சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்”
வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புகிறவர்கள் யார்? பார்ப்பனர்களே.
நால்வகை வகுப்பு நாட்டில் உதித்த வகை
பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். எப்படி? “மோக்ஷம்” “சுயராஜ்யம்” என்கிற வார்த்தைகளால்.
நாம் போராடுவது சுயமரியாதைக்காகவே

நான் இன்று உங்கள் முன்னிலையில் பேசப்போகும் விஷயமானது கேவலம் தேர்தல்களைப் பற்றியோ, தேர்தல்களில் யாருக்கு ஒட்டுக்கொடுப் பது என்பதைப் பற்றியோ பேச வரவில்லை. இத் தேர்தல்களில் யார் ஜெயித் தாலும் யார் தோற்றாலும் நமக்குப் பெரிய லாபமும் நஷ்டமும் ஒன்றும் ஏற் பட்டு விடாது. ஆதலால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. எனக் குள்ள கவலை யெல்லாம், மக்களின் பெரும் பகுதியினராகவும் எல்லா வழி களிலும் இன்னாட்டிற்கு முக்கியமானவர்களாகவும் உள்ள நாம் தாழ்ந்தவர்க ளென்றும் அடிமைகளென்றும் கருதப்பட்டு சுயமரியாதையற்று கிடக்கி றோம். அன்னியர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறோம். ஆத லால் இவ்விதக் குறைகள் ஒழிய வழி தேட வேண்டியது இப்பொழுதுள்ள நமது முக்கியக் கடமை என்பதேயாகும். அவற்றிற்கு நம்மாலானதைச் செய்ய வேண்டுமென்றும் அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர் களென்றும் சொல்லித் தெரிந்து போகவே இங்கு வந்திருக்கிறேன். நமது தேசத்தில் இப்போது ஒரு வகுப்பார் சுயநலங் கருதி ‘காங்கிரஸ்’, ‘தேசீயம்’ ‘சுயராஜ்யம்’ என்கிற பல செல்வாக்குள்ள பெயர்களைச் சொல்லிக் கொண்டு நமது சமூகத்தை அழித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள இத் தேர்தல்களை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறபடியால் அவ் வேமாற் றத்தில் நீங்கள் ஏமாந்து போகக் கூடாதென்று சொல்ல வந்திருக்கிறேன் (கரகோஷம்) தயவு செய்து இனி மேல் கை தட்டாதீர்கள்.

தற்காலம் இந்நாட்டிலுள்ள ராஜீய வேஷங்கொண்ட பல பார்ப்பனர் கள் என்னை வகுப்புத் துவேஷக்காரனென்றும் வகுப்புக் கலவரங்களை மூட்டிவிடுகிறவனென்றும் சொல்லியும் எழுதியும் ஆள்களை விட்டுப் பிரசாரம் செய்தும் வருகிறார்கள். வகுப்புத் துவேஷமும் வகுப்பு வேற்றுமை களும் என்னால் ஏற்பட்டதா? அல்லது நம்நாட்டுப் பார்ப்பனர்களால் ஏற்பட்டதா? என்பதை நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். தயவு செய்து நீங்கள் என்னோடு எழுந்து வருவீர்களானால் இவ்வூருக்குள் சுற்றிப் பார்த்தால், பார்ப்பனர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு காப்பிக் கடைகளிலும் சாப்பாட் டுக் கடைகளிலும், ரயில்களில் உள்ள காப்பி சாப்பாட்டுக் கடை களிலும், சத்திரம் சாவடிகளிலும், கோயில் குளங்களிலும் இது பிராமணர் களுக்கு, இது சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கும் முகமதியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இங்கு சாப்பாடு, பலகாரம், தண்ணீர் வகையறா முதலியன கொடுக்கப்பட மாட்டாது; இந்த இடத்தில் சூத்திரர்கள் தண்ணீர் மொள்ளக் கூடாது; இந்த இடத்தில் சூத்திரர்கள் குளிக்கக் கூடாது ; இந்தப் பள்ளிக் கூடத்தில் சூத்திரர்களை சேர்த்துக் கொள்ள முடியாது; இன்னின்ன விஷயங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது; பிராமணர்கள் மாத்திரம் இது வரையில் செல்லலாம்; சூத்திரர்கள் இந்த இடத்திற்கப்புறம் போகக் கூடாது; இந்த வீதியில் சூத்திரர் குடியிருக்கக்கூடாது; இன்ன தெருவில் பஞ்சமர் நடக்கக் கூடாது என்று இன்னும் பலவாறாகப் போர்டுகள் போட்டும் நிர்பந் தங்கள் ஏற்படுத்தியும் பிரித்து வைத்துத் துவேஷத்தையும் வெறுப்பையும் இழிவையும் உண்டாக்கி வருவது நானா? அல்லது பார்ப்பனர்களா? என் பதைக் கவனியுங்கள்.

