‘இந்து தாழ்த்தப்பட்டவர்’: வரையறுத்தது யார்?
இமயம் தொலைக்காட்சி ஊடகவியலாளர்: அம்பேத்கர், இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் 18 சதவீத இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார்; சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இந்துக்கள் மட்டும் போட்டியிடக் கூடிய தொகுதி, தாழ்த்தப்பட்டவர்கள் தனித் தொகுதி தான். தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அம்பேத்கர் திட்டமிட்டே ரிசர்வ் தொகுதி கொடுத்திருக்கிறார் – இந்து எஸ்.சி என்று வரையறுத்துள்ளார். ஆனால் மதம் இல்லை என்று சொல்லும் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் போன்றவர்கள் மத மாற்ற உரிமை என்ற பெயரில் கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள். மதம் மாறக் கூடாது என்ற எங்கள் கருத்துதான் அம்பேத்கர் கருத்து; பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் மாற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்வதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: இது தவறான பொய்யான செய்தி. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பட்டியல் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான பட்டியல் 1935 ஆம் ஆண்டு சட்டத்திலேயே வந்துவிட்டது. அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் உரிமையை வழங்கவேண்டும் என்று மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர, இந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று 1950 ஜனவரி 26இல் நடைமுறைக்கு வந்தபோது அரசியல் சட்டத்தில் இல்லை. 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடிஅரசுத் தலைவர் வெளியிட்ட ஒரு அறிவிக்கையில் (நோட்டிபிகேசனில்) தான், இவ்வொதுக்கீடு இந்துக்கள் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட அறிவிக்கையை வெளியிட்டவர் ஒரு இந்துத்துவாவாதியான இராஜேந்திரபிரசாத். அவர் வெளியிட்ட அறிவிக்கையால் வந்ததுதானே தவிர அரசியல் சட்டத்தில் அப்படி ஒரு சொல்லே இல்லை; அப்படி பேசுபவர்கள் அரசியல் சட்டத்தை நன்றாக படிக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன். பேட்டியில் கொளத்தூர் மணி
பெரியார் முழக்கம் 26022015 இதழ்