தீ பா வ ளி கதர்! கதர்!! கதர்! ! !
தீபாவளியை தேசபக்திக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறீர் களா? அல்லது தேசத் துரோகத்திற்கு உபயோகப்படுத்தப் போகிறீர்களா?
நாளிது ஐப்பசி µ 19 ² க்குச் சரியான நவம்பர் µ 4 ² வியாழக் கிழமை இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் மிகுதியும் கொண்டாடத் தக்க தீபாவளி என்னும் பண்டிகை வரப் போகிறது. அப்பண்டிகை கொண்டா டுவது என்பதற்கு எண்ணெய் ஸ்நானம் செய்து புதிய வஸ்திர மணிந்து பட்டாசு சுட்டு பலகாரம் சாப்பிடுவதுதான் முக்கியச் சடங்காக இருக்கிறது. இவற்றுள் எண்ணெய் ஸ்நானம் செய்வதிலும் பலகாரம் செய்து சாப்பிடு வதிலும் நமது நாட்டிற்கு எவ்விதக் கெடுதியும் இல்லை. ஆனாலும் புதிய வஸ்திரமணிவது என்பது முக்கியமாக ஏழைகளின் வாயில் மண்ணைப் போட்டு அவர்களைப் பட்டினி கிடக்கச் செய்வதற்கும் பெரும் பாலும் நமது நாட்டுச் செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளை கொண்டு போவதற்குமே உதவுகிறது. நமது நாட்டிற்கும் நமது நாட்டுப் பெரும் பான்மையான மக்க ளுக்கும் நலமும் நல்வாழ்வும் உண்டாக பெரியோர் களால் ஏற்படுத்தப்பட்ட பண்டிகையானது, இப்போது அதற்கு நேர் விரோதமான பலனைக் கொடுத்து வருகிறது. எப்படி யெனில் நாம் நமக்கு ஒருவருஷ அனுபவத்திற்கு வேண் டிய துணிகளில் கிட்டத்தட்ட பகுதிக்குக் குறையாமல் தீபாவளிக் கென்றே வாங்கிவிடுகிறோம். அன்றியும் செல்வந் தர்களாயிருப்பவர்கள் மக்கள், மருமக்கள் முதலானவர்களை சந்தோஷிப் பதற்கென்று பட்டு, சரிகை, அழகு, வழவழப்பு, மெதுவு என்கிற வகையில் அதிகமான பணத்தைச் செலவு செய்து வருகிறார்கள். இவைகளில் செலவிடும் பணம் அவ்வளவும் கதரைத் தவிர அதாவது கைராட்டினத்தால் நூற்ற நூலைக் கொண்டு கைத்தறியால் நெய்த துணி அல்லாமல் மற்றபடி வேறு எதை வாங்குவதாலும் ஏழைகள் தொழிலற்று பட்டினி கிடக்கவும் நமது செல்வங்கள் வெளிநாட்டிற்குப் போகவுமே உபயோகப்படுகிறது. நீங்கள் பட்டும் சரிகையும் அன்னிய நாட்டு வஸ்திரமும் உள்நாட்டு யந்திர வஸ்திரமும் வாங்கி அழகு பார்ப்பதின் மூலம் நமது நாட்டு ஏழைகள் பட்டினி கிடந்து நமது நாட்டு செல்வம் அன்னிய நாட்டுக்குப் போவது நியாயமாகுமா? நீங்கள் கதர் அல்லாததை அணிவதின் தத்துவம் என்ன? “எனக்கு இந்த நாட்டினிலாவது இந்நாட்டு ஏழை மக்களிடத்திலாவது அன்பு கிடையாது” என்று சீட்டெழுதி நெற்றியில் ஒட்டிக் கொள்ளுகிறீர்கள். காரியத்தில் இப்படிச் செய்து விட்டு “நானும் சுயராஜ்யவாதி, தேசபக்தன், ஏழை களின் நண்பன், தொழிலாளரின் நண்பன்” என்று வாய்பறை அடித்து பாமர மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
