பேடிப் போர்
நமது நாட்டில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஏற்பட்டிருக்கும் பல பத்திரிகைகளின் தலையெழுத்து உண்மையை எழுதி வீரப்போர் நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப் போர் நடத்தும்படியாக ஏற் பட்டுப் போய்விட்டது. உதாரணமாக, வட ஆற்காடு சட்டசபை உப தேர்த லைப் பற்றி ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடுவுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் பத்மநாப முதலியாருக்கு அநுகூலமாகவும் நாம் பிரசாரம் செய்யப் போவதா கவும், அதற்குக் காரணம் “முன்னவர் சுயராஜ்யக் கக்ஷியாரென்றும் பின்ன வர் ஜஸ்டிஸ் கக்ஷியாரென்றும் சொல்லிக் கொள்ளுவதுதானென்றும்” எழுதி யிருக்கின்றன. இப்படியே இன்னும் அநேக பொய்யான விஷயங்களை எழுதியும், மெய்யான விஷயங்களை மறைத்தும் எழுதுவதை தமது தொழி லாகக் கொண்டிருக்கின்றன. சட்டசபைத் தத்துவத்தில், ஸ்ரீமான்கள் வெங்கிட் டரங்கம் நாயுடுவுக்கும் பத்மநாப முதலியாருக்கும் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்க இடமிருப்பதாக நாம் கருதவில்லை. ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடு சட்டசபைக்குச் செல்வதினால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமென்றோ, ஸ்ரீமான் பத்மநாப முதலியார் சட்டசபைக்குச் செல்லுவதில் பெரிய நன்மை விளைந்து விடுமென்றோ நாம் கருதவில்லை.
இதுவரையிலும் இதற்காக ஒருவருக்கநுகூலமாகவோ மற்றொருவருக் குப் பிரதிகூலம் செய்யவோ நாம் எண்ணவுமில்லை. அப்படி அநுகூலமாக வும் பிரதிகூலமாகவும் இவர்கள் தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டியது இதுசமயம் அவசியமுமில்லை என்பதே நமது முடிவு. அவசியமென்று கருதி னால் கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி பயந்து கொண்டிருக் கப் போவதுமில்லை. ஸ்ரீமான் நாயுடுவையும் நமக்கு 6,7 வருஷங்களாகத் தெரியும். அவர் எவ்வளவுதான் பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தா லும், அவருடைய அந்தரங்கமானது பிராமணரல்லாதார் விஷயத்தில் அநு தாபமாகவேதானிருப்பதை அறிந்திருக்கிறோம். இவ்வறிவுக்கு மாறுதல் ஏற்படுகிற காலத்தில் நமது கடமை என்னவென்பது நமக்கே தெரியும். ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி நல்லவரென்றும், பரோபகார உழைப்பில் கொஞ்சக் காலமாக ஈடுபட்டவரென்றும் கேள்விப்பட்டதேயல்லாமல் நேரில் பார்த்ததே இல்லை.
அல்லாமலும் ஸ்ரீமான் முதலியாருக்கு விரோதமாயும், ஸ்ரீமான் நாயுடுவுக்கு அநுகூலமாகவும் சமீபத்தில் செய்யப்படுகிற தேர்தல் பிரசாரங்களிலும், பிரசாரகர்கள் ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி கண்ணிய மாகவே பேசி வருவதாகவும் பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆதலால் இவ்விருவர்களில் இதுசமயம் உயர்வு தாழ்வு காண முடிய வில்லை.
இப்படியிருக்க பிராமணப் பத்திரிகைகளும், பிராமண ஆதரவுபெற்ற பத்திரிகைகளும் இம்மாதிரியான பொய்களைப் பரப்பிவிடுவது பலனளிக் காதென்பதையும் இப்படிப்பட்ட காரியங்களினால் அவைகளின் யோக்கி யதை இன்னும் அதிகமாக தாழ்த்தப்படுமென்பதையும் குறிப்பிடுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 07.02.1926