“ரிவோல்ட்”
‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையின் பதிப்பாளராகவும் வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்துகொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.4.28 இல் மறுபடியும் கோர்ட்டுக்கு போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.
பிறகு போலீசார் ‘ரிவோல்ட்’ என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
“ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:-
இப்பவும் ³ பிரசில் ‘ரிவோல்ட்’ என்கின்ற ஆங்கில வாரப்பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் ‘குடி அரசு’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுநஎடிடவ என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார்.”
இதன் மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரியவில்லை.
குடி அரசு – அறிக்கை – 22.04.1928