சுயராஜ்யம் என்றால் என்ன? நாட்டின் தரித்திரம் ஒழிந்து ஏழைகளும் தொழிலாளிகளும் வயிறார உண்ணும்படி செய்து நமது நாட்டு செல்வத்தை அன்னியர் கொள்ளை கொள்ளாமல் இருக்கும்படி செய்வது தானே அல்லாமல் படித்த கூட்டத்தார் உத்தியோகத்தின் மூலமாயும் பணக்கார கூட்டத்தார் யந்திரங்கள் மூலம் விளம்பரம் செய்வது மூலமாகவும் பணம் சம்பாதிப்பது அல்ல. இதனால்தான் மகாத்மா “ராட்டினம்தான் சுயராஜ்ய மளிக்கவல்லது” என்று சொல்வதோடு “உத்தியோகமும் யந்திரங்களும் சுயராஜ்யத்தை தூரமாக்குவதோடு தடைபடுத்தும்” என்கிறார். செல்வ வான்களின் செல்வமும் செல்வத் திமிரும் ஏழைகளுக்கு உபயோகப்பட வேண்டுமானால், செல்வவான்கள் தங்களுக்கு ஏழைகளிடத் தில் அன்பு இருக்கிறது என்று காட்ட வேண்டுமானால், அன்னிய நாட்டார் கொள்ளை கொண்டு போக உபயோகப்படாமலிருக்க வேண்டுமானால், கதரை வாங்கி அணிவதை விட வேறு மார்க்கமில்லை. மாணாக்கர்கள் தங்களுக்கு தேசத்தினிடத்திலும் தேசத்துப் பெரும்பான்மையான ஏழை மக்களிடத்திலும் பக்தியும் அன்புமிருக்கிறது என்பது உண்மையானால் அவர்கள் கதரைத்தான் வாங்கி அணிய வேண்டும். விவசாயிகளும் தொழிலாளர்களும், கூலிக்காரர் களும் தங்களுக்கும், தங்கள் சகோதர விவசாயிகள், தொழிலாளர்கள், கூலிக்காரர்கள் முதலியவர்களுக்கும் நன்மை செய்பவர்களானால் அவர்கள் கண்டிப்பாய் கதரையேதான் வாங்கி அணிய வேண்டும். இவர்கள் வாங்கும் ஒவ்வொரு ஜான் நீளமுள்ள அன்னிய துணியும் யந்திரத் துணியும் குறைந்தது ஒவ்வொரு ஜான் வயிற்றை பட்டினி போடுகிறது. உதாரணமாக, 20 கஜம் நீளமுள்ள 1703 நெம்பர் மல் பீசு 1-க்கு 15 ரூபாய் விலை கொடுத்து வாங்கு கிறோம். அதன் இடை சுமார் மூன்று ராத்தல்தான் இருக்கும். அந்த மூன்று ராத்தல் பஞ்சும் நம்மிடமிருந்துதான் 1-8-0 ரூபாய்க்கு வாங்குகி றார்கள். அதை தங்கள் நாட்டிற்குக் கொண்டு போய் நூலாய் நூற்று துணியாய் நெய்து வெள்ளைக் களிமண்ணையும் கொழுப்பையும் பூசி அழகும் வழவழப்பும் மினுமினுப்பும் செய்து நமது தலையிலேயே கட்டுவதற்காகக் கொண்டு வருகிறார்கள். நாமும் மயங்கி சங்கராச்சாரியாருக்கு காணிக்கை வைப்பது போல் 15 ரூபாய் வைத்து விட்டு வாங்கிக் கட்டி அழகுபடுத்திக் கொள்ளு கிறோம். இந்த பதினைந்து ரூபாயில் பஞ்சுக் கிரையம் ரூ. 1-8-0 போனால் மீதி ரூ. 13-8-0 யாருக்குப் போய் சேருகிறது? அது யாருடைய பணம்? யாருக்குச் சேர வேண்டியது? என்று பார்த்தால் அதன் உண்மை விளங்கும். மேல்படி 13-8-0 ரூபாயும் 6000 மைல் பறந்து போய்விட்டது. இந்த மாதிரி நாம் அன்னியத் துணி வாங்காமல் கதர் துணியை வாங்குவோமானால் அது நமது நாட்டு ஏழைப் பெண்மக்கள் நூற்பதின் பலனாய் ஏழைக் குடும் பங்களுக் குப் போய்ச் சேர்ந்திருக்கும். நமது நாட்டு ஏழை கை நெசவுக் காரர்களுக் குப் போய்ச் சேர்ந்திருக்கும் ஏழைக் குடும்பத்திற்கும் ஏழைத் தொழிலாளி களுக்கும் போய்ச் சேரவேண்டிய அந்த 13-8-0 ரூபாயும் அவர்க ளுடைய பணமல்லவா? இந்த 13-8-0 ரூபாயும் அவர்களுக்குப் போய்ச் சேராமல் தடுத்து அவர்களைப் பட்டினிப்போட்டு அவர்களது வயிற்றுப் பிழைப் புக்கு அவர்கள் கற்பையும் சுயமரியாதையையும் கூட மனச்சாக்ஷியையும் விற்கச் செய்வது அன்னியத் துணி வாங்கினவர்களாகிய நாமா அல்லவா?
