‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (6) 1926லேயே இந்தி எதிர்ப்பை தொடங்கியவர், பெரியார்

சென்ற 5ஆம் பாகம் படிக்க

இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா?
ஆனால், தான் கடந்த அய்ந்தாண்டுகளாக ஒவ்வொரு மாகாண காங்கிரசு மாநாடுகளிலும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த வகுப்புவாரி தீர்மானம் ஏற்கப்படாததையும், இறுதியாக காஞ்சி புரம் மாநாட்டிலும் விதிகளின்படி 30 உறுப்பினர் களுக்கு மாறாக எழுபது உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொடுத்தும் விவாதத்துக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் சூழ்ச்சியாக கைவிடப்பட்டதையும் கண்ட பெரியார், காங்கிர° மாநாட்டில் இருந்து வெளியேறுகிறார். வெளியேறிய பெரியார், தான் காங்கிரசில் இருந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்த காங்கிரசு-காந்தி கொள்கைகளை மீளாய்வு செய்யத் தொடங்குகிறார்.
முதலில் அவரால் திறனாய்வுக்கு உள்ளானக் கொள்கை காந்தியின் ‘இந்தி’ கொள்கை தான். 1925 நவம்பர் இறுதியில் வெளியேறிய பெரியார், 1926 மார்ச் மாதம் தனது ‘குடிஅரசு’ இதழில், “தமிழிற்குத் துரோகமும், ஹிந்தி பாஷையின் இரகசியமும்” என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
இந்திப் படிப்பவர்களில் 100க்கு 3 பேராய் மக்கள் தொகையிலுள்ள பார்ப்பனர்களில் 100க்கு 97 பேரும், 100க்கு 97 பேராய் உள்ள பார்ப்பனரல்லாதாரில் 100க்கு 3 பேர்கூட படித்திருக்க மாட்டார்கள். ஆனால் பணம் 100க்கு 97 ரூபாய் பார்ப்பனரல்லாதார் பணம் என்பதாக குறிப்பிட்டுவிட்டு, “இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றி அதிகக் கவலை ஒன்றும் இல்லை. ஆனால், இதில் 100 இல் ஒரு பங்கு கவலைகூட தமிழ்மொழிக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், இந்தி படித்த பிராமணர்களால் நமக்கு ஏற்படும் கெடுதியையும் நினைக்கும்போது, இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன்தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத் தினத்திற்கும் வெட்கப்படாமலும் இருக்க முடியவில்லை” என்று, தான் இந்தி பள்ளயைத் தன் செலவில் நடத்தியதையெண்ணி தான் இழைத்துவிட்ட பிழைக்கு தன்னையே நொந்து கொள்கிறார் பெரியார். தொடர்ந்து இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்படலாம் என்றும் அது பெரும்பான்மை யாளராய் வாழும் பார்ப்பனரல்லாத மக்களுக்குத் தீங்காகவே முடியும் என்பதையும் எழுதுகிறார்.
“இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள் போல், தேசத்தின் பேரால் ஆங்காங்கு பிராமணர்கள் பேசுவதும், அதைச் சர்க்கார், பள்ளிக்கூடம் முதலிய பலவிடங்களில் கட்டாயப்பாடமாக்கப் பிரயத்தனப்படுவதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரச்சாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது” என்று முன் உணர்ந்து எழுதுகிறார்.
“இந்தியின் தீங்கு குறித்து அறிந்தாலும், அவர்கள் பார்ப்பனாகளுக்கு பயந்து கொண்டும், தேச துரோகி பட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சியும் வெளியே பேசத் துணிவதில்லை” என்கிறார் பெரியார்.
“பொதுவாக இந்தி என்பது வெளி மாகாணங் களில் பிராமண மதப் பிரச்சாரம் செய்யக் கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகிவிட்டது. இரண்டடொரு வருக்கும் அதன் இரகசியம் தெரிந்தாலும் பிராமணர் களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப் பாடிவிடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத் துரோகியென்று சொல்லிவிடுகிறார்கள்” என்று அக்கட்டுரையில் பெரியார் கூறுகிறார். (‘குடிஅரசு’ 7.3.1926)
ஒரு வேளை காஞ்சிபுரம் மாநாட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.க., மக்களுக்கு இந்தி கற்பிக்க எடுத்த முயற்சிகளை எண்ணி, கொண்டு வந்த தீர்மானத்தை மனத்தில் கொண்டு இவ்வாறு எழுதியிருப்பாரோ தெரியவில்லை.
