நீதி நிர்வாகத்தில் வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல் சேர்மென் தேர்தல்

மதுரை முனிசிபாலிட்டிக்குச் சேர்மெனாகப் பொது ஜனங்களாலும் இயற்கை தேவியாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவை நமது பார்ப்பன தேவதைகள் ஐந்து, ஆறு மாத காலமாக அந்த ஸ்தானத்தில் உட்காருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடுவும் மற்றொரு கனவானும் சேர்மென் பதவிக்குப் போட்டி யாக நின்றார்கள். ஸ்ரீமான் நாயுடு பார்ப்பனர்களின் எடுப்பார் கை குழந்தை யாயில்லாமல் சுயமரியாதை உள்ளவராயிருந்துவிட்டபடியினால் அங்குள்ள பார்ப்பனர்கள் நாயுடுவுக்கு விரோதமாக ஒருவரை நிறுத்தி சுயராஜ்யக் கட்சி யின் பெயராலும் காங்கிரஸ் பெயராலும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் ஸ்ரீமான் நாயுடுவுக்கு சம ஓட்டு கிடைத்ததால் திருவுளச் சீட்டு போட வேண்டிய அவசியமேற்பட்டு, திருவுளச் சீட்டிலேயும் ஸ்ரீமான் நாயுடு வுக்கே ஆகிவிட்டது. இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரை நியாயாதிபதியாய் அடைந்திருக்கிறோமென்ற தைரியத்தின் பேரில் கோர்ட் டுக்குப் போய் அத் தேர்தலை ரத்துசெய்து, வேறு தேர்தல் செய்யும்படி தீர்ப்புப் பெற்று விட்டார்கள். நல்ல வேளையாய் பார்ப்பனரல்லாதார் அப்பீல் நியாயாதி பதியாய் இருக்கும் படியான ஒரு நியாயஸ்தலம் நமது நாயுடுவுக்குக் கிடைத்த படியினால், அங்கு நாயுடு அப்பீல் செய்து கொண்டதன் பலனாய் அந்த பார்ப்பன நியாயாதிபதியின் உத்திரவு மாற்றப்பட்டு பொது ஜனங்கள் இஷ்டப் பிரகாரமும் இயற்கை தேவியின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீமான் நாயுடுவே சேர்மென் வேலை பார்க்கும் படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது. எவ்வளவு தான் சட்டங்களுக்கும் தேசத்தின் மானத்திற்கும் பயந்து கொண்டு விஷயங்களைச் சகித்து சகித்துப் பார்த்தாலும் வகுப்புணர்ச்சிகளின் பலனாய் ஒரு வகுப்பாருக்கு மற்றொரு வகுப்பார் செய்யும் கெடுதியை மறைக்க முடியவில்லை. சுருக்கமாய்ச் சொல்லுவதானால், நமது நாட்டில் வெள்ளைக்காரர்களுக்கும் கருப்பு மனிதர்களுக்கும் ஏற்படும் வகுப்பு வியவகாரங்களில் வெள்ளைக்கார நியாயாதிபதிகளிடமிருந்து பெரும்பாலும் கருப்பு மனிதர்கள் நியாயம் பெற முடியாத நிலைமையில் இருக்கிறார்களோ அது போலவே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற உணர்ச்சியின் பேரில் ஏற்படும் வியவகாரங் களில் பார்ப்பனர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார் நியாயம் பெற முடியாமலிருப்பதோடு கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டியதாயிருக்கிறதை இதுசமயம் நாம் சொல்லித் தீர வேண்டிய தாயிருக்கிறது.
நமது கொஞ்சகால ராஜீய அனுபவத்தில் பார்ப்பனரல்லாத வக்கீல் கள் பார்ப்பன நியாயாதிபதிகளிடத்தில் அடையும் இழிவும் கொடுமையும் பாரபக்ஷமும் சுயமரியாதை உள்ளவர்களென்போர் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாததாயிருப்பதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம்.

இவ்வித வித்தியாசங்களுக்கு ஒரு சிறிய போலீஸ் அதிகாரி முதல் உயர்தர நீதிமன்றம் வரையில் ஆளாக வேண்டியதாகவேயிருந்து விடுகிறது. இதற்கு உதாரணங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதிலிருந்து நமது மக்கள் எப்படித் தப்புவது என்பது தான் நமக்குப் பெருத்த கவலையாயிருந்து வருகிறது. ஒரு வகுப்பாருக்கு மாத்திரந்தான் இப்போது இந்தக் கஷ்டமிருக்கிறது என்று நாம் இங்கு சொல்ல வரவில்லை. தேர்தல் வியவகாரங்கள் நூற்றுக்கு 90 குறைவில்லாமல் அப்பீ லில் மாறியிருப்பதின் சம்பவமென்ன? ஏறக்குறைய தற்காலம் நமது நாட்டில் நடக்கும் தேர்தல் வியவகாரங்களெல்லாம் வகுப்புணர்ச்சியை ஆதாரமாக வைத்தே நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகுப்பு உணர்ச்சி கள்தான் இவ் விதத் தீர்ப்புகளுக்கும் ஆதாரமென்றே நாம் நம்ப வேண்டி யிருக்கிறது. இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர வேண்டிய திருக்கிற தென்றால் தேர்தல் சம்பந்தமான வியவகாரங்களை நீதிபதிகள் கைக்குக் கொண்டு போகாமல் நிர்வாக அதிகாரிகள் கையிலேயேயிருக்கச் செய்தால் ஒழுங்காயிருக்க முடியுமா என்று கூட நினைக்க வேண்டியதாயிருக்கிறது. நிர்வாக அதிகாரிகள் செய்யும் கொடுமைகள் நீதிபதிகள் செய்யும் கொடுமை களைவிடக் குறைந்ததல்லவானாலும் (உதாரணமாக ஈரோடு முனிசிபல் நிர்வாக ஊழல்களைப் பற்றி மேல் நிர்வாகிகள் நடந்து கொள்ளும் தோரணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்) இவ்வளவு காலதாமதமும் பணச் செலவும் மினக்கேடும் வக்கீல்கள் சூழ்ச்சியும் குறையுமென்றே நம்புகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 08.08.1926

You may also like...

Leave a Reply