காந்தி கொலை வழக்கு விசாரணை : சில தகவல்கள்
• காந்தியார் கொலை வழக்கு 1948 மே மாதம் இறுதியில் டெல்லி செங்கோட்டையில் தொடங்கி 7 மாதங்கள் நடந்தன. டிசம்பர் 30ஆம் தேதி நிறைவடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச் ஆத்ம சரண்.
• வழக்கு விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
• வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் சாவர்க்கருக்கு 8 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கோட்சே உட்பட ஏனையோருக்கு தலா ஒரு வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார்.
• வழக்கின் முதன்மைக் குற்றவாளியான கோட்சே, நாராயண் ஆப்தே இருவரும் சாவர்க்காரின் சீடர்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சாவர்க்கர் ஆதரவு இருந்ததை காவல்துறை தரப்பு நிரூபித்தது. ஆனால், சதித் திட்டத்தை சாவர்க்கார் தான் உருவாக்கித் தந்தார் என்பதை மட்டும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியாததால் அவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு சாவர்க்கார் நடுநாயகமாக அமர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு படம் முக்கிய சாட்சியாக முன் வைக்கப்பட்டது. (இப்போது நாடாளுமன்ற வளாகத்திலேயே சாவர்க்கர் படம் மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது)
• தன்னுடைய தரப்பு வாதங்களை 90 பக்கங்களில் ஒரு அறிக்கையாக தயாரித்து, கோட்சே நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் படித்தான். காந்தியை கொலை செய்தது நான்தான் என்பதை கோட்சே ஒப்புக் கொண்டான். வழக்கையும் தாண்டி ஒரு இந்துத்துவப் பிரச்சார மேடையாக கோட்சே நீதிமன்றத்தைப் பயன்படுத்தினான். இந்து புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டியதோடு, பகவத் கீதையில் தர்மத்தைக் காக்க கொலை செய்வது பாவம் இல்லை என்ற ‘கிருஷ்ணன் உபதேச’த்தையும் தனது கொலைக்கு நியாயம் கற்பிக்க கோட்சே பயன்படுத்தினான். “அகண்ட பாரதம் வாழ்க; வந்தே மாதரம்” என்ற முழக்கங் களோடு தனது வாக்குமூலத்தை நிறைவு செய்தான். (கோட்சே கூறும் அகண்ட பாரதம் என்பது இந்திய எல்லைகளைக் கடந்து பாகி°தான், பங்களாதேஷ், ஆப்கான், பர்மா, இலங்கையையும் உள்ளடக்கியது)
• கோட்சேயின் இந்த பேச்சு பிறகு சிறு வெளியீடாக வெளி வந்தது. இந்த உரையை தயாரித்துக் கொடுத்தது அவனின் குருவான சாவர்க்கார் தான் என்று சொல்லப்படுகிறது.
• செங்கோட்டை நீதிமன்றம் – கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இருவரும் பார்ப்பனர்கள் சதியில் பங்கேற்ற கோபால் கோட்சே (கோட்சே சகோதரர்) தார்கரே, மதன்லால், ஷங்கர், பார்ச்சூர் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
• கொலை சதியில் இடம் பெற்று பிறகு அப்ரூவராக மாறி உண்மைகளைக் கூறிய திகம்பர் பாட்ஜேவுக்கு மன்னிப்பு வழங்கி நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதி தீர்ப்பை வாசிக்கும்போது குற்றவாளிகள் “ஹிந்து தர்ம கி ஜெய்; ஹிந்தி, ஹிந்து, ஹிந்து°தான்” என்று முழக்கமிட்டபடியே இருந்தார்கள்.
• தண்டனை பெற்ற நான்கு நாட்களில் குற்றவாளிகள் வழக்கை மேல் முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை சிம்லாவில் இருந்த பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. 1949 மே 2 ஆம் தேதி மேல்முறையீட்டு விசாரணைகள் தொடங்கின. நீதிபதிகள் ஏ.என்.பண்டாரி, அச்ரூராம், ஜி.டி. கோரல்லா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
• மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனுதாபங்களை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.
• கோட்சேவாவது திருமணமாகாதவர்; ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாராயண் ஆப்தேவுக்கு ஒரு மனைவியும், ஒரு காதலியும் இருக்கிறார்களே, அவரை தூக்கில் போட்டால், குடும்பம் என்னாவது என்ற கருத்தை ஆர்.எ°.எ°. பார்ப்பன வட்டாரங்கள் திட்டமிட்டு பரப்பின. சில ஏடுகளும் எழுதின.