அடுத்ததாக 20.1.1929 ‘குடிஅரசில்’ ‘இந்திப் புரட்சி’ எனும் தலைப்பில் தலையங்கம் ஒன்றை எழுதுகிறார் பெரியார். இந்தியைப் பரப்பும் திட்ட செலவு களுக்காக நிதி திரட்டும் முயற்சியைக் குறித்து எழுத வந்த பெரியார், இந்தி மொழி, மொழியின் தகுதி, பயன் குறித்தெல்லாம் விரிவாக எழுதிவிட்டு, “இப்போது தமிழ்நாட்டில் இந்தி பாஷை பரப்ப வந்திருப்ப தென்பது, தற்காலம் தமிழ்நாட்டிலுள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியேயாகும். ஆதலால், இதற்கு எந்த பார்ப்பனரல்லாதாராவது பணம் கொடுத்தால், அது பெரிய சமூகத் துரோகமாகும்” என்று முடிக்கிறார்.
அடுத்ததாக 10.5.1931 ‘குடிஅரசு’ இதழில் ‘கதரும் ஹிந்தியும்’ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையை எழுதியுள்ளார் பெரியார். அக்கட்டுரையில், தோழர் பெ. மணியரசன் இந்தி எதிர்ப்புக்கு முன்னோடி களாகக் கூறும் தமிழ்ப் பண்டிதர்களைப் பற்றி, சீற்றத்தோடு எழுதுகிறார்.
“ஹிந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி, அதைக் கதரைப்போல் – ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அநேகர் இன்னும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணை யும் குழைத்து சூடு போட்டதுபோல் மேலெல் லாம் தீட்டிக் கொண்டு சிவ சிவ சிவ என்பதற்கும், ராம ராம ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனாவசியமாக ஒரு பாஷை, சூழ்ச்சித் திறத்தில் சுமத்தப்படுகின்றதே என்ற அறிவும் கவலையும் கிடையாது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது” என்கிறார்.
இவ்வரிகள் திரு.வி.க.வைச் சுட்டுகிறதா? அல்லது மறைமலை அடிகளையா? நாமம் தீட்டும் ராகவையங்காரர்களையா? நமக்குப் புலப்படவில்லை. ஆனால், தமிழறிஞர்கள் இந்தித் திணிப்பைப் பற்றி அக்கறையற்றே இருந்திருக்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது.
அடுத்ததாக, 14.6.1931 இல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், ‘ஹிந்தி கண்டனத் தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 17.1.1932 இல் ‘சம°கிருத சனியன்’ என்ற தலைப்பில் ஹிந்தியை எதிர்த்தும், 18, 19.6.1932 இல் நடைபெற்ற மன்னார்குடி சுயமரியாதை மாநாட்டில் ஆற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு சொற்பொழிவுகள் குறித்தும் ‘குடிஅரசு’ எழுதியுள்ளது.
13.1.1936 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தமிழ்த் திருநாள் விழா நடைபெற்றுள்ளது. அவ்விழாவில் பெரியாரும், திரு.வி.க.வும் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் கா.நமச்சிவாய முதலியாரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் தமிழ் குறித்தும், தமிழ் வளர்ச்சிக் குறித்தும், தமிழை மேம்படுத்த தமிழை மதத்திலிருந்து பிரிக்க வேண்டும் எனவும் தீபாவளி போன்ற மூடநம்பிக்கை யும், சுயமரியாதையற்றதும், ஆபாசமானதுமான விழாக்களைக் கொண்டாடுவதைவிட தமிழ்த் திருநாளாம் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியும் விரிவான சொற்பொழிவு ஒன்றினை ஆற்றியுள்ளார்.
