தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தவர்கள் இவர்கள். உச்சநீதிமன்றம் தண்டனையை நீக்கலாம் அல்லது உறுதிப்படுத்தலாம். ஆனால், வழமைக்கு மாறாக அரசு தரப்பில் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காமலே உச்சநீதிமன்றமே தன்னிச்சையாக தலையிட்டு தூக்கு தண்டனை விதித்தது!

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் வலிமையான ஆதாரங்கள் இன்றி, உளவுத் துறையால் பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்ட சரணடைந்த போராளி அப்சல்குரு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 8 ஆண்டுகாலத்துக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார். கருணை மனுவுக்கு விண்ணப்பித்த ஒரு கைதி, இரண்டு ஆண்டுகாலம் காத்திருந்தாலே தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓ.சின்னப்ப ரெட்டி, ஆர்.பி. மிஸ்ரா, 1983இல் அளித்த தீர்ப்பை (டி.வி.வேதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு அரசு) புறந்தள்ளி விட்டு, இந்தக் கருத்து தீவிரவாதிகளுக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சக்திகள், அப்சல் குருவை தூக்கிலிட்டே தீரவேண்டும் என்று தொடர்ந்து இயக்கங்களை நடத்தின. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் அமைச்சரவையும் பச்சைக்கொடி காட்டியது. அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சர் ஷிண்டே தூக்கிலிடுவதில் உறுதியாக இருந்தார். குடும்ப உறுப்பினருக்கு முறையான அறிவிப்பு தராமல், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் கருத்தில் கொள்ளாமல், ‘இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை’த் திருப்திப்படுத்துவதற்காக நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சக்திகள், அப்சல்குருவை தூக்கிலிடத் துடித்ததுபோல், காங்கிரஸ் ஆட்சி, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 23 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடத்துடித்தது. தூக்கில் போட நாளும் குறிக்கப்பட்டது. இப்படி விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தூக்குத் தண்டனையைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்த அரசியல் மதவாத சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது, இப்போது வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

உச்சநீதிமன்றம் தூக்கிலிடப்படுவதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்துத் தந்திருக்கிறது.

  1. கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்வதற்கு முன்பே, தூக்குத் தண்டனை கைதிகளை தனிமை சிறையில் அடைப்பது சட்டவிரோதமானது.
  2. கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்குப் பிறகு, தூக்கு கைதிக்கு சட்ட உதவிகள் வழங்குவது குறித்து சிறை விதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு கைதிக்கு கடைசி மூச்சு இருக்கும் வரை உயிர் வாழும் உரிமை அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். எனவே, கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டப் பிறகும், ஒரு கைதிக்கு கிடைக்க வேண்டிய சட்ட உதவிகளை கிடைக்கச் செய்ய வேண்டும்.
  3. வழக்கு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் வழக்கு ஆவணங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் சேகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிய பிறகு, குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து எந்தத் தகவலும் வராவிடில், உள்துறை அமைச்சகம் நினைவூட்டுதலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
  4. ஒரு ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ, கருணை மீது முடிவெடுக்க வேண்டியது, அரசியல் சட்ட ரீதியாக நிறைவேற்ற வேண்டிய கடமையே தவிர, அவர்களின் விருப்பப்படி செயல்படக் கூடிய ஒன்றல்ல.
  5. கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அத்தகவல் கைதியின் குடும்பத்துக்கு எழுத்துப்பூர்வமாக கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்திட வேண்டும்.
  6. தூக்கிலிடப்படுவதற்கு 14 நாள்களுக்கு முன்பு தேதி குறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கைதி மன ரீதியாக தன்னை தயார்படுத்தி அமைதியாக்கிக் கொள்ள முடியும். குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்திக்க அனுமதிக்க வேண்டும். குடும்பத்தினருக்கு தகவல் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது சிறை அதிகாரியின் பொறுப்பு.
  7. தூக்கிலிடப்படும்போது ஒரு கைதி சரியான மனநிலையில் இல்லாதிருந்தால், சிறை அதிகாரி தூக்கிலிடுவதை நிறுத்தி, மருத்துவக் குழுவின் முன் கைதியை நிறுத்தி சோதனைக்கும் ஆய்வுக்கும் உள்ளாக்க வேண்டும்.
  8. தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்படும் கைதிகளில் பெரும்பாலோர் வறிய நிலையில் வாழும் ஏழைகள் தான். நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற முடியாத நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு ஒரு வாரத்தில் நீதிமன்ற ஆவணங்களைக் கிடைக்கச் செய்ய வேண்டியது சிறை அதிகாரிகளின் பொறுப்பு. குடும்பத்துடனான சந்திப்புக் குறித்து சிறை விதிகள் ஒரே சீராக இல்லை; சில மாநிலங்களுக்கான சிறை விதிகளில் இது பற்றிய குறிப்புகளே இல்லை. மனித நேயத்துக்கும் சட்டத்துக்கும் உகந்த சிறைச்சாலை விதிகள் அவசியமாகும்.

– என்று உச்சநீதிமன்றம் விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டப் பிறகு நீண்டகாலம் தூக்கிலிடப்படாத கைதியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், ‘பயங்கரவாதிகள்’, ‘பெரும் எண்ணிக்கையில் கொலை செய்தவர்கள்’ என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. (அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செயதது – அவர் ஒரு பயங்கரவாதி என்ற அடிப்படையிலும், ‘காலதாமதம்’ என்ற  வாதம் – பயங்கரவாதிக்குப் பொருந்தாது என்ற அடிப்படையிலும்தான்)

கருணை மனு மீது ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ முடிவெடுத்துவிட்டால், பிறகு நீதிமன்றம் தலையிடவே முடியாது என்ற கருத்தை ஏற்காத உச்சநீதிமன்றம், அதில் தலையிட்டு பரிசீலிக்க, நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

கொலை செய்தால் தூக்கு மட்டுமே தண்டனை என்று  1860 இல் இந்திய தண்டனைச் சட்டம் கூறியது. அதற்குப் பிறகு, 1956இல் கொலை குற்றங்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. அதன் பிறகு 1973இல் கொலைக் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்க வேண்டும்; விதிவிலக்காக மரண தண்டனை வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. அதற்குப் பிறகு, 1980ல் பச்சான்சிங் வழக்கில், அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும், அதுவும் அதன் சிறப்புத் தன்மையைப் பதிவு செய்துவிட்டுத்தான் மரணதண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்தது. அதன் நீட்சியாக, கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கருணை மனுக்கள் நீண்டகால கிடப்பில் போடப்பட்டால், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக்கிட வேண்டும் என்று உறுதிப்படுத்தி, தூக்குத் தண்டனை நிறைவேற்றம் குறித்த வழிகாட்டு முறைகளையும் தெளிவாக உச்சநீதிமன்றம்  வகுத்துள்ளது. தூக்குத் தண்டனை ஒழிப்பு நோக்கிய பயணத்தின் படிநிலை வளர்ச்சி நிலைகளாகவே இந்தத் தீர்ப்பையும் கருதி வரவேற்கிறோம்.

பெரியார் முழக்கம் 30012014 இதழ்

You may also like...