இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை.
கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம்.
தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும், பிரதமர் நரேந்திர மோதியும் வந்து அதை முறைப்படி துவக்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கலாமே? வணிக ரீதியிலான மின் உற்பத்தி எப்போதுத் துவங்கும் என்று தேதி அறிவித்திருக்கலாமே?
இதைத் தட்டிக்கேட்பதற்கு தமிழகத்தின் பெரிய தலைவர்கள் தயாராக இல்லை. காரணம் என்ன என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். மக்களதிகாரம் பெற்றிருக்கும் இவர்கள் சொந்தப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். நமக்கு ஆதரவாக இயங்கும் தலைவர்கள் ஓர் அறிக்கை விடலாம், அல்லது ஒரு போராட்டத்தை நடத்தலாம்; அதற்கு மேல் எதுவும் செய்யும் அரசியல் வலிமை அவர்களுக்கு இல்லை.
எனவே “தன் கையே தனக்கு உதவி” என்கிற அடிப்படையில் தமிழ்க் குடிமைச் சமூகம் தனக்கான உதவிகளை செய்துகொள்ள முயல்வதொன்றே வழி. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்றோர் கருத்துத் தெரிவிக்க முடியும், ஆலோசனைகள் சொல்ல முடியும். குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர் அனைவரும் ஒருங்கே நின்று செயல்பட்டால்தான், விடிவு பிறக்கும்.
குடிமைச் சமூக அங்கத்தினர் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்.
• முறையாக மூன்று நாட்கள் தொடர்ந்து இயங்காத கூடங்குளம் அணுஉலை இந்தியாவின் மொத்த அணு மின்சார உற்பத்தியில் 20 விழுக்காடு பங்களிப்பதாகச் சொல்வது உண்மையாக இருக்க முடியுமா?
• கடந்த நவம்பர் 5-ஆம் நாள் இந்திய மின்சாரத் துறை அமைச்சர் அணுசக்தி பிற நாடுகளால் புறக்கணிக்கப் படுகிறது, செலவு அதிகம் கொண்டது என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இப்போது இரஷ்யாவி டமிருந்து 12 அணுஉலைகள் வாங்கப் போகிறோம் என்று பிரதமர் அறிவிக்கிறார். அப்படியானால் தெரிந்தேதான் செய்கிறீர்களா அணுசக்தித் தவறுகளை?
• இரஷ்யாவின் முதலிரண்டு உலைகளே ஓடாமல் உறங்கிக் கிடக்கும்போது, எந்த அடிப்படையில் இன்னும் 10 உலைகள் வாங்குகிறீர்கள்?
• இந்த உலைகளுக்கு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகுமே? அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு எவ்வளவு வட்டிக் கொடுக்க வேண்டும்? யார் யார் இந்த வியாபாரத்தில் பங்கெடுக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் என்ன இலாபம் கிடைக்கிறது? இத்தனை பெரிய வியாபாரத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாங்கினீர்களா? மக்களை கலந்தாலோசித்தீர்களா?
• இத்தனை அணுஉலைகளிலிருந்து வெளிவரும் ஆபத்தான அணுக்கழிவுகளை 48,000 ஆண்டுகள் எங்கே வைத்து பாதுகாக்கப் போகிறீர்கள்?
• இந்த அணுஉலைகளை மேலாண்மை செய்வதற்கு சார்பற்ற, சக்தி மிக்க ஓர் அமைப்பு இந்தியாவில் இதுவரை இல்லையே?
• இரஷ்யாவின் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் அவர்கள் இழப்பீடு தருவார்களா, மாட்டார்களா? எவ்வளவு தருவார்கள்? யார் இதெற்கெல்லாம் பொறுப்பு? விபத்து நடந்தால் பொதுமக்கள் யாரை அணுக வேண்டும்? போபால் அனுபவம் வயிற்றை புரட்டிப் போடுகிறதே?
– என்று அந்த அறிக்கையில் சுப. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் – (தொடர்புக்கு: சுப. உதயகுமார், 9865683735)
பெரியார் முழக்கம் 24122015 இதழ்