அவ்விழாவிலும் இந்தி எதிர்ப்புக் கருத்துக்களைப் பேசியுள்ளார். “தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை, இந்திய பாஷையாக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவையெல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட் டால் இந்தி பாஷையில் துளசிதா° இராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்” என்றெல்லாம் பேசி வந்த பெரியார், தோழர் மணியரசனின் ‘முன்னோடி’ தமிழறிஞர்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடிய வில்லை. தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்” என்பதே அது.
இந்த இடித்துரை எங்கோ நடந்த கூட்டத்தில் அல்ல; ஒரு கல்லூரி கூட்டத்தில் – மாணவர்களும், பேராசிரியப் பெருமக்களும், குறிப்பாக தமிழ்ப் பேராசிரியர்களும் உள்ள அவையில், அதுவும் திரு.வி.க., கா. நமசிவாய முதலியார் போன்ற தமிழறிஞர்களும் இருந்த அவையில்தான் தமிழ்ப் புலவர்களின் இந்தி குறித்துள்ள கவலையற்ற போக்கைக் கண்டித்துப் பேசியுள்ளார்.
“தமிழறிஞர்கள்தான் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினர். பெரியார் பின்னர் வந்து சேர்ந்து எல்லாப் புகழையும் அவரே தட்டிப் பறித்துச் சென்றுவிட்டார்” என்ற ஒரு செய்தி பல நிகழ்வுகளில் பேசப்படுகின்றது. ‘நாம் தமிழர் கட்சி’ ஆவணத்தில், சக்திவேல் என்ற நபர் எழுதியுள்ள, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற நூலில், அவரே வெளியிட்ட ஒளிநாடாவில் என பரவலாக இக்கருத்தே முன் வைக்கப்படுகிறது.
அவர்கள் கூறும் வாதம் – 10.8.1937 அன்று சென்னை இராமகிருஷ்ண மடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்தான் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, அடுத்தக் கல்வியாண்டு முதல் இந்தி கட்டாயப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளில் வைக்கப்படும் என்று பேசினார். உடனே தமிழறிஞர்கள் 26.8.1937 அன்று கரந்தை தமிழ்ச் சங்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது தான் முதல் இந்தி எதிர்ப்பு நடவடிக்கையாக எல்லோராலும் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு முன்னதாகவே 22.8.1937 அன்று ‘குடிஅரசில்’, “சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா?” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியிருக்கிறார்.
அதில், ஆங்கிலேயர் ஆட்சியையும், பார்ப்பன ஆட்சியையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் ஒரே கொள்கைதான் என்கிறார்.
அக்கிரகாரச் சனியன்கள் பிரிட்டிஷ் சர்க்காரை சரணாகதி அடைந்து மந்திரி °தானத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு துறையிலும் பழி வாங்கும் குணத்தையும், அக்கிரகார ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் கவலையும் கொண்டு சூழ்ச்சி ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது” என்று தொடங்கும் அந்த நீண்ட தலையங்கத்தின் இடையில் –
“இன்று நமக்கு தொல்லையாயும், நம் சுயமரியாதை வாழ்வுக்கு ஈனமாகவும் இருந்து வரும் ஆட்சி பார்ப்பன ஆட்சியேயாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எப்படியாவது பிரிட்டிஷ் கொடி பறக்க வேண்டியதுதான் அதன் முக்கியக் கொள்கையோ அதேபோல் பார்ப்பன ஆட்சிக்கும் எப்படியாவது பார்ப்பனரல்லாத மக்களை அழுத்தி அழித்து பார்ப்பன ஆட்சியை (மனுநீதி கொடுங்கோல் ஆட்சியை) நிலைநிறுத்த வேண்டும் என்பதேயாகும்” என்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இராஜாஜி தலைமை யிலான காங்கிர° ஆட்சிப் பற்றி தமிழ்நாடு காங்கிர° கட்சியின் செயலாளராக இருந்த சேலம் எ°.வி. இராமசாமி, இராஜாஜி அமைத்த அமைச்சரவை பற்றி வெளியிட்டிருந்த அறிக்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“அக்கிரகார மந்திரி ஆட்சியை சேலம் பாரி°டர் எ°.வி.ராமசாமி சரியான உபமானத்துடன் வருணித்துக் காட்டினார். அதாவது இன்றைய ஆட்சியை ஒரு பிளேக் வியாதிக்கு ஒப்பிட்டார்” என்பதை எடுத்துரைத்து,
“அக்கிரகார ஆட்சி இன்று நம் மக்களின் அறிவு, சுதந்திரம், பொருளாதாரம், நாகரிகம் ஆகிய மூன்று நான்கு காரியங்களிலும் வெளிப்படையாய் தைரியமாய் பழி வாங்கும் தன்மையோடு கைவைத்து காரியங்களைக் காட்டு மிருகத்தனமாய் நடத்த ஆரம்பித்துவிட்டது. மனித சமூக அறிவை பாழ்படுத்த வேண்டியதற்காகவே ஹிந்தி பாஷையைத் தமிழ் மக்கள் படித்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் கல்வியைத் திணிப்பதை” எடுத்துக் காட்டுகிறார்.
