தேவஸ்தானச் சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய் விட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா? பார்ப்பனர்களா? டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும் தங்கள் வாக்கை நிறைவேற்றுவார்களா?
சென்னை இந்து பரிபாலன மசோதாவானது தற்காலம் நமது நாட்டில் அரசியல் விஷயமாகவோ பொது நன்மை தீமை என்கிற விஷயமாகவோ கருதப்படாமல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயமாய்க் கருதப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அல்லாமலும் அம் மசோதாவைப் பற்றிக் கண்டபடி தூற்றி வரும் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் நாளது வரையில் அதிலுள்ள ஒரு சிறு கெடுதியையாவது பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியவர்கள் அல்ல. சுயராஜ்யம் என்றும் சர்க்காருடன் போராடுவதென்றும் பொய்யும் புளுகும் சொல்லி கேப்பமாரித் தனம் செய்து அரசியல் விஷயத்தில் ஆதிக்கம் பெற்று எப்படி தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உத்தியோகமும் ஆதிக்கமும் சம்பாதித்துக் கொள்ளு கிறார்களோ அதுபோலவே இந்த மசோதா விஷயத்திலும் வேண்டு மென்றே மனப்பூர்த்தியாய் ‘மதம் போச்சு’, ‘தெய்வம் போச்சு’, ‘இந்து மதத்தில் அரசாங்கத்தார் புகுந்துவிட்டார்கள்’, ‘அநியாயமாய்ப் புது வரி போடப் போகிறார்கள்’, ‘நமது இந்துமத தர்ம சொத்துக்களை சர்க்காரார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்’ ‘மகமதியருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கொடுக் கப் போகிறார்கள்’, ‘அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக் கூடத்திற்கும், ரோட்டிற்கும், முனிசிபாலிட்டிக்கும் உபயோகப் படுத்தப் போகிறார்கள்’ என்றும், இன்னமும் எத்தனையோ விதமாய் அயோக்கியத் தனமானதும் இழிவானதுமான பல பொய் வார்த்தைகளைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி அம் மசோதாவை ஒழித்துத் தங்கள் பிழைப்புக்கு வழி தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
இது விஷயமாய் நாம் ஒரு பந்தயம் கூறுகிறோம். அதாவது இந்து மத சம்பந்தமான இனாம்களைக் குறித்த 1923 -ம் வருஷத்திய சென்னப் பட்டணத்து ஆக்டு என்று சொல்லப்படும் பிரஸ்தாப சட்டத்தில் 9- அத்தியாயங்களும் அவைகளில் மொத்தம் 81- பிரிவுகளும் (செக்ஷன் களும்) 3 – ஷெடியூல்களும் இருக்கின்றன. இவைகளில் எந்தப் பிரிவின் படி நமது மதங்களிலோ தர்மங்களிலோ கோயில்களிலோ வரும்படி களிலோ தர்மச் சொத்துக்களிலோ இது வரையில் இல்லாத மாதிரி சர்க்கார் பிரவேசிக்கிறார்கள் என்றாவது, வேறு மதத்தினர்களின் உபயோகத்திற்கு நமது தர்மச் சொத்தை செலவழிக்கிறார்கள் என்றாவது, முனிசிபாலிட்டிக்கோ அல்லது சர்க்காருக்கோ இந்த வரும்படியைக் கொடுக்கலாம் என்றாவது அல்லது எந்தப் பிரிவின்படி புதுவரி ஜனங்களுக்குப் போட இடமிருக்கிறது என்றாவது, மற்றும் இந்து மதத்திற்கோ சமூகத்திற்கோ கோயில், குளம், தெய்வம் முதலியவைகளுக்கோ ஆபத்து வரக் கூடியதாய் இருக்கிறது என்றாவது எவரேனும் காட்டுவார்களேயானால், இந்தப் பார்ப்பனர்களை நாம் நமது தலைவர்கள் என்றும், இந்த மசோதாவை ஒழிப்பதற்கு நாமும் சேர்ந்து பாடுபடத் தயாராயிருக்கிறோம் என்றும் உறுதி கூறுகிறோம். இல்லா தவரை இந்தப் பார்ப்பனர்கள் இனிமேல் நமக்காவது நமது நாட்டுக்காவது தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அல்பத்தனத்தை விட்டுவிடு கிறார்களா என்று கேட்கிறோம்.
தவிரவும் ராஜீய விஷயத்தில் தேவஸ்தான மசோதாவைப் பற்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தைப் பற்றியும் பேசக் கூடாது என்று இதுவரை சொல்லி வந்து விட்டு சந்தர்ப்பம் வந்த உடன் தேவஸ்தான விஷ யத்தை ராஜீயத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு சுயராஜ்யக் கட்சியாருக்கு சட்டசபைக்குப் போய் தேவஸ்தான மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று ஸ்ரீமான் ரெங்கசாமி அய்யங்கார் சுற்று உத்திரவு அனுப்பக் காரணம் என்ன?
சுயராஜ்யக் கட்சி என்றால் பார்ப்பனர் கட்சி, பார்ப்பனர் கட்சி என்று இதுவரை சாற்றி வந்தோம். இதை சில நண்பர்கள் விரும்பவில்லை என்பதாகக் காட்டி வந்தார்கள். இப்போது சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சிக் கூட அல்ல, ஆனால் சுயராஜ்யக் கட்சி பார்ப்பனரின் குலாம் கட்சி என்றே சொல்லுவோம்.
