‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (7) கரந்தை தமிழ்ச் சங்கக் கூட்டத்தின் பின்னணி என்ன?

சென்ற இதழ் தொடர்ச்சி

இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா?
“நமது தமிழ்ப் பண்டிதர் கம்ப ராமாயணத்தில் கருப்பொருள் தேடவும், திருவிளையாடல் புராணத் துக்கு 77 ஆவது உரை எழுதவும், பெரிய புராணத் துக்கு 113 ஆவது உரை எழுதவும் தான் தகுதி யுடையவர்களாகவும் கவலை உடையவர் களாகவும்” உள்ளதைக் கண்டிக்கிறார். “இந்த நாட்டில் உண்மைத் தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது” என்கிறார், பெரியார்
தோழர் மணியரசன் பெருமிதத்தோடு குறிப் பிடுவதைப்போல, தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்புக்கு வழிகாட்டியிருந்தால் இந்தக் கோபம் பெரியாருக்கு எப்படி வந்திருக்க முடியும்?
“ஆகையால், ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் பொதுக் கூட்டம் போட்டு, இந்த சூழ்ச்சியைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு மேன்மை தங்கிய கவர்னருக்கும், தமிழ் வேளாள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும், ஆரிய மந்திரி கனம் ஆச்சாரி யாருக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியப் படுத்த வேண்டும்” என்று 22.8.1937 ‘குடிஅரசில்’ தலையங்கமாக எழுதுகிறார்.
அப்படிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 27.8.1937 அன்று கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தைத்தான் 10.8.1937இல் இராஜாஜியின் கட்டாய இந்தி எதிர்ப்பு அறிவிப்புக்கு எதிரான முதல் எதிர்வினை என்றும், பெரியார் அதற்குப் பின்னரே இந்தி எதிர்ப்புப் போரில் இணைந்து கொண்டார் என்கிறார்கள் இந்த அறிஞர்கள்! பிறருக்கு ஆலோசனை சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை பெரியார். 1.7.1937 முதல் நாளேடாக மாற்றப்பட்டு வெளிவந்து கொண்டிருந்த தமது ‘விடுதலை’யில் ஏற்கெனவே வெளியிடப்பட் டிருந்த யோசனையை மீண்டும் எடுத்துரைக்கிறார்.
“திருநெல்வேலியிலிருந்து ஒரு ‘ஜாதா’ அதாவது தமிழ் பாஷை அபிமானம் கொண்ட மக்கள் முறையீட்டுக் கூட்டம் ஒன்று தொடங்கி, நேரே சென்னை வரையில் கால்நடையாய் நடந்து, வழியில் ஆங்காங்கு கூட்டம் போட்டு, தீர்மானமும் செய்து மக்களுக்கு இந்திப் புரட்டையும் சூழ்ச்சியையும் விளக்கிக் கொண்டுபோய் சரணாகதி மந்திரிகளுக்குத் தெரிவித்துத் தமிழைக் காப்பாற்றவும், விரோதமான சூழ்ச்சியை அழிக்கவும் முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்” என்ற செயல் திட்டத்தையும் முன் வைக்கிறார்.
இராஜாஜி 10.08.1937இல் அறிவித்திருந்தாலும் கட்டாய இந்தி, அடுத்த கல்வியாண்டில், அதாவது 01.06.1938இல் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது. 03.06.1938 அன்று சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவரும், இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரியாக அறிவிக்கப்பட்ட வருமான செ.தெ. நாயகம், சண்முகானந்த அடிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சுயமரியாதை இயக்க முன்னோடிகளான ‘நகர தூதன்’ ஆசிரியர் மணவை திருமலைசாமி, பட்டுக் கோட்டை அழகிரிசாமி, மூவலூர் இராமாமிர்தத் தம்மாள், ஐ.குமாரசாமிப் பிள்ளை முதலிய 100 பேர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்பு கால்நடைப் பிரச்சாரப் படை 01.08.1938 அன்று திருச்சி உறையூரி லிருந்து புறப்பட்டு, 42 நாள்கள், 87 பொதுக் கூட்டங் களை நடத்தி, 928 கிலோ மீட்டர்கள் பயணித்து 11.09.1938 அன்று சென்னையை அடைந்தது. அங்கு நடந்த இந்தி பிரச்சாரப் படையை வரவேற்று சென்னை கடற்கரையில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முதன் முறையாக பெரியாரால் முன் வைக்கப்பட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார் ரெவரண்ட் அருள் தங்கையா, மூவலூர் இராமா மிர்தத்தம்மாள், பண்டிதை நாராயணி அம்மையார், வ.பா. தாமரைக் கண்ணி அம்மையார், வேலூர் ஷர்புதீன், திருப்பூர் மொய்தீன் போன்ற தலைவர்களும், தமிழறிஞர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண் டார்கள். இவ் வர வேற்புக் கூட்டத்தில் தமிழறிஞர்கள் இருக்கிறார்களே என்று சிலர் அய்யுறக்கூடும். ஏற் கெனவே குறிப்பிடப்பட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தின் இறுதிப் பகுதியைப் படித்தால் அந்த அய்யம் தீரும்.
“இந்த சமயம் தமிழ் மக்கள் தூங்கி இருப்பார்களேயானால் தமிழ் மக்கள் பின்னால் உண்மையிலேயே சூத்திரர்களாகவே ஆகிவிட வேண்டி வரும். இதில் காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை என்ற பிரிவுகளோ, ஆஸ்திகம், நாஸ்திகம் என்ற உணர்ச்சிகளோ, சைவம், வைணவம் என்கின்ற சமய பேதமோ வேண்டியதில்லை என்பதோடு, ஆரியரல்லாத தமிழ் மக்கள் யாவரும் ஒன்று கூடி முயற்சித்து வேலை செய்ய வேண்டியது அவசியமும் அவசரமுமான காரியம் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று முடிக்கும் அந்த தலையங்கத்தின் வழியாக பொது எதிரியாக தமிழ் மக்களுக்கு வருகின்ற இந்தித் திணிப்பை எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்ப் போம் என்ற அரவணைக்கும் போக்கு பெரியாரிடமும், அழைப்பை ஏற்று இணையும் பெருந்தன்மை ஆஸ்திக, சைவ, காங்கிரஸ் தலைவர்களுக்கும் இருந்துள்ளது. அந்த சிந்தனைப் போக்கு நாம் பெருமையோடு எண்ணவும், பேணிக் காக்கவும், நம் தலைமுறைக்கு விட்டுச் சென்ற ஆழமான பாடமாகவே நாம் கருத வேண்டும்.
(தொடரும்)

பெரியார் முழக்கம் 21082014 இதழ்

You may also like...

Leave a Reply