திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி

“தனித் தமிழ்நாடு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகிய திராவிட இயக்க இலட்சியங்களை பாடங்களில் பதிவு செய்வதில்லை; ஊடகங்களும் இருட்டடிக் கின்றன; அதுவே இளைஞர்களிடையே கொள்கைகள் முழுமையாக சென்றடைய வில்லை” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். பிப். 7 அன்று, ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு ஊடகவியலாளர் ஜீவ சகாப்தனுக்கு அளித்த நேர்முகம்:
ஊடகவியலாளர்: இன்றைய நேர்முகம் நிகழ்ச்சியில் உங்களுடைய இயக்க செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகளை நீங்கள் பார்க்கும் விதம், தமிழகத்தில் – தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு இருக்கும் நிர்பந்தங்கள் போன்ற பரவலான தளத்தில்தான் இன்றைய விவாதம் செல்லவிருக் கிறது. முதல் கேள்வியாக… ஈழம், தமிழ்த் தேசியம், ஜாதி ஒழிப்பு போன்ற தளங்களில் நீங்கள் இயங்கி வருகிறீர்கள்; சமீபத்தில் இலங்கை அதிபர் மாற்றம் குறித்து, அது ஒரு மாற்றமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்; அதை ஒரு நிகழ்வாகவே பார்க்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்; இராஜபக்சே என்கிற ஆளுமை மாறியதே ஒரு மிகப் பெரிய வெற்றி தான் என்றும் சிலர் சொல்கிறார்கள்; நீங்கள் அதை எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: இராஜபக்சே மாற்றப்பட்டிருக் கிறார் என்பது, மக்களுடைய அதிருப்தி அவர் மீது இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற அளவுக்கு மட்டும் அதை வெற்றியாக நான் பார்க்கின்றேன். மற்றபடி எந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும், சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்து அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்த சூழலில், அவர்கள் நிச்சயமாக சிங்கள மக்களுக் கான செயல் திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே, அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியும்; இந்த முறை வேண்டுமானால் தமிழ் மக்களின் கூடுதலான வாக்குகளால் வென்றிருக்கலாம்; அடுத்து நடக்கப் போவதை எதிர்பார்த்து காலப்போக்கில் இவர் போக்கை மாற்றிக் கொள்வார் என்று தான் நான் எதிர்பார்க்கின்றேன். இரண்டாவதாக ஒருவேளை சீனாவோடு கூடுதல் நெருக்கமாக இருந்தவர் இராஜபக்சே என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான முன்னெடுப்புகளை அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா எடுத்தது. நாளைக்கு சீனாவிடமிருந்து இலங்கை விலகி வருகிறது என்று அறிந்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்ட இனப்படுகொலைக்கு எதிரான, இந்த போர்க் குற்ற விசாரணைக்கு இந்த அளவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்குமா என்பது எனக்கு அய்யமாகத்தான் இருக்கிறது. எனவே காலம் தான் அதைச் சொல்லவேண்டும். இப்போதைக்கு அதில் நான் பெரிய அளவில் மகிழ்ச்சி அடையவில்லை; இது ஒரு ஆட்சி மாற்றம் அவ்வளவுதான், கொள்கை மாற்றம் இருக்காது என்றுதான் நான் நினைக்கின்றேன்.
ஊடகவியலாளர்: அவர் வந்த பிறகு 13 ஆவது சட்டத்திருத்தம் கண்டிப்பாக அமுல்படுத்தப் படும் என்று சொல்லியிருக்கிறார்; சிறுபான்மை யினர் நலன் பாதுகாக்கப்படும் என்று சொல்லி யிருக்கிறார்; அதிபருக்கான அதிகாரம் படிப்படி யாக குறைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்; ஜனநாயகத்தை நோக்கிய சிறு நகர்வாக இதை நாம் பார்க்கலாமா?
கொளத்தூர் மணி: 13 ஆவது சட்டத்திருத்தம் அவர்கள் வைத்திருக்கிறபடி முழுமையாக வந்தாலும் தமிழர்களுக்கு அதில் அதிகாரம் இல்லை என்பதுதான் உண்மை. காரணம், நிலம் குறித்த எந்த முடிவும் எடுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை. காவல் துறை மத்திய அரசின் கையில்தான் இருக்கும் என்பதுதான் 13 ஆவது சட்டத் திருத்தம். காவல்துறையும் நிலத்தைப் பற்றி ஒருவருக்கு பட்டா அளிப்பதோ மாற்றுவதோ கூட முடியாது என்ற அதிகாரம் அற்ற நிலையில் 13 என்பது ஒரு பயனும் இல்லாததுதான். நம்முடைய நகராட்சிகளுக்கு உள்ள அதிகாரமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாமே தவிர, அது மாநில அரசுக்கான அதிகாரமாகக் கூட இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கனவே இராஜ்பக்சே, ‘தர்டீன் பிளஸ்’ (13+) என்றார்; தர்டீன் போதும் தர்டீன் பிள° வேண்டாம் என்று இப்போது இந்தியா சொல்கிறது; இந்தியா எந்த அளவுக்கு இலங்கையை அனுமதிப்பார்கள் என்றும் தெரியவில்லை. பதிமூன்றே கொடுத்தா லும் 13 ஆவது சட்டத்திருத்தம் வந்தாலும், தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளை பாது காக்கின்ற அளவிற்கான அதிகாரம் படைத்ததாக மாகாண கவுன்சில் நிச்சயம் இருக்காது.

