சுயமரியாதைத் திருமணங்கள்
இந்த வாரம் அநேக இடங்களில் இருந்து சுயமரியாதைத் திருமணங் கள் நடந்ததாக சமாச்சாரங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் பெரிதும் பார்ப்பனர்களை விலக்கி நடத்தியதாக மாத்திரம் தெரிய வருகின்றனவேயல்லாமல் மற்றபடி அவை முழுவதும் சுய மரியாதைத் தத்துவப்படி நடைபெற்றிருப்பதாக சொல்லுவதற்கில்லா மலிருப்பதற்கு வருந்துகின்றோம். ராமநாதபுரம் ஜில்லா சுக்கிலநத்தத்தில் நடந்த மூன்று திருமணங்களையும் மதுரையில் நடந்த ஒரு திருமணத் தையுமே பரிபூரண சுயமரியாதைத் திருமணங்களென்று சொல்லலாம். சுயமரியாதைத் திருமணத்திற்கும் அது அல்லாத திருமணத்திற்கும் நாம் குறிப்பிடும் வேறுபாடுகள் என்ன வெனில்,
சுயமரியாதை அற்ற திருமணமென்பது
1. மற்றவர்களைக் காட்டிலும் ஜாதியாலோ சமயத்தாலோ தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிற ஆச்சாரியன் என்பவனைக் கொண்டு மணச்சடங்கு நடத்துவது.
2. மணமக்களுக்கு, மணமக்கள் அறியாத பாஷையில் சடங்கு வாக்கியங்களைச் சொல்வது.
3. மணமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருள் விளங்காத சடங்குகளைச் செய்விப்பது.
4. இன்னின்ன காரியத்திற்காக இன்னின்னவைகளைச் செய்கிறோம் என்கின்ற குறிப்பில்லாமல், வழக்கம், பழக்கம், பெரியவாள் காலத்தில் ஏற்பட்டது என்கின்ற குருட்டு நம்பிக்கையின் பேரில் காரியங்களைச் செய் வது ஆகிய இவைகளும் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளும் கொண்ட மணங்களை சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்.
தவிர, மணமக்கள் விஷயத்திலும் போதிய வயது முதலிய பொருத்த மில்லாததும், பெண்ணின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லா மல் பெற்றோர்கள் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுதான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சுக்கில நத்தத் திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் என்றே சொல்ல வேண்டும். முதலாவது மணமக்கள் ஒருவரை ஒருவர் அன்புங் காதலும் கொண்டு தாங்களாகவே சம்மதங் கொண்டவர்கள். இரண்டாவது, திருமணத்தின்போது முன் சொன்னக் குற்றங்களில்லாமல் பரிசுத்தத் தன்மையாகவே நடைபெற்றன. அதாவது மணமக்களை வெகு சாதாரண உடையில் சுமார் 2000 பந்துக்களும் பொதுமக்களும் நிறைந்த கூட்டத்தின் நடுவில் கொண்டு வந்து இருத்தி மணமக்களின் பெற்றோர் எழுந்து சபையாரை நோக்கி “இன்று இங்கு எழுந்தருளியிருக்கும் பெரியா ரான திருவாளர் ராமசாமி நாயக்கரவர்களை எனது மகனின் திருமணத்தை இனிது நடத்திவைக்கும்படி நான் வேண்டிக்கொள்ளுகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். திரு. நாயக்கர் எழுந்து சபையோரைப் பார்த்து “மண மகனின் தந்தையார் வேண்டியபடி நாம் நடத்தி வைக்கப் போகும் திருமண மானது இனிது நடைபெறவேண்டும்” என்றும் “மண மக்களும் சுற்றத்தாரும் எல்லாப் பேறும் பெற்று இன்பமாய் நீடூழி வாழ வேண்டும்” என்றும் எல்லாம் வல்ல சக்தியை இறைஞ்சி ஆசீர்வதிக்கும் படியாய் வேண்டிக் கொண்டார். சுற்றத்தாரும் பொதுமக்களும் ஒரு நிமிஷம் அவரவர் வழிபடும் சக்தியை பிரார்த்தித்து ஆசீர்வதித்தார்கள். பிறகு நாயக்கர் மணமக்களைப் பார்த்து சொல்லும் படி கேட்டுக் கொண்டதாவது:-
“எல்லாம் வல்ல சக்தியின் அருளால் நமது இல்லற வாழ்க்கைக்கு அரிய துணையாக தங்களைப் பெறுகிறேன். தங்களைப் பேணுவதில் தங்களருமைத் தாய் தந்தைகளைப் போலவும் இல்லறத்தை நடத்துவதில் தங்களுக்கு உண்மையான அமைச்சராகவும் அருமைத் தோழியாகவும் இருந்து வருவதோடு என் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் தாங்கள் செல்லும் நல்வழியில் தங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்படியாக யான் எச்செயலையும் செய்யவும் உடன்படுகிறேன். நாம் இருவரும் உடலும் உயிரும் போலவும் கண்ணும் இமையும் போலவும் ஒருவருக்கொருவர் உதவியாயிருக்க அருள் புரியுமாறு எல்லாம் வல்ல சக்தியை வணங்கி இம் மாலையைத் தங்களுக்கு சூட்டுகின்றேன்” என்று சொல்லி மணமகள் மணமகனுக்கு மாலை சூட்டினார். அதுபோலவே மணமகனும் சொல்லி மங்கல நாணை மணமகளுக்கு பூட்டினார். மற்றும் ஒரு முறை சபையோர் ஆசீர்வதித்தார்கள். சிலர் எழுந்து நின்று இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லி ஆசீர்வதித்தார்கள். மணமக்கள் மணத்தை ஒப்புக் கொண்டதற்கறி குறியாக மாலைகளை மாற்றிக் கொண்டார்கள்.