தாங்களே நம் ஜாதிகளைப் பிரித்து நம்மை இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்து விட்டு ஏனையா இப்படிச் செய்கிறீர்கள் ? இது தர்மமா? நியாயமா? என்று கேட்டால், நம்மை வகுப்புத் துவேஷக்காரன் என்றும் வகுப்புப் பிரிவினைக்காரன் என்றும் வகுப்புரிமைக்காரன் என்றும் சொல்லி கொன்று விடப் பார்த்தால் அதற்கு நான் பயந்து கொள்ளுவேனா என்று கேட்கிறேன். ரயில் வே ஸ்டேஷன்களிலுள்ள ஓட்டல்களை எடுத்துக் கொள்ளுங்கள். ரயிலில் பெரும்பான்மையாய்ப் பிரயாணம் செய்கிறவர்கள் நாமாயிருக் கிறோம். ஓட்டல்காரனுக்கு அதிகமான லாபம் கொடுக்கிறவர்கள் நாமாயி ருக்கிறோம். ஆனால் அந்த ஓட்டலுக்காக ரயில்வே அதிகாரிகள் கொடுத்த இடத்தில் முக்கால் பாகத்திற்கு மேலாக தாங்கள் எடுத்துக் கொண்டு கொஞ் சம் இடத்தை நமக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்திலும் எச்சில் போடவும் சாணி சட்டி விளக்குமார் வகையறாக்களை வைக்கவும் கை கழுவவும் செய்கிறார்கள். ஒரு பார்ப்பனன் குஷ்டரோகியானாலும் அவன் நேரே சமயலறைக்குப் போய் சுடச் சுட உள்ள பதார்த்தங்களில் தனக்கு வேண்டுமானதை அடுப்பிற்குப் பக்கத்திலிருந்தே எடுத்துச்சாப்பிட்டு விடுகிறான். நம்மில் எவ்வளவு பெரிய மனிதர்களானாலும் வெளியில் நின்று கொண்டு நாலாணாவைக் கையில் தூக்கி காட்டிக் கொண்டு, இடைச்சி மார்க்கு கட்டிப் பால் விளம்பரப் படத்தில் பெண்கள் கூட்டம் பால் கேட்பது போல் ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சாமி சாமி என்று கத்த வேண்டிய தாயிருக்கிறது. ஆறினதையும் ஈ, பூச்சி, புழுக்கள் வீழ்ந்த தையும் விற்காமல் தேங்கினதையும் நாம் வாங்கிச் சாப்பிட வேண்டியதாயிருக்கிறது. இந்த நிலையில் வகுப்பு வித்தியாசத்தையும் வகுப்புத் துவேஷத்தையும் வளர்க்கிறவர்கள் நாமா? இந்தப் பார்ப்பனர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம்முடைய பணத்தைக் கொண்டு மத சம்பந்தமான கல்விகளுக் கென்றும் வேத பாடசாலை என்றும் பெரிய பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்டிக்கொண்டு அதில் பிராமணர்கள்தான் படிக்கலாம், சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று சொல்லி நம்மைத் தள்ளி வைத்து விடுகிறார்கள். ஜாதி வித்தியாசத்தையும் வகுப்புத் துவேஷத்தையும் வளர்க்கிறவர்கள் நாமா? அவர்களா? நம்முடைய பணங்களிலேயே பெரிய பெரிய கோவில்கள் கட்டப்பட்டு, நம்முடைய பணங்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்பட்டு வரும் சுவாமிகளிடத்தில் நம்மைப் போகக்கூடாது என்று சொல்லுகிறார்கள். இதனால் வகுப்புத் துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள் நாமா? அவர்களா? ஆகவே இப்பொழுது ஜாதி வித்தியாசம் வளரக்கூடாதென்பதும் வகுப்புத் துவேஷங்கள் ஒழிய வேண்டுமென்பதும்தான் நமது கொள்கை. அதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். ஜாதி வித்தியாசங்களான மக்கள் உயர்வு, தாழ்வு என்பதை ஒழிப்பதற்கும் வகுப்புத் துவேஷங்கள் ஒழிவதற்கும் முட்டுக்கட்டையாயிருந்து வருகிறவர்கள் நாமா? அந்தப் பிராமணர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஜாதி வித்தியாசம் நிலைத்திருப்பதற்கும் வகுப்புத் துவேஷங்கள் வளருவதற்கும் நிரந்தரமான ஏற்பாட்டை பார்ப்பனர்களே செய்து வைத்துக் கொண்டு நம் மீது குறை கூறுகிறார்கள். நாம் இப்போது பார்ப்பனர்களைக் கேட்பதெல்லாம் எங்களையும் சமமாகப் பாவியுங்கள், எங்களைத் தாழ்ந்த வர்கள் என்று சொல்லி இழிவுபடுத்தி எங்களுடைய சுயமரியாதையைக் கொல்லாதீர்கள் என்பதையன்றி வேறில்லை. இதை அவர்கள் கொஞ்சமும் கவனியாமல் இந்த தேசத்தில் 100-க்கு 97 பேர்களாயிருக்கிற நம்மை சூத்திரர் களென்றும் தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதோடல்லாமல் நமக்கு இவர்கள் தர்மகர்த்தாக்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு சர்க்காருக்கு உள் உளவா யிருந்து எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் இவர்களே கைப்பற்றிக்கொண்டு நமக்குக் கொடுமை செய்துவருகிறார்கள். நாம் நமது சுயமரியாதைக்காகத்தான் இவ்வளவு பிரயத்தனப்படுகிறோமேயல்லாமல் கேவலம் இந்த உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டல்ல. ஆனால் நமது பார்ப்ப னர்கள் இந்த உத்தியோகங்களைக் கைப்பற்றிக் கொண்டதன் பலனாகவே நம்மை தங்களுக்கும் சர்க்காருக்கும் நிரந்தரமான அடிமைகளாக்கி நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவற்றிலிருந்து தப்பி நமது சுயமரியாதை யைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இப்பார்ப்பனர்களை எப்படியாவது எல்லாவித உத்தியோகங்களிலிருந்தும் ஒழிக்க வேண்டுமென்று கஷ்டப் படுகிறோம்.(பார்ப்பனர்களுக்கு வெட்கம், வெட்கம் என்கிற சப்தமும் கரகோஷமும்)

