தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்

சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப் பார்த்தால், தமிழர்கள் உரிமைக்கு எதிரான அமெரிக் காவின் ‘அரசியல் விளையாட்டை’ப் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களும் சிங்களர் பகுதிகளில் சிங்களர்களும் வெற்றி பெற்றிருப்பதே – அங்கே இரு வேறு தேசிய இனங்கள் இருப்பதற்கான சான்று. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்ததற்கான சான்று – திரிகோணமலை தமிழர் பகுதியில் ஒரு சிங்களர் வெற்றி பெற்றதாகும்.
அரசு நிர்வாகமும் அரசு உறுப்பான நீதித் துறையும், சிங்களப் பேரின வெறியில் மூழ்கிக் கிடக்கும் நாட்டில் தமிழர்கள் மீதான போர்க் குற்ற விசாரணைகள் நடுநிலையோடு நடக்கும் என்று சராசரி அறிவுள்ளவர்கள்கூட ஏற்க முடியாது. 1983ஆம் ஆண்டு அங்கே தமிழர்கள்மீது ஜெயவர்த்தனா ஆட்சியில் கொடூரமான இனப் படுகொலை நடந்தபோது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரே ஒரு தமிழர்தான். ஆனாலும், எந்த ஒரு சிங்களருக்கும் எதிராக, எந்த ஒரு வழக்கோ, விசாரணையோ நடந்த வரலாறு இல்லை. இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் இலங்கையில் சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அதுவரை கிடப்பில் போடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க முயன்றது. எந்த ஒத்துழைப்பும் இலங்கையிடமிருந்து கிடைக்காத நிலையில், மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கே தகுதியற்ற நாடு இலங்கை என்று அறிவித்துவிட்டு, நிபுணர்கள் குழு வெளியேறியது. இந்த உண்மைகள் இந்தியாவுக்கு தெரிந்திருந்தும் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம்.
அய்.நா.வின் பொதுச் செயலாளராக இருந்த பான்கிமூன் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை. “சிறீலங்கா நீதித் துறையின் கடந்தகால செயல்பாடுகளைப் பரிசீலித்தால் அது நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இக்குழுவுக்கு சிறிதளவும் இல்லை” எனக் கூறிவிட்ட பிறகு, “இதே அய்.நா. மன்றம், உள்நாட்டு விசாரணையை இலங்கையிடம் ஒப்படைக்கலாமா என்று கேட்கிறோம். அதுமட்டுமல்ல, ஏற்கெனவே இலங்கை அரசு தனக்குத்தானே நியமித்துக் கொண்ட ‘எல்.எல்.ஆர்.சி.’ (கற்ற பாடங்கள்: நல்லிணக்கத்துக்கான ஆணையம்) செயல்படும் நோக்கத்தையோ, சர்வதேச தரத்தையோ கொண்டிருக்கவில்லை” என்றும், அதே குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
இனப்படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே இப்போது திட்டமிட்டு, ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். காரணம், இராஜபக்சே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டுகள்தான். அந்தக் குற்றத்திலிருந்து இலங்கை பேரினவாத அரசு, இப்போது தந்திரமாக தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் இணைந்து இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கின்றன.
அமெரிக்கா முதன்முதலாக அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதே அமெரிக்காவை ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட கேள்வி எழுப்பலாம். இது முதிர்ச்சியற்ற கேள்வி என்பதே நமது கருத்து. சர்வதேசத்தின் ஒவ்வொரு செயல் பாட்டுக்கும் உள்நோக்கம் இருக்கவே செய்கின்றன. செயல்பாடுகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர உள்நோக்கத்தையும் இணைத்துப் பரிசீலிப்பது, சர்வதேச அரசியல் நகர்வில் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. இலங்கையை எதிர்த்தபோது ஆதரிப்பதும், துரோகம் செய்யும்போது எதிர்ப்பதுமே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். நார்வேயின் சமரசத்தை ஏற்று, விடுதலைப் புலிகள் இயக்கம் போர்நிறுத்தம் செய்தது. அதே நார்வே இப்போது தமிழர்களுக்க துரோகமிழைத்துக் கொண்டிருக் கிறது. இந்த சர்வதேச சூழ்ச்சி வலைகளுக்குள்ளேதான் ஒரு நாட்டின் ‘இறையாண்மையும்’ புதைந்து கிடக்கிறது. அதை மீட்டெடுக்க சூழலுக்கேற்ற அணுகுமுறைகள் அவசியமாகின்றன.
ஈழத் தமிழர் விடுதலைப் பாதையில் இது ஒரு சோதனையான காலகட்டம். போர்க் குற்றங்களுக்கு எதிரான டப்ளின் தீர்ப்பாயம் தந்த அறிக்கை – அய்.நா. மூவர் குழு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களும், மனித உரிமை இயக்க அறிக்கைகளும். இப்போதும் தமிழர் விடுதலையில் உறுதியாக நிற்கும் வடக்கு மாகாண முதல்வர் நீதிபதி விக்னேசுவரன், மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய “சர்வதேச விசாரணை” வேண்டும் என்ற தீர்மானமும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானமும் தமிழர்களின் வலிமையான படைக்கலன்கள். இந்தப் படைக்கலன்களைப் பயன்படுத்தி, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக உலகத் தமிழர்களோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும்!

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

You may also like...

Leave a Reply