வகுப்புவாரி பிரதிநிதித்துவம் II
சென்ற வாரத்திற்கு முன் 5-ம் இதழ் தலையங்கத்தில் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஐ’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி கூறின ஆnக்ஷபனைகளை 37 பாகங்களாக வகுத்து, அவற்றுள் முதல் 12 பாகங்களுக்கு மட்டிலும் தக்கவாறு பதில் எழுதியிருந்தோம். மிஞ்சிய 25 பகுதிகளுக்கும் இவ்வாரம் சில எழுத முற்பட்டுள்ளோம். அவையாவன:-
13 – வது, ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, தற்சமயம் நடக்கும் வகுப்பு மகாநாடு களைப் பார்த்தால் அரசாங்க விஷயமாக யார் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்கிறார்.
இதை தைரியமாய் ஒப்புக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறோம். இவற்றிலிருந்து நாடெங்கும் வகுப்புணர்ச்சி மலிந்திருப்பதும் அக்காரணத் தால் அரசாங்கத்தைப் பற்றி ஜனங்களுக்கு அவ்வளவு கவலை இல்லை என்பதும் புலனாகிறது. ஆதலால் ‘இரண்டொருவர் தங்களது சுயநலத்திற்காக வகுப்பு துவேஷத்தைக் கிளப்பி விடுகிறார்களேயல்லாமல் பொது மக்களிடம் அவ்வுணர்ச்சி இல்லை’ என்று பிராமணப் பத்திரிகைகள் சொல்லுவது யோக்கியப் பொறுப்பற்றத்தனமென்பதும், நாடு பூராவும் அதே கவனத்தில் இருக்கிறதென்பதும் நன்கு புலனாகும். ஏன் அப்படி வகுப்புக் கவலையில் இருக்கிறது என்று யோசிப்போமானால், ஒரு வகுப்பாருக்கு மற்றொரு வகுப் பார் செய்யும் கொடுமையும் சூழ்ச்சியும் தாங்க முடியாமலேயே யல்லாமல் வேறென்னவென்று சொல்லமுடியும்?
14 – வது, ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் உப வகுப்புகள் ஏற்படுவதால் பிரதிநிதித்துவம் எல்லையில்லாமல் போகும் என்கிறார்.
இதற்கு ஆதாரமில்லை. அப்படியிருப்பதாக வைத்துக் கொண்டாலும் பாதகமில்லையென்றே சொல்லுவோம். ஆனால் தமிழ்நாட்டில் இந்துக்களும் மூன்று வகுப்புதான் இதுபோழ்ந்து வகுக்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் முதல் பிராமணர் மற்றும் பலர் ஈறாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதாவது:-
(அ) பிராமணர் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட நமது நாட்டுப்பார்ப்பனர்.
(ஆ) க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பார்ப்பனர்களால்
சொல்லப்பட்ட பார்ப்பனரல்லாதார்.
(இ) பஞ்சமர் என்றும், தீண்டக்கூடாதவர் என்றும், சண்டாளர்
என்றும் பார்ப்பனர்களால் பெயரிடப்பட்ட ஆதி திராவிடர்கள்.