இவ்விதம் நீங்கள் கூச்சலிடுவதில் பயனில்லை; கூச்சலிடுவதற்கா கவோ கரகோஷம் செய்வதற்காகவோ நான் உங்கள் முன்னால் பேச வர வில்லை. உத்தியோக விஷயத்தில் மாத்திரம் பார்ப்பனர்கள் விஷயத்தில் பொறாமையும் துவேஷமும் இருக்கிறதேயல்லாமல் வைதீகச் சடங்குகளில் நீங்கள் அவர்களை உங்களை விட உயர்ந்தவர்களென்றே எண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியிலும் அதிகாரத்திலும் இருந்தாலும் இரண்டு காய்ந்த தர்ப்பைப் புல்லைக்கொண்டு சாம்பலையோ நாமத்தையோ அடித்துக் கொண்டு ஒரு பார்ப்பனன் உங்கள் வீட்டிற்கு வருவானேயானால் ‘சுவாமி’ என்று அவன் காலில் விழுகத் தயாராயிருக்கிறீர்கள். அவனுக்குப் பணத்தைக் கொடுத்தால் உங்கள் பெற்றோருக்கு மோக்ஷம் கிடைக்கும் என்கிற முட்டாள் தனமான எண்ணம் இன்னமும் உங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டு இருக்கிறது. அவன் கைப்பட தாலி எடுத்து கொடுத்து நீங்கள் அதை கும்பிட்டு வாங்கி பெண் களின் கழுத்தில் கட்டினால்தான் உண்மையான கலியாணம் என்று நினைக் கிறீர்கள்; ஒரு பார்ப்பனன் உங்கள் வீட்டுப் பெண்ணையும் பிள்ளையையும் படுக்கை அறைக்குள் அனுப்பிக் கதவைச் சாத்தினால்தான் நல்ல பிள்ளைகளைப் பெற முடியுமென்று நினைக்கிறீர்கள்; ஒரு பார்ப்பனனுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரை சாப்பிட்டால்தான் உங்கள் பாவம் துலையுமென்றும் நீங்கள் மோக்ஷத்திற்குப் போகக் கூடுமென்றும் நினைக்கிறீர்கள். இவ்வித முட்டாள்தனமான மனப் பான்மையை மாற்றிக் கொள்ளத் தயாராயிருக்கிறீர்களா? (ஆம், ஆம் என்கிற சப்தம்) அப்படியானால் உங்களுடைய சந்தோஷங்களுக்குப் பொருள் உண்டு. அப்படிக்கில்லாமல் வீண் ஆரவாரங்களினாலும் அற்ப சந்தோஷத் தினாலும் பலனென்ன?
ஆதலால் நாம் இப்பொழுது செய்யும் இந்தப் போராட்டம் சுய மரியாதைப் போராட்டமேயல்லாமல் உத்தியோகத்திற்காகவே செய்யும் உத்தியோகப் போராட்டமல்லவென்பதை நன்றாய் உணருங்கள். நமது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவ்வித உத்தியோகங்கள் சகாயமாயிருக்கும். மோட்சம் என்கிற வார்த்தையினாலும், சுயராஜ்யம் என்கிற வார்த்தையினாலும், சமூக வாழ்க்கையிலும் அரசியலிலும் முறையே நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி ஆதிக்கம் பெற்று விட்டார்கள். இவ்விரண்டு விஷயங்களிலும் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கத்தை விரட்டி அடித்தால் தான் நாம் சுயமரியாதை அடைய முடியும். இந்தச் சுய மரியாதைக்காக நாம் இன்று, நேற்று மாத்திரம் போராடவில்லை. ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டும், நாயர், செட்டியார் என்கிற மகான்களின் இயக்கம் ஏற்பட்டும் சுமார் பத்தாண்டுகள் தானாகின்றன. இன்றைக்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்ன தாகவே இப்பார்ப்பனரின் கொடுமையை உணர்ந்த நம் தமிழ் மக்கள் அதிலிருந்து தப்பவேண்டு மென்று எவ்வளவோ பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். நமது சித்தர் களெல்லாம் எவ்வளவோ தெளிவாய்ப் பார்ப்பனர்களின் அக்கிர மங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் நமது பார்ப்பனர்கள் சித்தர் நூல்களையெல்லாம் ஒழித்து, சித்தர் உபதேசங்களையெல்லாம் மறைத்து இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களைப் பார்ப்பனர்களுக்கனுகூலமாக எழுதி அவற்றிக்குச் செல்வாக்குண்டாக்கி, அவற்றைப் படித்தால் மோட்சம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார் கள். கபிலர், பாய்ச்சலூரார், ஒளவையார், திருவள்ளுவர் முதலிய பெரியோர் கள் செய்திருக்கும் நூல்களினாலும் அவர்களுடைய உபதேசங் களினாலும் இன்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பார்ப்பனர்கள் கொடுமைகளை வெளிப்படுத்தி அவைகளை ஒழிக்கப் பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். சமீபகாலத்தில் புத்தர், சமணர் முதலியோர்களும் பார்ப்பனர்கள் கொடுமையை ஒழித்து மக்கள் எல்லோரும் சமம் என்பதும் அன்பும் சமரச உணர்ச்சியும் தான் கடவுளென்பதும் உலகத்திற்குணர்த்த வந்ததை இப்பார்ப்பனர்கள் சகிக் காமல் இவர்கள் பிரயத்தனத்தையெல்லாம் ஒழித்து விட்டார்கள்.

