பண்டித மாளவியாவின் புது தைரியம் இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக் கருதியா? வகுப்பைக் கருதியா?

ஒத்துழையாமையின்போது சர்க்காரால் போடப்பட்ட எத்துணையோ இலட்சக்கணக்கான அநாகரீகமானதும் அநியாயமானதுமான உத்திரவு களை இந்திய மக்களில் பதினாயிரக்கணக்கான பேர் மீறி ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் இவைகளில் ஒன்றாவது நமது பண்டித மாளவியாவுக்கு அநியாயமான உத்திரவென்றோ அநாகரீகமான உத்திர வென்றோ தோன்றாமல் போய்விட்டது ஏன்? அது தேச நன்மைக்கும், இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் பஞ்சாப்புக்கும் கிலாபத்துக்கும் ஏற்பட்ட அநீதிக்கும் பரிகாரம் தேட ஏற்பட்ட வழிகளைத் தடைப்படுத்த ஏற்பட்ட உத்திரவானதால் அதைப்பற்றி நமது பண்டிதருக்கு லட்சிய மில்லை. ஆனால் இப்பொழுது கல்கத்தா கலவர சம்பந்தமாய் உண்மையாய் கொலைகளும், கொள்ளைகளும், அடிதடி கலவரங்களும் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கிற காலத்தில் வங்காள அரசாங்கத்தார் போட்ட தடை உத்திரவை மீறுவதற்கு நமது பண்டிதருக்கு வெகு அவசரம் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த உத்திரவானது வெறும் வகுப்பு சம்பந்தத்தையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான். ஆனதால் நமது பண்டிதர் வகுப்பு வாதியா, தேசீயவாதியா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். பண்டிதர் பார்ப்பனராயிருப்பதால் அவர் செய்யும் காரியங்களும் கிளர்ச்சி களும் இந்து சமூகத் திற்கு என்கிற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பன சமூகத்திற்கும் வர்ணா சிரமத்திற்கும் ஆதரவளிக்கச் செய்வதாயிருப்பதால் நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனத் தலைவர்களும் பண்டிதரின் நடவடிக்கையை வகுப்புத் தொண்டு என்று சொல்லாமல் தேசீயத் தொண்டு என்று சொல்லி பண்டிதரை பெரிய தேசபக்தராக்க விளம்பரம் செய்வார்கள்.

வங்காள உத்திரவை யோக்கியமான உத்திரவென்று நாம் சொல்லா விட்டாலும் பண்டிதர் பெற்ற பிள்ளையாய இந்து மகாசபை பிறந்திருக்கா விட்டால் இந்தியாவில் இந்து முஸ்லீம் கலகமும் மகாத்மாவின் ஒத்துழை யாமைக்கு சாவும் ஏற்பட்டிருக்காதென்றே நெருப்பின் மீது நின்று கூறுவோம்.

குடி அரசு – கட்டுரை – 08.08.1926

You may also like...

Leave a Reply