கடைசியாக மணமக்கள் எழுந்து நின்று தங்களுக்கு திருமணம் செய்வித்ததற்காக வணக்கம் செய்வதின் மூலம் நன்றி செலுத்திவிட்டு இருவரும் “நமது இல்லற வாழ்க்கையை ஒழுங்காக நடத்தவும், காதலின் பத்தை அனுபவிக்கவும், உலகிலுள்ள மக்கட்கு நம்மாலான உதவி புரியவும், குடும்ப வாழ்க்கையை ஏற்று நடத்திச் செல்வோம்.” என்று சொல்லிக் கொண்டே நடந்து அம்மியை மிதித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
(குறிப்பு:- இந்த இடத்தில் அம்மியை மிதிப்பதற்கும் மணவரையைச் சுற்றுவதற்கும் பொருள் இன்னதென்று விளங்கவில்லையானாலும் இந்து லாப்படி இவ்விரு சடங்கும் செய்தால்தான் மணம் செல்லுபடியாகும் என்றிருப்பதால் இவற்றைச் செய்ய வேண்டி நேரிட்டது.)
மணமக்களின் பெற்றோர்கள் இம்மாதிரி திருமணம் நடத்த வெகு ஆவலோடு இருந்தார்கள் என்பதையும் மற்றபடி மூடப்பழக்க வழக்கங் களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லையென்பதையும் பொது ஜனங்கள் உணர்வதற்கு ஒருசிறு உதாரணமே போதுமானது. அதாவது மணமகளின் பெற்றோர் பல லட்சத்திற்கு அதிபதிகளாயிருந்தும் மணமக்களுக்கு புது உடை கூட உடுத்துவிக்காமலும், மணப்பெண்ணுக்கு சாதாரணமாய் அணிந்திருக்கும் அணியை விட விசேஷ நகையொன்றும் பூட்டாமலும், மணமகன் சாதாரண வேஷ்டியுடனும் ஒரு சிறுதுண்டை மேல் வேஷ்டியாக அணிந்திருந்ததோடு ஒரு காசளவு பொன்னோ வெள்ளியோ அணியாமலும் வெகு இயற்கையழகோடு வந்து வீற்றிருந்தார்கள். நிற்க திருமணச் சடங்கு தொடங்கும்போது ஒரு பெரிய அம்மையார் மணமக்களின் முன்பாக ஒரு குத்து விளக்கை வைத்து விளக்கு ஏற்ற நெருப்புக் குச்சியை உரைக்கும் போது மணமகளின் தகப்பனரான ஸ்ரீதுரைசாமி ரெட்டியார் எழுந்து “எதற் காக இங்கு விளக்குப் பற்றவைக்க வேண்டும்? பகல் 11 மணி நேரத் துக்கு இங்கு இருட்டாகவா இருக்கிறது? அனாவசியமாக அர்த்தமில்லாததைச் செய்யாதீர்கள்” என்று தடுத்துவிட்டார். தவிர வேறு எவ்வித சடங்கையும் வைத்துக் கொள்ளவில்லை. மற்றபடி ஒரே ஒரு சடங்கில்தான் எல்லோரும் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது பகல் 12-மணிமுதல் இரவு 2-மணி வரையிலும் வந்திருந்த சுமார் 5000 பேருக்கு குறையாமல் சாப்பாடு போட்ட வண்ண மாகவே இருந்தார்கள். பலர் மூட்டை கட்டிக் கொண்டு போன வண்ண மாகவே இருந்தார்கள். ஒரு ஊர்வலமும் நடந்தது.
நிற்க மறுநாள் காலையில் நாயக்கரும் அவர்கள் சகாக்களும் ரெட்டி யார் அவர்களிடம் விடை பெற்றுக் கொள்ளும்போது ரெட்டியார் சொன்ன தாவது:-
“தாங்கள் இங்கு வந்தது எனக்கு பெருமையும் திருப்தியும் அளிக்கத்தக்கதாய் இருக்கிறது. தங்களால் நடத்தி வைக்கப்பட்ட இத் திருமணங்களைப் பற்றி என் சுற்றத்தார்களும் நண்பர்களும் நேற்றுப்பகல் 11 மணி முதல் மாலை 6மணி வரை குற்றம் சொல்லிக் கொண்டும் பரிகாசம் செய்து கொண்டும் இருந்தார்கள். ஆனால் நேற்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை நிகழ்த்திய தங்களுடையவும் தங்கள் சகாக்களுடையவும் பிரசங்கங் களைக் கேட்ட பின்பு ஒவ்வொருவரும் திருப்தியடைந்ததோடு இனி தாங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு சடங்கையும் இப்படியே செய்வதாக தீர்மானித்துக் கொண்டும் முதல் முதல் இச்சடங்கை நானே செய்து காட்டிய பாக்கியம் பெற்றதற்காக பாராட்டிவிட்டும் சென்றார்கள்”
எனவே, நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் அர்த்தமற்ற சடங்குகளை விலக்கு வதும் ஆடம்பரமற்ற முறையில் அதாவது அனாவசியமான வழியில் பெருமைக்காகப் பணத்தைச் செலவாக்காமல் இருப்பதும் கல்யாணங்களை பல நாட்கள் நீடித்து நடத்தாமல் ஒரே நாளில் முடிப்பதும் ஆகிய காரியங் களை முக்கியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் நடக்க வேண்டுமென்ப தற்காகவே அம்மாதிரி நடத்திய ஒரு பெரியாரின் செயலை ஆதாரமாகக் கொண்டு இத்தலையங்கம் எழுதியிருக்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 03.06.1928