பார்ப்பனர்கள் தங்களை உயந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்ட காலத்தில் பலவான்களாக இருந்தவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் பலாத் காரத்தை உபயோகப்படுத்த வந்த சமயத்தில், தந்திரமாய் நீங்கள் க்ஷத்திரியர் களாயிருந்து அரசாட்சி செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மந்திரி களாயிருந்து ‘யோசனை’ சொல்லுகிறோமென்று சொல்லி அவர்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். கையில் செல்வமும் செல்வாக்கு முள்ள மற்றொரு கூட்டத்தார் ‘நீங்கள் எப்படி உயர்ந்த ஜாதியாகலாம்’ என்று விவாதிக்கையில் ‘நீங்கள் வைசியர்களாக இருங்கள், உங்களுக்குக் கீழ் அநேகர் இருக்கிறார்களெ’ன்று சொல்லியும் ‘உங்களுக்கும் எங்களைப் போல் பூணூல் போடுகிறோ’மென்றும் சொல்லி அவர்களையும் ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். பிறகு பெரும்பான்மையாயிருந்த விவசாயக் காரர்களையும் கைத் தொழிற்காரர்களையும் பார்ப்பனர்களுக்கு முதல் மூன்று வகைப் பிரிவுக்காரர்களுக்கும் வேலை செய்கிறவர்களென்று ஏற்படுத்தி விட்டார்கள். அவர்களில் பலர் இதை ஒப்புக் கொள்ளாமல் வாதாடவே ‘உங்களுக்கும் கீழாக ஒரு பிரிவாரை வைத்திருக்கிறோம், அவர்களுக்கு நீங்களே தான் எஜமானர்கள், உங்கள் இஷ்டம் போல் அவர் களை நடத்திக் கொள்ளலாம்’ என்று சொல்லி சாந்தமே உருவாகவும், சூது வாது தெரியாத சாது ஜனங்களாகவும் இருந்தவர்களை பஞ்சமர்களென்று பெயர் வைத்து அவர்களை ³ சூத்திரர் என்பவர்களுக்குக் காட்டிக் கொடுத்து அவர்களையும் ஏமாற்றி விட்டார்கள். கடைசியாக வாயில்லாப் பூச்சிகளாகிய ஒரு வகுப்பார் தீண்டாதவர்களாகி துன்பப் பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

