ஸ்ரீ வரதராஜுலுவின் மற்றொரு சபதம்

ஸ்ரீ வரதராஜுலு நாயுடு 10-ந் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையில் பின் வருமாறு எழுதுகிறார்:-

“சமதர்மம் நிலைபெற உழைப்பதே எனது நோக்கம். இரண்டு வருஷங்களாக எச்சரித்து வந்தேன். நாயக்கர் சீர்படவில்லை. வெற்றி தோல் வியை பற்றி எனக்கு கவலை இல்லை. நாயக்கர் பிரசாரம் தொலைய வேண்டும் அல்லது நான் தொலைய வேண்டும். நான் எதற்கும் துணிந்தவன் என்பது தங்களுக்குத் தெரியும். பிராமணரல்லாதாருக்குள் போராட்டம் வேண்டாமென்றே இதுவரையில் பொறுத்திருந்தேன். இனிமேல் நான் சும்மாயிருந்தால் அது தேசத்துரோகமாகும். ‘திராவிடனை’ப் பற்றி கவலை இல்லை. நாயக்கர் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தாரென்பதற்காக ஒரு சில நண்பர்கள் அவர் சொல்வதை கேட்கிறார்கள். அந்த தப்பு அபிப்பிராயத்தை போக்குவதே எனது பிரசாரத்தின் நோக்கம். குருnக்ஷத்திர பூமியில் தயங்கி நின்ற அர்ஜுனனுக்கு துணைபுரிந்த திரு. கிருஷ்ணபகவான் ஒருவரே எனக்குத் துணை. இன்றைய தமிழ்நாட்டு நிலைமை இதுவேயாகும். நாயக்கர் பிரசாரத்தில் வந்தவினை இது தான்”.

இது எத்தனையாவது சபதம் என்பதும் இனியும் இது போல் எத்தனை சபதம் பிரசுரம் வெளியாகப் போகிறது என்பதையும் பொது ஜனங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டுகிறோம். 30.4.28 தேதி தலையங்கத்தின் கீழ் பஞ்சம மந்திரி பாதபூஜை செய்வது தனது பாக்கியம் என்றார். இன்று, ஒன்று நாயக்கர் பிரசாரம் தொலையவேண்டும் அல்லது தான் தொலைய வேண்டும் என்கிற பிரயத்தனத்தில் இறங்கி விட்டதாகக் கூறுகிறார். இனி எதில் இறங்கி விடுவாரோ?

குடி அரசு – செய்தி விளக்கம் – 13.05.1928

You may also like...

Leave a Reply