செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாக பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களே தான் பெரும்பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம் மாதிரி தொட்டதற்கெல்லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும் கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம் பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயலாகவும் பெரியோரின் ஞான மாகவும் ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக் கும் மற்ற நாட்டார் எல்லோரும் தங்கள் புத்திக்கும் முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தியாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வர வேண்டும். அம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னடைந்தே தீரும்.

இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந் நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம், சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கியமானவை. அவைகளைப் பற்றி எனது அபிப்பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாக சொன்னார்கள்.

கிராம சீர்திருத்தம்

அவைகள் உண்மையாகவும் இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக் கும் கிராம வாசிகள் முன்னேற்றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத்தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதி நிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால் ஒவ்வொரு வரும் தம்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப் படுத்தியோ தாங்கள் ஓட்டுப் பெற்றோ மக்களின் நம்பிக்கை பெற்றோ சுயநலமடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது. உதாரணமாக எங்கள் ஜில்லாக் களில் அனேக கிராமங்கள் அக்கிராமச் சொத்தைவிட அதிகமான கடனுக்கு ஆளாகி கிராம மிராசுதார்கள் வெளி நாட்டு லேவாதேவிக்காரர்களுக்கு தங்கள் சொத்துக்கள் முழுவதையும் அடமானம் செய்திருக்கிறார்கள். இதற்கு காரணம் விளைவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. அல்லது விளைபொருள்களுக்கு விலை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இவற்றுள் அனேக கிராமங்கள் வருஷம் மூன்று போகம் விளையக் கூடிய தண்ணீர் வசதிகளையும் நிலத் தோட்டத்தையும் நிரந்தரமாய் உடையவைகள். நெல், வாழை, கரும்பு, பருத்தி, புகையிலை, மஞ்சள் முதலிய விலை உயர்ந்த விளை பொருள்களையே அதிகமாக வெள்ளாமை உடைய பூமிகளாகவே இருந்து வருகின்றன. இப்பூமிகளை உடைய விவசாயிகளும் லேசான மிராசுதார்கள் அல்ல. அதாவது ஒவ்வொரு மிராசுதாரனும் வருஷம் ஒன்றுக்கு 1000 சலகை 2000 சலகை 3000 சலகை என்கின்ற எண்ணிக்கையான தானிய வருவாய் உடையவர்கள். (ஒரு சலகை நெல் 12 ரூபாய் விலை பெறுமானது)

இப்படிப்பட்ட மிராசுதார்களே 10 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சம் ரூபாய்கள் 100-க்கு 10 முதல் 15 வரை வட்டியுள்ள கடனாளிகளாக இருக்கின்றார்கள் என்றால் சிறிய மிராசுதார்களைப் பற்றி விளக்க வேண் டுமா? கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக்கூடம் கட்டுவதும் பஜனைமடம் உண்டாக்குவதும், உத்சவங்கள் செய்விப்பதும அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட் டால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்து விடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறிவையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலைமையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும். கிராமவாசிகள் கள்ளுக்கடை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்கு திருட அனுமதி கொடுத்து, அவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக்களித்து அபயம் கொடுத்து அவர்களிடம் திருட்டில் பங்கு வாங்கி உற்சவம் செய் கிறார்கள். வெறும் புராணப்படிப்பைச் சொல்லிக்கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும் கருமாதிக் கும் கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும் யாத்திரைக்கும் உற்சவத்திற்கும் சமாராதனைக்கும் சிலவு செய்து அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும் மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்ய பழகிவிடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும் மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண் டும் சாம்பலை பூசிக்கொண்டும் குடும்பத்தை கவனிக்காமல் பாஷாண்டி களாய் திரிவதும் புது நாகரீகம் என்னும் பேரால் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு மோட்டார் வண்டி யென்றும் அனுபவிக்க உயர்ந்த சாமான்கள் என்றும் உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள் தேவைகளுக்கு மேலும் தங்கள் அனுபவிக்கவேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களை செலவு செய்து விடுகின்றார்கள். போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப்பிரதிநிதித்துவம் என்று சொல்லப்படும் ஸ்தானங் களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலூகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய்கள் வரை தேர்தல்கள் செலவும் அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன. மற்றபடி ஒழுக்கங்களிலும் மிராசுதாரர்களாயிருக்கிறவர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களை கவனியாமலும் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லாமல் கொடுமைப் படுத்துவதும் அதனால் இம்மாதிரி மிராசுதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்ற வர்களாகி தங்கள் வேலையாட்கள் வெளியாட்கள் முதலானவர்களுடன் இன்பம் அனுபவிக்க துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவரவர்கள் கையில் சிக்கின பணத்தை பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரியங்களில் வக்கீல் களுக்கும் அதிகாரி களுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சிநேகத்திற்காகவும் பட்டம், பெருமை, முதலியவைகளுக் காகவும் பொருள்களை கவலையின்றி வாரி இறைத்து கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும் கிராம மிராசுதாரர்களும் 100-க்கு 80 பேருக்கு மேலாக கடன்காரர்களாகவும் ஒழுக்கமில்லாதவர் களாகவும் குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வருவதை நாம் தினமும் பார்த்துவருகின்றோம்.