இவ்விதக் கொடுமை செய்தவர்களைத்தான் நீங்கள் இன்றைய தினம் உங்கள் மத குருவாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்விதக் கொடுமை நம்மை விட்டு விலக வேண்டுமானால் மத விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் நாம் ஆதிக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்று நமது சுயமரியாதையை அடைய முயற்சிக்க வேண்டும். ஒரு சமூகத்திற் கானாலும் ஒரு தேசத்திற்கானாலும் சுயராஜ்யத்தை விட சுயமரியாதையே பிரதானமான தென்பது எனது தாழ்மையானதும் முடிவானதுமான கொள்கை. அச் சுயமரியாதைக்கு மகாத்மாவின் நிர்மாணத் திட்டமும் மறைவுபட்ட இந்த சமயத்தில் அரசியலிலுள்ள சகல பதவிகளையும் சகல ஸ்தானங்களையும் சகல அதிகாரங்களையும் சகல உத்தியோகங்களையும் எப்படியாவது நாம் கைப்பற்றியாக வேண்டும். ஆதலால் இப்பொழுது நடக்கிற தேர்தல் ஸ்தானங்கள் எல்லாம் இக்கருத்துக் கொண்ட பார்ப்பன ரல்லாதார்களே கைப்பற்றும்படி நாம் செய்ய வேண்டும். அதின் மூலம் நமது கருத்தை நிறைவேற்றிக்கொள்ள எவ்வெவ் வழிகளில் சாத்தியப்படுமோ அவ்வவ்வழிகளிலெல்லாம் உழைக்க வேண்டும். இதுதான் நம்முடைய தேசீய வேலை. இதை விட்டு விட்டு காங்கிரஸ் என்றும் சுயராஜ்யம் என்றும், காங்கிரஸ் மூலம் சுயராஜ்யம் அடையலாமென்றும் சொல்லுவதெல்லாம் பார்ப்பனர் மூலம் மோட்சமடையலாமென்று சொல்லுவது போலத் தான் ஆகும். ( தொடர்ச்சி : 22.08.1926 இதழில்)

குறிப்பு : சென்னை திருவல்லிக்கேணியில் 31.07.1926 இல் நடைபெற்ற கூட்டத்தில் சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 15.08.1926

You may also like...

Leave a Reply