பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் சுற்றுப் பிரயாணம்
இவ்வருட இறுதியில் நடைபெறப்போகும் இந்தியா சட்டசபை, சென்னை சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு கூடுமானவரை நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை அழுத்தி, பார்ப்பன ஆட்சியை நிலைநாட்ட பல வழிகளிலும் செய்து வரும் சூழ்ச்சிகள் நமது நாட்டில் அறியாதார் இருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஆனாலும் பார்ப்பனரல்லாதாரில் சில சுயநலக்காரர்களையும் வயிறு வளர்க்க வேறு வகையில்லாதவர்களையும் ஆயுதமாகக் கொண்டு பாமர மக்களை ஏமாற்ற நமது பார்ப்பனர் செய்து வரும் தந்திரங்களைக் கண்டு நாம் பயப்படாம லிருக்கவும் முடியவில்லை. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தியா சட்டசபை தேர்தலுக்கும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் காங்கிரசின் பேரைச் சொல்லிக்கொண்டும் சுயராஜ்யம் பெறுவதற் கென்றும் நிறுத்தப் பட்டிருக்கும் ஆசாமிகளை கவனிக்கும் போது பாமர ஜனங்கள் இதை நம்பி இந்த ஆசாமிகளுக்கு ஓட்டுக் கொடுத்து சட்டசபைகளுக்கு அனுப்பி விட்டால் கண்டிப்பாய் பார்ப்பன ஆட்சிக்கு வழி ஏற்பட்டுவிடுமென்பதில் சந்தேக மில்லை. எப்படியெனில் சென்னை முதல் திருநெல்வேலி வரை யிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்கள் சற்றேறக்குறைய எல்லோருமே பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பாடுபடுபவர்களும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு சம்மதப்படு பவர்களுமாகவே காணப்படுகிறார்கள். இந்த நிலைமையில் சுத்த ரத்த ஓட்டமுள்ளவரும் சுயமரியாதை உடையவருமான பார்ப்பன ரல்லாதார் இதை எப்படிச் சகித்திருக்க முடியும்? என்பது நமக்கு விளங்க வில்லை. கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, தென் னார்க்காடு, சென்னை முதலிய ஜில்லாக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்குக் குறையாத பார்ப்பனரை நிறுத்தி இருக்கிறார்கள். அதாவது ஸ்ரீமான்கள் கோவைக்கு ஸி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார், திருச்சிக்கு ஆர். சேதுரத்தின மய்யர், தஞ்சைக்கு கே. எஸ். வெங்கிட்டராமய்யர், தென்னார்க்காடுக்கு சீனிவாசய்யங்கார், மதுரைக்கு முத்துகிருஷ்ணய்யர், திருநெல்வேலிக்கு சாது கணபதி பந்துலு, மதுராசுக்கு மல்லையா முதலிய கனவான்களை நியமித்திருக்கிறார்கள். இந்த கனவான்கள் சென்ற நான்கு ஐந்து வருஷம் காங்கிரசுக்காக என்ன செய்தார்கள்? எவ்வித தியாகத்தில் ஈடுபட்டவர்கள்? நிர்மாணத் திட்டத்தில் எதில் நம்பிக்கையுள்ளவர்கள்? பகிஷ்காரத் திட்டத்தில் எதை பின் பற்றிய வர்கள்? எதை ஒப்புக் கொள்ளுகிறவர்கள்? ஒத்துழையாமையின் போது இவர்கள் எங்கிருந்தார்கள்? தேவஸ்தான மசோதா விஷயத்திலும் குருகுல விஷயத்திலும் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? குடியான வர்களுக்கும், தொழிலாளிகளுக்கும், ஏழைகளுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆகிய இவைகளைப் பற்றி யோசித்துப் பார்த்தால் எவ்வளவு முட்டாளாயிருந்தாலும் இதன் இரகசியம் விளங்காமல் போகாது. பத்திரிகை செல்வாக்காலும் பணம் கொடுத்து பிரசாரம் செய்வதாலும் பாமர மக்களின் கண்ணைக் கட்டிவிட்டு சட்டசபை ஸ்தானங்களை கொள்ளை யடித்துக் கொண்டு போகப் போகிறார் கள். இதைப் பற்றி பார்ப்பனரல்லாத தேசீயப் பத்திரிகைகள் ஒரு எழுத்தா வது எழுதுவதில்லை. பார்ப்பனரல்லாத தேசீயத் தலைவர்கள் என்போரும் ஒரு வார்த்தையாவது பேசுவதில்லை. நமது பார்ப்பனர்கள் பார்த்து முனிசிப லாபீசில் மகாத்மா படம் தொங்கவிட ஜஸ்டிஸ் கட்சியார் அனுமதிக்க வில்லை என்று ஒரு கட்டு கட்டிவிட்டால் அதைப்பற்றி சரியாய் விசாரிக்காமல்கூட “கங்காதரா மாண்டாயோ, கங்காதரா மாண் டாயோ” என்று எல்லா பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் கூப்பாடு போட ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் இம்மாதிரி