இம்மூன்று வகுப்புக்களுக்குத்தான் இப்போது வகுப்பு வாரியாகப் பிரதிநிதித்துவம் கேட்கப்படுகிறது. இப்போதுள்ளவையும் இம்மூன்று வகுப்பு களேயாகும். இதைவிட அதிகப் பிரிவுகள் ஏற்பட ஆதாரமில்லை. வகுப்பு வித்தியாசங்களின் அஸ்திவாரமெல்லாம் ஒருவன் உயர்ந்தவன், மற்றவன் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கொண்டதேயல்லாமல்; செட்டியார், நாயுடு, நாயக்கர், முதலியார், பிள்ளை, கவுண்டர், உடையார், நாடார், தேவர், ஐயர், ஐயங்கார் என்கிற பட்டத்தை ஆதாரமாகக் கொண்ட தல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
பல காரணங்களால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லும் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும் இம் மூன்று பிரிவையே ஒப்புக்கொள்ளுகிறார்கள். சர்க்காரும் இம்மூன்று பிரிவை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்ப்பனர்களும் இம்மூன்று பிரிவை ஒப்புக் கொண்டு, மாண்டேகு – செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தின் கீழ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒரு வகையில் வழங்கி இருக்கிறது. காங்கிரசும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு முஸ்லீம்களுக்குக் கொடுத்ததோ டல்லாமல், மகாத்மாவும் ஒப்புக்கொண்டு காங்கிரஸ்வாதிகளிலேயே முஸ்லீம் களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், தாழ்ந்த வகுப்பார் என்போர்களுக்கும் பிரதிநிதித்துவம் பிரித்து கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விதிகளில் 8-வது விதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ள 25 ஸ்தானங்களில் மகம்மதியர்களுக்கு நான்கு, கிறிஸ்தவர்களுக்கு ஒன்று, தீண்டாதவர் என்கிற வகுப்பினருக்கு ஒன்று என்று பிரித்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது தற்சமயம் எப்படியிருந்தாலும் மகாத்மா தலைமையின் போது அதுதான் இந்தியாவின் அரசியல் ஸ்தாபனம். அதைத்தான் இந்திய தேசிய பார்லிமெண்ட் என்றும் சொன்னோம். அதில் வகுப்பையும் பிரித்து பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திய பிறகும் இந்திய தேசீய சமூகம், சிறப்பாய் தமிழ்நாடு தேசீய சமூகம் முழுவதும் ஒப்புக் கொண்டு அதனால் யாதொரு இடையூறுமில்லாமல் தேசீய காரியங்கள் நடந்து வரும்போதும், ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எல்லையில்லாமல் போய்விடும் என்கிற பயம் அப்பொழுது ஏற்படாமல் இப்பொழுது ஏற்பட்ட காரணம் என்ன என்பது தெரியவில்லை.
15-வது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டதானால் சட்டசபைகள் வகுப்புக் காட்சியாய் முடியும் என்கிறார்.
இந்தியா தேசமெங்கும் வகுப்புக் காட்சியாய் இருக்கும் போது அதற்கு ஏற்பட்ட சட்டசபை அதைப் போலவே தான் இருக்க முடியும். அப்படிக் கில்லாமல் எல்லா வகுப்புக்கும் ஒரே வகுப்பார் பிரதிநிதியாய் இருக்கிறார்கள் என்றால், இந்தியாவை இந்தியர்களின் நன்மைக்கு இந்தியர்களே ஆள வேண்டும் என்று கூறுவதற்கும், இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பதற்கும் பொருள் என்ன? வகுப்பு நன்மையைப் பற்றி கவலை யில்லை, ஜாதியைப் பற்றி கவலையில்லை என்று சொல்லுவோமானால் உத்தியோகத்தை ஐரோப்பிய மயமாய் இருப்பதைக் களைந்து இந்திய வகுப்பு மயமாய் ஆக்கவேண்டும் என்று நாம் ஏன் பிரயத்தனப்பட வேண்டும்? ஐரோப்பியர்களை விரட்டி விட்டு அவர்களுடைய உத்தியோகத்தைப் பார்ப்பனர்கள் அநுபவிக்கவா? அல்லாமல் இந்தியர்கள் அநுபவிக்க என்று சொன்னால், இந்தியர்கள் என்றால் என்ன? பல மதம் பல வகுப்புகள் கொண் டது. அப்படியானால் எல்லா மதங்களும், எல்லா மதஸ்தரும், எல்லா வகுப் பினரும் ஆளுவதுதான் இந்தியர் ஆளுகை, இந்தியர் அநுபவம் என்று சொல்லலாம்.
16 -வது, (இதைக் கொடுத்தால்) இதோடு நிற்காமல் உத்தியோகங் களிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும், கல்வி போர்டுகளிலும் பிரதிநிதித்துவம் கேட்பார்கள் என்கிறார்.
ஆம், கேட்போம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தத்துவமே அதுதான். பல வகுப்பார்கள் கொண்ட இந்தியாவின் ராஜரீக உத்தியோகத் திற்கு ஒரு வகுப்பார் மாத்திரம் எப்படி வார்சுதாரர்களாக ஆகக் கூடும்? “ஐயோ! கேட்பார்களே!” என்று ஏன் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஆத்திரப்பட வேண்டும்? யார் வீட்டுச் சொத்து?
“பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா” என்பது போல் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் வகுப்புக்கு இந்திய உத்தியோகத்தில் ஏக போக பாத்தியமேது? உத்தியோகங்களிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், கல்வி போர்டிலும் கண்டிப்பாய் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பதாயிருந்தால் தான் இந்தியா இந்தியர்களால் ஆளப்பட வேண்டும் என்று கேட்க உரிமை உண்டு. அதிலும் கல்வி போர்டில்தான் கண்டிப்பாய் பிரதிநிதித்துவம் வேண் டும். அதில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாததால்தான் இன்றைய தினம் பிராமணரல்லாதாரும் சிறப்பாய் தீண்டாதார் என்போரும் நமது நாட்டில் இவ்வளவு கேவலமான நிலைமையிலிருக்கக் காரணம். கல்வி இலாக்காவை எடுத்துக் கொண்டால் வைஸ்சான்சலர் ஒரு சிவசாமி ஐயர், செனட் மெம்பர் களோ பல சீனிவாச ஐயங்கார்கள், சர்வகலாசாலை அங்கத்தினர்களோ பல ராமசாமி சாஸ்திரிகள், கல்வி இலாக்கா இன்ஸ்பெக்டர்களோ பல பிராமண சாஸ்திரி சர்மாக்கள், தலைமை உபாத்தியாயர்களோ பல ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், சர்மா சாஸ்திரிகள். இவற்றின் செலவுக்கு பணம் மாத்திரம் கவுண்டர், முதலியார், செட்டியார், உடையார், நாயக்கர், நாயுடு, பிள்ளை, நாடார், கோனார் முதலியவர்கள் தங்கள் குடித்தனம் கெடும்படி கள்ளும் சாராயமும் குடித்துக் கொடுக்க வேண்டும். சர்க்கார் அந்த வரும்படி யிலிருந்தே செலவு செய்ய வேண்டும். இத்தனைப் பார்ப்பன ஓநாய்களையும் தப்பி பார்ப்பனரல்லாத பறையர், பள்ளர், சாம்பன், புலையன், சக்கிலி,நாயக்கர், கவுண்டர், பிள்ளை, முதலியார், சாயபு, இன்னாசிமுத்து முதலிய ஆட்டுக் குட்டிகள் கல்வியில் உருப்படி ஆவதென்றால் லேசான காரியமா?
இவ்வருஷம் ஒரு பள்ளியின் அரிவிரி வகுப்பில் 98 பார்ப்பனரல்லாத குழந்தைகளும் 2 பார்ப்பன குழந்தைகளுமாகச் சேர்ந்து படிக்குமானால் இன்றைக்கு 14-வது வருஷம் இவர்களின் படிப்பைக் கவனித்தால் 98 பார்ப்ப னப் பிள்ளைகள் 2 பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வீதமாகவே பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருப்பார்கள் இதன் காரணமென்ன? கல்வி இலாக்கா போர்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததுதான். அல்லாமல் வேறு காரணம் என்ன சொல்லக்கூடும்? பிராமணரல்லாத பிள்ளைகளுக்குப் புத்தி யில்லை என்று சொல்லிவிடமுடியுமா? ஒவ்வொரு இலாக்காவிலும் பள்ளிக் கூடங்களிலும் வகுப்புப்படி உபாத்தியாயர்களை நியமித்தால் கண்டிப்பாய் எல்லா வகுப்புப் பிள்ளைகளும் சமமாக படிக்க வசதி ஏற்படும். இப்போது கல்வி இலாக்காவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படாத காரணமே பிராமணரல்லாதார் கல்வி கற்காமலிருப்பதற்கும், முக்கியமாக, தேசத்திற்கு உபயோகமான கல்வி ஏற்படாமலிருப்பதற்கும், கற்ற கல்வியும் அடிமைத் தனத்திற்கும் இழி தன்மைக்கும் நீச்ச புத்திக்கும் சுயநலத்திற்கும் உதவவும் கொடுமையான சூழ்ச்சி முறையை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்து வருகிறது.
நமது நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள் “அந்நிய அரசாங் கத்தார்”; நமது நாட்டுக்குக் காவற்காரர்களாய் ஏற்பட்டவர்களோ நமது பார்ப்ப னர்கள்; கொள்ளைக்காரர்களும் காவற்காரர்களும் ஒன்றுபட்டு விட்டால் நமது கதி என்னவாகுமென்பதை சொல்ல வேண்டுமா?