தேவஸ்தான மசோதா, வரப்போகும் சென்னை சட்டசபைக் கூட்டத் திற்கு வரப்போவதாய் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சுயராஜ்யக் கட்சிக்கு நன்றாய்த் தெரியும். அப்படி இருக்க அதை எதிர்ப்பதற்காக சட்டசபைக்கு சுயராஜ்யக் கட்சியார் போவதா இல்லையா என்பதாக ஸ்பெஷல் கமிட்டியை கேட்க காங்கிரஸ்காரியதரிசியாகிய ஸ்ரீமான் எ. ரெங்க சாமி அய்யங்காருக்குப் போதுமான சாவகாசமிருந்தது; இன்னமும் இருக் கிறது. இப்படியிருக்க தங்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டொரு அடிமை களிடமிருந்து கடிதம் வந்ததாகப் பெயர் வைத்துக் கொண்டு, அதுவும் மடாதிபதிகளிடம் பொறுக்கித் தின்பவர்களிடமிருந்து கடிதம் வந்ததாகப் பெயர் வைத்துக்கொண்டு அதன் பேரில் காங்கிரஸ் காரியதரிசியாயிருக்கும் ஒரு பார்ப்பனரான ஸ்ரீமான் எ. ரெங்கசாமி அய்யங்கார், சுயராஜ்யக் கட்சி ‘ஆக்டிங் தலைவராயிருக்கும்’ மற்றொரு பார்ப்பனரான ஸ்ரீமான் எஸ்.சீனி வாசய்யங்காரிடம் யோசனை செய்ததாகவும், தேவஸ்தான மசோதா 69 -வது பிரிவுப்படி ஜனங்களுக்கு அதிக வரி போட இடந்தருவதாகவும், ஆதலால் சுயராஜ்யக் கட்சியார் போய் இதைத் தடுக்க வேண்டியதென்றும், இது முக்கியமான விஷயமானதால் இதற்காக நியமித்த ஸ்பெஷல் கமிட்டி யை அனுமதி கேட்க வேண்டியதுகூட அவசியமில்லை என்றும் இவர்கள் தீர்மானித்து விட்டு தாங்களே உத்திரவு கொடுத்திருப்பதாயும் சுயராஜ்யக் கட்சி சட்டசபை மெம்பர்களுக்கு ஒரு சுற்று உத்திரவு அனுப்பப்பட்டிருக் கிறது. இதிலிருந்து காங்கிரஸ் பார்ப்பனர்களுடையது என்றும், பார்ப்பன ராஜ்யத்திற்குத் தான் காங்கிரஸ் உபயோகப்பட்டு வருகிறதென்றும், பார்ப் பனர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும், காங்கிரஸ் பொது காங்கிரஸ் என்று சொல்லிப் பாமரர்களை ஏமாற்றவே அதில் சில பார்ப்பன ரல்லாதார் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், சில பார்ப்பனரல்லாத கனவான்களும் இந்த அக்கிரமங்களை அறிந்தே தங்களு டைய பெயரையும் இந்தப் பார்ப்பனர்கள் உபயோகப் படுத்திக்கொள்ள சம்மதித்திருக்கிறார்கள் என்றும் எழுதியும் சத்தம் போட்டும் வந்தோம். அது இப்போது வெளிப்படையாய் ருஜுவாகி விட்டதென்றே சொல்லு வோம்.
பார்ப்பனர்களின் இந்தப் புரட்டுகளை எதிர்பார்த்தே சென்னையில் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் ஆர்.கே. ஷண் முகம் செட்டியார் அவர்களையும் நாம் சந்தித்த காலத்தில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி நமது பார்ப்பனர்கள் இதேமாதிரி செய்வார்களே, அப்போது தாங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம். அது சமயம் டாக்டர் நாயுடுகார் அவர்கள் சொன்னதாவது:-
எந்தெந்த விஷயங்களில் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போக லாம் என்கிற விஷயத்தை நிர்ணயிக்கவும், சுயராஜ்யக் கட்சிக்கு சட்ட சபைக்குப் போக அனுமதி கொடுக்கவும் ஏற்பட்ட தனிக்கமிட்டி யில் தானும் ஒரு அங்கத்தினரானதால் தான் இதற்கு உத்திரவு கொடுக்க மாட்டேன் என்றும் அப்படி மீறி அவர்கள் போனால், அந்தக் கமிட்டி யிலிருந்து தான் விலகுவதோடு மட்டும் நில்லாமல் அதற்கு மேல் என்ன செய்வது என்பது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார்.
ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் சொன்னதாவது:-
தேவஸ்தான மசோதா விஷயம் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் ஒன்றாக இப் பார்ப்பனர்கள் கருதி ஏதாவது செய்வார்களேயானால் தான் சுயராஜ்யக் கட்சியில் இருந்து விலகி விடுவதாய்ச் சொன்னார்.
இவ்விரண்டு கனவான்களும் தங்கள் வாக்கை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. என்ன செய்யப் போகிறார்கள் என்பதை தமிழ் மக்கள் ஆவலாய் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தப்பாகாது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 15.08.1926