சோதிட மாநாட்டில் அரசு அதிகாரிகளா? மாநாட்டு அரங்க வாயிலில் கழகம் போர்க்கொடி: கைது
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மய்யமும் மலாய் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து, சோதிட மூடத்தனத்தைப் பரப்பும் மாநாட்டை அனைத்துலக மாநாடாக சென்னையில் நடத்தியது. இம் மா நாட்டுக்கு தமிழ்நாடு மற்றும் அயல்நாடுகளிலிருந்து சோதிடர்கள் வந்திருந்தார்கள். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மய்யத்தின் நிறுவனர் முனைவர் தி. மகாலட்சுமி, மலாய் பல்கலைக்கழக பேரா சிரியர் கோவி. சிவராமன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாடு மார்ச் முதல் தேதி சென்னை குருநானக் கல்லூரில் நடந்தது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கா.மு. சேகர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், சோதிடர் மாடசாமி, உதவி பேராசிரியர் கை. சங்கர் , முன்னாள் மாவட்ட நீதிபதி கோ.சு. ஆறுமுகம், எச். வசந்த் குமார் (வசந்த் தொலைக் காட்சி குழுமம்), முனைவர் அய்யம் பெருமாள் (தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்ய செயல் இயக்குனர்), திரைப்பட நடிகர் ராஜேஷ், மருத்துவர் இராமசாமிப் பிள்ளை உரையாற்றுவதாகவும், காவல் துறை அதிகாரி முனைவர் கு.பெரியய்யா, அய்.பி.எ°. சிறப்புரை யாற்றுவதாகவும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது. பெரியய்யா, காவல்துறை பயிற்சிக் கல்லூரி முதல்வராக உள்ளார்.
காலையில் நடந்த தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கியவர் உலகத் தமிழர் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் கோ. விஜயராகவன். உரையாற்றிவோரில் இடம் பெற்றிருந்த சோதிடர்களின் பெயர்களோடு, முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ, வி.ஜி.பி. சந்தோஷம், குருநானக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் செல்வராசன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். சோதிடப் பயன்களும் 46 சோதிடர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டு சோதிட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இப்படி ஒரு மாநாடு நடக்க இருக்கும் சேதியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூட்டம் நடந்த பிப். 28ஆம் தேதி தெரிவித்தார். உடனே சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்தனர். விஞ்ஞான மனப் பான்மையை குடிமக்களிடம் பரப்ப வேண்டும் என்று அரசியல் சட்டம், குடி மக்களின் கடமையாக வலியுறுத்து கிறது. இதற்கு நேர்மாறாக அறிவியல் என்று ஏற்கப்படாத மூடநம்பிக்கை யான சோதிடத்தைப் பரப்ப ஒரு மாநாடு நடத்து வதும், அதில் அரசுத் துறையில் பணி யாற்றும் அதிகாரிகளே பங்கேற்பதும் சட்ட விரோதமானதாகும். எனவே சேதி கிடைத்த அடுத்த நாளே கழகம் களமிறங்கியது.
திட்டமிட்டபடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மார்ச் முதல் தேதி காலை 10 மணி யளவில் மாநாடு நடைபெறும் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வாயிலில், கழகக் கொடியுடன் திரண்டனர்.
சோதிடத்தை அறிவியலாக்காதே;
சோதிட மாநாட்டில் பங்கேற்கும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்;
தமிழக அரசே – சோதிட மூடநம்பிக்கை பரப்புவதற்கு துணை போகாதே என்ற முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை கரங்களில் ஏந்திக் கொண்டு முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான். மாண்டேலா, அன்பு தனசேகரன், வழக்கறிஞர் துரை. அருண், ஏசு. குமார், அருள்தாசு, தட்சிணா மூர்த்தி, மாரி, இராவணன், பாரி, குகா, முழக்கம் உமாபதி, மனோகர், நாத்திகன், விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட 35 தோழர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. 30 நிமிடம் வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், காவல்துறை கழகத்தினரை கைது செய்து மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். கழகத் தோழர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்த வேளச்சேரி பகுதி தி.மு.க. செயலாளர் பாட்சா, அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்தார். இரவு 8 மணியளவில் சோதிடர் மாநாடு முடிந்த பிறகே தோழர்கள் விடுவிக்கப் பட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” – பரப்புரை இயக்கத்துக்கான பயணத் திட்டங்களை கழகச் செயல் வீரர்கள் மண்டபத்துக்குள்ளேயே இறுதியாக்கினர்.
அடுத்து, சோதிட மூடத்தனங்களை விளக்கும் கருத்தரங்கத்தை சென்னை யில் நடத்துவதற்கு தோழர்கள் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 05032015 இதழ்