17-வது, 18-வது, உத்தியோகம் பெற்றால் பெற்றவருக்குத்தான் நன்மை யே தவிர வகுப்புக்கு நன்மையில்லை என்கிறார். மேலும்,
19, 20 -ல் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த உத்தியோகஸ்தரும் தங்கள் வகுப்புக்கு என்ன நன்மை செய்வது என்று எண்ணுவார்களே தவிர தேசத்தைக் கவனிக்க மாட்டார்கள் என்றும் சொல்லுகிறார்.
இங்கு முன்னுக்குப் பின் முரண்படப் பேசியுள்ளார் என்பது வாசகர் களுக்கே தெரியும். ஒவ்வொரு வகுப்பாரும் தத்தம் வகுப்பைப் பார்த்துக் கொண்டுதான் தேசத்தைப் பார்க்க முடியும். அவரவர் பெண்டு பிள்ளை களைப் பட்டினி போட்டு வைத்துவிட்டு பிராமணர்களுக்கு சமாராதனை செய்தால் அதைப்போல முட்டாள்தனமான காரியம் வேறொன்று இருக்காது. பல வகுப்புகள் சேர்ந்ததுதான் நம் நாடு. ஒவ்வொரு வகுப்பும் அதனதன் நன்மையை நாடிவிட்டால் எல்லா வகுப்பும் நன்மையை அடைந்து விட்டதாகி விடும். அப்போது நாடு முழுவதும் நன்மையை அடைந்ததாகிவிடும்.
18-வது, நூற்றுக்கு ஐந்து பேருக்கு மேல் உத்தியோகம் கொடுக்க முடியாது என்கிறார்.
அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த நூற்றுக்கு ஐந்து வீதத் தையே வகுப்பு எண்ணிக்கைக்குத் தகுந்த வீதம் வைத்துக் கொள்ளுவதில் ஆnக்ஷபனை என்ன?
21-வது, ஸ்தல ஸ்தாபனம், கல்வித்துறை இவைகளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அனாவஸ்யம் என்கிறார் .
இதனால் மற்ற துறைகளுக்கு அவசியம் என்பதை இவரே ஒப்புக் கொள்ளுகிறார். ஸ்தல ஸ்தாபனத்திற்கும் கல்வித்துறைக்கும் மாத்திரம் இவர் ஏன் பயப்பட வேண்டும்? முன் சொன்னது போல பிராமணர்களின் அட்டூழி யத்திற்கு அவர்களுக்கு முக்கிய ஆதாரமாயிருப்பது கல்வித்துறையே. ஆத லால் எது போனாலும் அதுமாத்திரம் தங்கள் கையை விட்டுப் போகக்கூடாது என்று இவ்வளவு தூரம் மாயக் கண்ணீர் வடிக்கிறார்.
22 – வது, தாழ்ந்த வகுப்புக்கு நியமனமே போதுமென்கிறார். அப்படிப் போதாவிட்டால்……
23 – ல், அவர்கள் ஓட்டுரிமையை தாராளமாக்கி மற்ற தொகுதிகளுடன் சமமாய் தேர்தல் நடத்துவது நலம் என்கிறார்.
இவைகளில் இருக்கும் திருட்டுத்தனம் படிப்பவருக்கு விளங்காமல் போகாது. அதாவது தாழ்ந்த வகுப்பாரை சர்க்கார் நியமனத்தையே எதிர்பார்த் துக் கொண்டிருக்கும்படி செய்து விட்டால் பிராமணரல்லாதாருடன் சேர மாட்டார்கள் என்கிற தந்திரம் ஒன்று. தாழ்ந்த வகுப்பாரின் ஓட்டுரிமையைத் தாராளமாக்கி வைத்துவிட்டால் அவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு ஏமாற்றி அந்த ஓட்டின் பலனாயும் பிராமணரல்லாதார் தலையில் கையை வைத்துவிட்டு எல்லா ஸ்தானங்களையும் தாங்களே அபகரித்துக் கொள்ள லாம் என்கிற தந்திரம் மற்றொன்று.
மற்றவைகளுக்கு மறுமுறையில் எழுதுவோம்.
குடி அரசு – கட்டுரை – 20.06.1926