய்யங்கார், அய்யர் முதலியவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆள் சேர்க்கும் விதத்தையும், அவர்களை ஒழிக்கும் விதத்தையும், அவர் களுக்கு பதிலிகள் நியமிக்கும் விஷயத்தையும் பொது ஜனங்கள் உணர வேண்டுமென்றே குறிப்பிட்டோமே அல்லாமல் வேறல்ல.

குடி அரசு – கட்டுரை – 24.10.1926

You may also like...

Leave a Reply