“கல்வி விஷயத்தில் இரண்டு முக்கிய விஷயம் கையாளப்பட வேண்டியது அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சி யும் ஏற்படவேண்டும்” என்றெல்லாம் எழுதிவிட்டு, இந்தி திணிக்கப்பட்டால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் சந்திக்க இருக்கும் பின்னடைவுகளை விளக்கிய பெரியார், தமிழ்ப் பண்டிதர்களை நோக்கி தன் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்.
கம்பராமாயணத்தின் கருப்பொருள் கண்டு பிடித்த மக்களில் 100க்கு 5 பேருக்காவது சுயமரி யாதையோடு சமூகப் பற்றோ, தாய்மொழிப் பற்றோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஆரிய இராமாயணம் கொளுத்தப்பட வேண்டும் என்று ஆதியில் நாம் சொன்ன காலத்தில், “இராமாயணக் கதை ஆபாச மானது, வெறுக்கத்தகுந்தது, கீழ் மக்கள் இயற்கை யையும், கெட்ட குணங்களையும் சித்தரிப்பது என்றும், ஆனால் கம்பன் கவித்திறம், தமிழின் கலைத்திறம் முதலியவை கம்பராமாயணத்தில் மலத்தில் கிடக்கும் முத்துப்போல் பொதிந்து கிடப்பதால் அதை எரிக்கக்கூடாது” என்றும் சொன்ன கம்பராமாயணக் கருப்பொருள் பண்டிதர்கள் இன்று பக்கா பட்டரான ஆச்சாரி யார் துளசிதா° இராமாயணம் படிப்பதற்காக ஹிந்தியைக் குழந்தைகளுக்குக் கட்டாயப் பாட மாக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து வரும்போது, “மனைவியை மற்றொருவன் சேலையை அவிழ்த்துப் பலாத்காரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் கதை (மகாபாரதம்) போல் இன்று வாய் திறவாமல் அடிமையாய், துரோகியாய் தமிழ் மாதுக்கு துரோகியாய் வீற்றிருக்கும் காரணம் என்ன என்று கேட்கிறோம்” என மகாவீரர்கள் என்று பீற்றிக் கொண்ட பீமன், அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்ட வர்கள் முன் அவர்களது கூட்டுரிமை மனைவி துரவுபதை (பாஞ்சாலி)யின் துகிலை உரித்தபோது நெட்டை மரங்களாக நின்றதைப்போல், நீங்கள் பெருமையாக அன்னை என்று போற்றும் தமிழ்ப் பெண்ணுக்கு ஆபத்து வரும்போது வாளாவிருக்கும் தமிழ்த் துரோகத்தைக் கடுமையாக சாடுகிறார் பெரியார். அதோடு விட்டு விடவில்லை பெரியார். தொடர்ந்து அத்தலையங்கத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் கிடப்பதைக் கண்டு மேலும் பொங்குகிறார்.
(தொடரும்)

பெரியார் முழக்கம் 14082014 இதழ்

You may also like...

Leave a Reply