இக் குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்த காரணத்தாலாவது நமது கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன்.

எனவே இக் குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்த்திருத்த இயலோ, இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.

உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் திருத்தமடைய வேண்டுமானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னுடைய 35 வருஷ கிராமவாசிகளுடை யவும் மிராசுதாரர்களுடைய சினேக அனுபவத்தினாலேயே சொல்லு கின்றேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இரு பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் வரும்படி உடைய பெரிய பெரிய குடும்பத் தாரின் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும் சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.

இயற்கைப் பாடம்

இனி இயற்கைப் பாடம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு மிக்க அவசிய மானதாகும். ஆனால் அநேக உபாத்தியார்களுக்கு இயற்கைத் தத்துவம் இன்னதென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும்.

நமது மக்களின் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதே தான். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம்மால் தெய்வத் தன்மையென்றும் அற்புதம் என்றும், சொல்லத்தக்கதான அநேக ஆச் சரியப்படத்தக்க காரியங்களை செய்து கொண்டும் இனியும் அநேக ஆச் சரியங்களைக் கண்டு பிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கை யின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே காரணமாகும்.

நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தை சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக் கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, “எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம்மதம் இல்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப்பை யும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல்நாட்டாரோ அப்படி இல்லாமல், “மனித னால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலனடை வாய். உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது நம்பிக் கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது” என்று சொல்லிக் கொடுக்கின்றார்.
மழை பெய்யாவிட்டால் பார்ப்பானுக்கு பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.

மேல் நாட்டார் மழை பெய்யாததற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத்தை கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக்கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத்தக்க அறிவுப் பெருக்கத்திற்கு நாம் குழந்தைகளை பழக்குவதில்லை.

குழந்தைகள் இயற்கை விசாரணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும் அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.

இவ்விதம் அடக்கும் தன்மையை பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ் திகம் ஆகும் என்றும் சொல்லி பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடுமையேதான் முக்கிய காரணமாகும்.

மதத்தையும் கடவுளையும் நினைத்ததற்கெல்லாம், எடுத்ததற் கெல்லாம், தொட்டதற்கெல்லாம் சம்மந்தப்படுத்தி ‘எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல்’ என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும்.

குறிப்பு:- 19.05.1928 அன்று பூந்தமல்லி கண்டோண்ட்மெண்ட் கட்டிடத்தில் நடந்த செங்கல்பட்டு ஜில்லா ஆரம்ப ஆசிரியர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து ஆற்றிய உரை – தொடர்ச்சியின் இறுதிப்பகுதி.


குடி அரசு – சொற்பொழிவு – 03.06.1928

You may also like...

Leave a Reply