ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் ‘ஞானோதயம்’
ராஜீய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும் அவர்களது வால்களினுடையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத்தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில் அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப்போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளிவந்து விட்டார்.
முதலாவதாக மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு ‘ஜஸ்டிஸ்’ கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக்கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜீனாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலை வைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போபவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப்பாளையம் ஜமீன்தாரிடம் 10000 ரூ. பொறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள் கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் குறைந்ததாக தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர் சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்யதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரம பிரசாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?
அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரசார தைரியத்தை வைத்துக் கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்ததான பூமியில் இருந்து கொண்டு “பத்மாசூரன் கதைபோல்” அந்த சமூகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியதனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவைகள் ஆகிவிடுகின்றது.
பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறு நன்மை காணப்பட் டால் அது திடீரென்று தேசீய அயோக்கியத்தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம்போலும். ‘நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்’ என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அது போல் பார்ப் பனரல்லா தாரிலே உள்ள கோடலிக் காம்புகளை நினைக் கும் போது ஸ்ரீ ராஜகோபாலாச் சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரிய மாகத் தோன்ற வில்லை.
குடி அரசு – தலையங்கம் – 01.04.1928