தம்பட்டம் மேயோக்கள்

– சித்திரபுத்திரன்


ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி. இந்த நாட்டில் பார்ப்பனீயம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும், இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும் வரையும், விஷ்ணு புராணமும் சிவமகாபுராணமும் சிவ பராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும் பாராசர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும், சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களை கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர் களையும் திருட்டுத்தனமாக விபசாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ளவரையும், 2 பெண் ஜாதி 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும் கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கு பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளதும் ஆயிரம் பேர், ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோக்ஷ முமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்கு கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும், குடிக்கப் பாலில்லாத குழந்தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் தொத்திக் கொண்டும் எலிக்குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதை கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலை கல்லுருவத்தின் தலையிலும் பாம்புப் புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாத குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதை சற்றும் கவனியாமல் கோவிலென்றும் குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேதபாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிலிகள் மிகுந்திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும், அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர்களை பொது ஜனங்கள் அனுபவிப்ப தற்காக முத்திரை போட்டு விபசாரிகளாக விட்டுக் கொண்டி ருக்குமட்டும், அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத் திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும், மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும், மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக் காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல் புலபுலென கலகலெனப் புறப்படுவார்கள் என்பதை பார்ப்பனர்களும் பண்டிதர்களும் உணர்வதோடு பார்ப்பனர்களுக்கும் வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும் தேசத்தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் “தேசீய” முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.

குடி அரசு – கட்டுரை – 09.12.1928

You may also like...

Leave a Reply