சாதி வெறியர்களுக்கு துணை போகும் காவல்துறை
காவல்துறைகளில் – அந்த மாவட்டத்தின் ஆதிக்க ஜாதிப் பிரிவினரை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காரணம், காவல்துறை அதிகாரிகள் ஜாதி உணர்வோடு ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான குற்றங்களிலிருந்து தங்கள் ஜாதியைச் சார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே செயல்படுகிறார்கள். இந்த உண்மையை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ‘எவிடென்°’ அமைப்பு, தலித் மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான புகார்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கும் குற்றவாளி களுக்குமிடையே சமரசம் செய்யும் முயற்சிகளையே காவல்துறை மேற் கொண்டிருக்கிறது.
கொலைக் குற்றம் குறித்து புகாரைப் பெற்றவுடன், ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை காவல்துறை செய்வதுஇல்லை. புகாரைப் பெற்றவுடன் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில்லை. சவப் பரிசோதனை அறிக்கைகயை கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குவதுஇல்லை. தலித் மக்கள் கொலை செய்யப்பட்ட 99 சதவீத வழக்குகளில் இதுவரை குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. நீண்டகால தாமதத்துக்குப் பிறகு சந்தேகப்படும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய முற்படும்போது அந்த நபர்கள் முன் பிணைக்கு விண்ணப்பித்தால், அதற்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. இந்த மாவட்டங்களில் படுகொலைக்கு உள்ளான 76 தலித் மக்கள் ஆதிக்க ஜாதியினரால் கும்பலாகவோ அல்லது குழுக்களாகவோ திரண்டு வந்து கொல்லப்பட்டவர்கள். 26 படுகொலைகள் தனி மனிதர்களால் நடத்தப்பட்டவை. 91 படுகொலைகள் தீண்டாமை குற்றத்தின் கீழ் நடந்தவை. 14 கொலைகள், காதல், சொத்துப் பிரச்சினைகளால் நடந்தவை. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான கொடும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதில் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் தலித் பெண்கள் என்று ‘எவிடென்சு’ நடத்திய ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் காவல்துறை மதவெறி, ஜாதி வெறியோடு கடிவாளம் ஏதுமின்றி வெறியாட்டம் போடுகிறது. தமிழகத்தில் ஆட்சி ஒன்று நடப்பதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை.
பெண்களே இல்லாத அமைச்சரவை
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிற ஆம் ஆத்மியின் அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை. இதேபோல் பெண் அமைச்சர்களே இடம் பெறாத 7 மாநிலங்கள் இருக்கின்றன. அப்படியே பெண்கள் அமைச்சர்களாக உள்ள மாநிலங்களில் அவர்கள் எண்ணிக்கையும் குறைவு. அவர்களுக்காக ஒதுக்கப்படும் துறைகளும் வரையறுக்கப்படுகின்றன. இந்தியா முழுதும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120. இதில் 360 பேர் மட்டும் பெண்கள். அதாவது 9 சதவீதம். மொத்தமுள்ள 568 அமைச்சர்களில் 39 பேர் மட்டுமே பெண்கள். அதாவது 7 சதவீதத்துக்கும் குறைவு. இதில் காபினட் அமைச்சர்களாக இருப்பவர்கள் இன்னும் குறைவு. நாகாலாந்து, மிசோராம் மாநில சட்டசபைகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை. டெல்லி, உ.பி., தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் பஞ்சாப் சட்டமன்றத்தில் 12 சதவீதமும், தெலுங்கானா, உ.பி., டெல்லி மாநிலங்களில் 10 சதவீதமும், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும், ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியில், போட்டியிட்டு 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் ஒருவர்கூட அமைச்சராக்கப்படவில்லை. “இந்த குறை எதிர்காலத்தில் சரி செய்யப்படும்” என்று ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் கூறுகிறார்.
சில மாநிலங்கள் இதற்கு விதிவிலக்காகவும் உள்ளன. மேகலாயாவில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே 4 பெண் எம்.எல்.ஏ.க்களில் 3 பெண்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கோவாவிலும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவிலும் ஒரே ஒரு பெண்தான் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அதிகாரமிக்க துறைகள் பெண் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுவதும் மிகவும் குறைவுதான். உள்துறை அமைச்சர்களாக 3 மாநிலங்களில் மட்டும் பெண்கள் இருக்கிறார்கள். பா.ஜ..க ஆட்சி நடக்கும் குஜராத்தின் முதல்வர் ஆனந்திபெண் பட்டேல், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ரோஷன் வாஜ்ரி ஆகியோர் பெண் உள்துறை அமைச்சர்கள். இராஜஸ்தான் பா.ஜ.க. முதல்வர் பாசுந்தரா ராஜே மற்றும் உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இந்திரா ஹிரிதயேஷ் ஆகிய இரண்டு பெண்கள் மட்டும் நிதியமைச்சர்களாக இருக்கிறார்கள்.
பொதுவாக பெண்களுக்கு என்றே ஒதுக்கப்படும் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அல்லது சமூக நலத் துறை தான். இந்தியாவில் அரசியல் ஆண் ஆதிக்கப் பிடியில் தங்கி நிற்கிறது என்பதையே இந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ‘இந்து’ ஆங்கில நாளேடு (பிப்.16) இந்த ஆய்வுகளை வெளியிட் டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் சட்டம் பல ஆண்டுகளாகவே நாடாளுமன்றத் தில் முடக்கப்பட்டுக் கிடக்கிறது.
பெரியார் முழக்கம் 19022015 இதழ்