ஆதலால், வரப்போகும் தீபாவளியை அதன் உண்மையான தத்து வத்தில் கொண்டாட வேண்டுமானால் கதர் வாங்கி அணிவதை விட வேறு வழியில்லை. இதை உத்தேசித்தே மகாத்மா அகில பாரத சர்க்கா சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதற்கும் பல லக்ஷ ரூபாய்களை முதலாக வைத்து நாடுகள் தோறும் கிளைச் சங்கங்கள் ஏற்படுத்தி கதர் உற்பத்தி செய்யச் செய்து ஜில்லா தலைமை நகரங்கள், முக்கியப் பட்டணங்கள் ஆகிய வைகள் தோறும் கதர் கடைகள் வைத்து சுத்தமான கதர் விற்க ஏற்பாடு செய்திருக்கிறார். அல்லா மலும் நல்ல மரத்தில் புல்லுருவி ஏற்பட்டது போல் இவ்வுத்தமமான சேவைக்கு ஆபத்தாக நமது மக்களிலேயே சிலர் போலிக் கதரை உற்பத்தி செய்து அதை யும் கதர் என்றே பாமர ஜனங்கள் நம்பும்படி செய்து விற்று வருவதன் மூலம் கத்தர் இயக்கத்தைக் கொன்றவர்களாகிறார் கள். சத்தியாக்கிரகமோ சட்டமறுப்போ செய்தாலொழிய இம்மாதிரியான துரோக செய்கைகளை நிறுத்த முடியாதாதலால் அவைகளை கூடுமான வரையிலாவது குறைக்க உத்தேசித்து சுத்தமான கதர் விற்பனைக்கும் போலிக் கதர் விற்பனைக்கும் வித்தியாசம் தெரிவதற்காக சர்க்கா சங்கத்தா ரால் விற்பனைக் கடைகளை பரிசோதிக்க பரிசோதகர்களை நியமித்து கூடுமான வரை பரிசோதிக்கப்பட்டு சுத்தமான கதர் விற்பவர்களுக்கும் உற்பத்தி செய்பவர்களுக்கும் சர்க்கா சங்கத்தாரால் அத்தாக்ஷிப் பத்திரம் கொடுக்கப் பட்டு வருகிறது. ஆகையால் கதர் வாங்குகிற ஒவ்வொருவரும் கதர் வாங்குவதில் கவலை யீனமாயிராமல் தாங்கள் வாங்கும் கடைகளிலும் கதர் விற்கும் மற்ற நபர் களிடமும்அகில பாரத சர்க்கா சங்க தமிழ்நாடு காரியதரிசி யான ஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்களால் கையொப்பமிட்ட நடைமுதல் காலத்து அத்தாட்சிப் பத்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாய்ப் பார்த்து வாங்குங்கள். சிலர் பழய அத்தாட்சிப் பத்திரம் வைத் திருப்பார்கள். அது நடைமுதல் காலத்துக்குச் செல்லாது என்பதையும் கவனிக்க வேண்டுமாய்க் கோரு கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 24.10.1926