கொடுமைகளைப் பற்றிப் பேச, எழுத பயப்படுகின்றன. என்ன செய்யலாம் பார்ப்பன ஆட்சியின் ஆதிக்கம் அவ்வளவு வலுவடைந்திருக்கிறது; அவ்வளவு நடுங்கச் செய்கிறது. பார்ப்ப னரைப் பற்றி பார்ப்பனரல்லாதார் ஏதாவது சொல்லி விட்டால் ஏன் சொன் னான், எதற்காகச் சொன்னான் என்று யோசிக்காமலும் விசாரிக்காமலும் வக்காலத்து வாங்கிக்கொண்டு சிபார்சுக்கு வந்து விடுகின்றன. பார்ப்பனர்கள் சொல்லுவதும், எழுதுவதும் இதுகளின் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை. ஒவ்வொரு ஜில்லாவுக்கும் நிறுத்தப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத கனவான்களின் பெயரைப் பார்த்தாலோ பார்ப்பனாதிக்கத்திற்காக பார்ப்ப னரை விட ஒருபடி முன்னிற்பவர்களாகப் பார்த்தே நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும், வட ஆர்க்காட்டிற்கும், தென் ஆர்க்காட் டிற்கும், தஞ்சைக்கும், திருச்சிக்கும் மற்ற ஜில்லாக்களுக்கும் நிறுத்தப்பட் டவர்கள் யார்? சென்னைக்கு நிறுத்தப்பட்டவர் ஒருவர் தன்னையே பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்; மற்றவர் பார்ப்பனரல் லாதாருக்கு மூளையில்லை என்று சொல்லுபவர். செங்கல்பட்டுக்கு நிறுத்தப் பட்டவரோ ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரைவிட ஒருபடி மேல்பட்ட வருணாசிரமதர்மி, பார்ப்பனர் தலைமேல்தான் உலகம் நிற்கிறதென்று நினைத்துக் கொண்டிருப்பவர். வட ஆர்க்காடோ சொல்ல வேண்டிய தில்லை. ஒருவர் அப்புறத்திய ஜில்லாக்காரர்; மற்றவர் இப்புறத்திய ஜில்லாக் காரர். அந்த ஜில்லாவுக்கு இதை விட வேறு அவமானமே வேண்டிய தில்லை. இருவரும் பார்ப்பனர் பார்த்து போடு கரணம் என்றால் இதோ போடுகிறேன், எண்ணிக் கொள்ளுங்கள் என்கிறவர்கள். இதே மாதிரியான ஆட்களைத்தான் மற்ற ஜில்லாக்களுக்கும் போட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களாகிய நாம் இதைச் சகித்துக் கொண்டிருப்பதா என்றே கேட்கிறோம். இந்த நாட்டு நன்மை தின்மை பெரும்பாலும் யாருக்குச் சேர்ந்தது? சட்டசபையின் பலாபலனை அனுபவிப்பவர்கள் யார்? யார் வந்து யாரை நிறுத்துவது? சுத்த ரத்தோட்ட முள்ளவர்களுக்கு இதெல்லாம் தோன்ற வேண்டாமா? யாரோ தெருவில் போகிறவன் காங்கிரசென்று சொல்லிக் கொண்டு நம்ம வீட்டிற்குள் புகுந்து எதை எடுத்துக் கொண்டு போனாலும் நாம் கை கட்டிக் கொண்டிருப்பதா? நாம் என்ன பஞ்சபாண்ட வர்களாகி விட்டோமா? இன்றைக்கு பஞ்சபாண் டவர்களாகி விட்டால் நாளைக்கு வாவென்றால் வருமா? இவற்றை நினைத் தால் இரத்தம் துடிக்கிறதே, நெஞ்சம் குமுருகிறதே, கேழ்வியில்லையா? இதுதானா தமிழ் மக்கள் அறிவு? இதுதானா தமிழ் மக்கள் வீரம்? வீணாக பாட்டிக் கதை பேசுவதில் லாபம் இல்லை. தயவு செய்து விழித்தெழுங்கள். தட்டி எழுப்ப ஆட்கள் வரப் போகிறது. அதாவது:-
பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைக் காப்பாற்ற தென் ஜில்லாக்களில் சட்டசபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களைத் தெரிந் தெடுக்கவும் அவர்களுக்குள் பார்ப்பன சூழ்ச்சியின் பலனால் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களை நீக்கி ஒற்றுமைப்படுத்தவும் தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்டுப்பாடாய் ஓட்டுச் செய்து தேர்தல்களில் வெற்றி பெறச் செய்யவும் பார்ப்பன ரல்லாத பிரமுகர்களான ராமனாதபுரம் ராஜா, ஸ்ரீமான்கள் உத்தமபாளையம் சுப்பிரமணிய முதலியார், திருநெல்வேலி மார்த்தாண்டம் பிள்ளை முதலியவர்கள் இம்மாதத்திற்குள் சுற்றுப் பிரயாணம் வரப்போகிறார். பனக்கால் ராஜாவும் வருவார். ஆதலால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் வரப்பட்டவர்களை வரவேற்று அங்கங்குள்ள நிலைமையை நன்றாய் விளக்கி இப்பிரமுகர்கள் மூலம் பாமர ஜனங்கள் உண்மை நிலை மையை அறியும்படி செய்து நம்மவர்கள் சுயமரியாதையைக் காப்பாற்றப் படும்படியாக உதவி செய்ய வேணுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 05.09.1926