• சிம்லா உயர்நீதிமன்ற விசாரணையிலும் கோட்சே தனது வாக்குமூலத்தை நீண்ட உரையாக கைதேர்ந்த பேச்சாளனாக முன் வைத்தான். நீதிமன்றத்தில் திரட்டப்பட்டிருந்த பெண்கள், கோட்சே வாக்குமூலத்தைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதார்கள். இதன் பின்னணியைப் புரிந்து கொண்ட நீதிபதி ஜி.டி. கோ°லா “இந்தப் பெண்களை தீர்ப்பு எழுதச் சொல்லியிருந்தால் கோட்சேயை விடுதலை செய்திருப்பார்கள்” என்று கூறினார்.
• ஒன்றரை மாத விசாரணைக்குப் பிறகு 1949 ஜூன் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோட்சே, ஆப்தே தூக்குத் தண்டiயை உறுதி செய்தது. கார்கரே, மதன்லால், கோபால் கோட்சே ஆகியோர் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, டாக்டர் பார்ச்சூர், ஷங்கர் கி°தய்யா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
• இதற்குப் பிறகு ஆர்.எ°.எ°. வட்டாரங்கள், காந்தி உயிருடன் இருந்திருப்பாரேயானால் இந்த தூக்குத் தண்டனை விதிப்பை ஏற்க மாட்டார் என்ற கருத்துகளைப் பரப்பி வந்தன. காந்தியின் மகன்கள்கூட தூக்குத் தண்டனை வேண்டாம் என்று அறிக்கை விடுத்தனர்.
• 1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப் பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட் டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யை படித்தார்கள்.
• அந்த நேரத்திலும் தனது ஜோதிடப் பலன் மீது ஆப்தே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான். தனது ஜோதிட பலன்படி தனக்கு நீண்ட ஆயுள் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தூக்குத் தண்டனை எப்படியும் நின்றுவிடும் என்று மதன்லால் கூறியதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஜோதிடம் மதன்லாலையும் காப்பாற்றவில்லை. கடைசி நேரத்தில் தூக்கு மேடைக்கு வருவதற்கு ஆப்தே முரண்டு பிடித்தான். மிகவும் போராடி சிரமப்பட்டே அவரை தூக்கிலிட வேண்டியிருந்தது என்று சிலர் நூல்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால், கோட்சேவிடம் கடைசி நேரத்தில் பயமும் தடுமாற்றமும் இருந்தது என்றும், ஆப்தே தான் உறுதியாக இருந்தார் என்றும் தண்டனை நிறைவேற்றத்தை நேரில் பார்த்த நீதிபதி ஜி.டி.கோ°லா எழுதி இருக்கிறார்.
• “நான் இறந்த பிறகு என்னுடைய சாம்பலை இந்தியாவிலுள்ள எந்த நதிகளிலும் கரைக்கக் கூடாது; இந்த நதிகளில் காந்தி சாம்பல் கரைக்கப்பட்டு அசுத்தமாகிவிட்டது; காந்தி சாம்பல் கரைக்கப்படாத, பாகி°தானில் உள்ள சிந்து நதியில்தான் கரைக்க வேண்டும்” என்று கோட்சே தன்னிடம் நேரில் கூறியதாக அவரது தம்பி கோபால் கோட்சே கூறினார். தூக்கிலிடப்பட்ட இருவரின் உடலும் அம்பாலா சிறைச்சாலையில் எரியூட்டப்பட்டன.
• காந்தியார் கொலையில் அரசு, அரசியல்வாதிகள் பங்களிப்பு மற்றும் விசாரணையில் நீண்ட தாமதம் குறித்த அய்யங்கள் எழும்பியதால் மத்திய அரசு 1965இல் கோபால் °வரூப் பதக் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. 1966இல் பதக் மத்திய அமைச்சரானார்; ஆணையம் செயலிழந்தது.
• அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடந்ததால் 1966இல் நீதிபதி ஜே.எல். கபூர் தலைமையில் மற்றொரு ஆணையம் அமைக்கப்பட்டது. டெல்லி மற்றும் பூனா காவல்துறை விசாரணையில் அலட்சியம் காட்டியுள்ளதாக ஆணையம் இடித்துரைத்து விசாரணையை முடித்துக் கொண்டது. தொகுப்பு: ‘இரா’
பெரியார் முழக்கம் 08012015 இதழ்