ஊடகவியலாளர்: உங்கள் அடிப்படை கொள்கையி லிருந்து – நீங்கள் பேசியதிலிருந்து, தனி ஈழம் என்று ஒன்று அமையாதவரை அங்கு தமிழர்களை மனிதர்களாக பார்க்கின்ற ஒரு பார்வையோ, அவர்களும் ஒரு ஆளுமை என்று மதிக்கின்ற பார்வையோ அந்த அமைப்பிலே – இலங்கையின் சிஸ்டத்திலேயே இல்லை என்பது தெளிவாகிறது. ஈழப் பிரச்சனைகளுக்கு பிறகு போராடிய பல நாடுகள், பல மேற்கத்திய நாடுகள் தனி நாடு கோரிக்கையை அடைந்திருக்கிறார்கள். சூடான், கொசாவா போன்ற பல நாடுகள் வந்திருக்கிறது; இந்தியா கூட உதவியிருக்கிறது. உக்ரேனில் கூட வந்தது; பொது வாக்கெடுப்பு என்ற விசயம் கூட சமீபத்தில் ஸ்காட்லாந்தில் வந்தது. ஆனால் தமிழர் பிரச்சனையில் மட்டும் பிரச்சனை துவங்கிய காலம் முதல் தற்போது வரை எந்த நகர்வுமே இல்லாமல் இருப்ப தற்கான காரணம் என்ன? க்ளோபலைசேசன் வந்தது; புரட்சிகள், இடதுசாரி சிந்தனைகள் என்று எவ்வளவோ உலக அளவில் பேசப் பட்டாலும் கூட மற்ற தேசிய இனங்களுக்கு கிடைத்தது ஏன் தமிழர்களின் கோரிக்கை களுக்கு எடுபடாமல் போனது?
கொளத்தூர் மணி: காரணம், இந்தியாவின் முகத்தைத் தான் அண்டை நாடுகள் அனைத் தும் பார்க்கின்றன. உலக நாடுகளின் அனைத்து அரசுகளையும் இயக்குவது முதலாளிகள் தான்; ஆக ஒரு பெரிய பரந்த – விரிந்த சந்தையுள்ள இந்தியாவோடு பகைத்துக் கொள்ள எந்த அரசும் – நாடும் விரும்பாது. இந்தியா தனது கருத்தை, ஈழத்திற்கு ஆதரவானதாக மாற்றிக் கொள்கிறவரை உலக நாடுகள் இந்தப் போக்கைதான் கடைபிடிக்கும் என்பது எனது கருத்து. நீங்கள் ஏற்கனவே சொன்ன நாடுகள் அனைத்துமே எந்த நாட்டின் எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. அல்லது எதிர்க்கின்ற நாடுகள் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஏற்கனவே எதிரிகளாக இருந்தவர்கள்; அவர்கள் எதிர்ப்பை பற்றி அமெரிக்காவுக்குக் கவலை இல்லை. ஆனால் நட்போடு இருக்கின்ற இந்தியாவை பகைத்துக்கொண்டு, பொது வாக்கெடுப்புக்கான அழுத்தத்தை போதிய அளவில் உலக நாடுகள் கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை உலக அரசியல் சூழல் மாறுமேயானால் அதற்கான வாய்ப்பு வரலாம். ஆனாலும் தொடர்ந்து அதை நோக்கி குரல் எழுப்புபவர்களாக- அதை நோக்கி அழுத்தம் கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
வெளியுறவு கொள்கைகளை வகுப்பது யார்?

ஊடகவியலாளர்: தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல; இந்திய வல்லாதிக்கமே தமிழர்களின் விடுதலைக்கு எதிராக இருக்கிறது என்ற முக்கியமான கருத்தை பதிவு செய்திருக்கின்றீர்கள். ஏன் இப்படி ஒரு மனநிலை இந்தியாவிற்கு இருக்கின்றது?
கொளத்தூர் மணி:இந்தியாவைப் பொறுத்தவரை வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதநிதிகள் அல்ல என்ற நிலை வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி மறைந்து இராஜீவ் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இதுவரை வெளியுறவுக் கொள்கைகளை முடிவு செய்பவர்கள் சம்பளம் பெறுகின்ற – அரசு அதிகாரிகளாக இருக்கின்ற – வெளியுறவுத்துறை அதிகாரிகள் தான். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்த தலைவர்களே அரசியல் முடிவுகள் எடுக்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக மக்களுக்காவது பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அல்லது தேர்தலின் போதாவது நிச்சயம் விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியவர் களாக இருக்கின்றார்கள். எனவே அவர்கள் கூடுதல் பொறுப்புணர்வோடு இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டுமே முடிவெடுக்கக் கூடிய நிலை வந்த பின்னால் தான் இந்த கேடு வந்ததாகக் கருதுகின்றேன். அந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகளின் மனப்பாங்கு வெளி யுறவுக் கொள்கை மீது பிரதிபலிக்கின்றது என்பது தான் என்னுடைய கருத்து. அது மாற்றப்படாத வரை இது நீடிக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

ஊடகவியலாளர்: நேரடியாக பி.ஜே.பியோடு பல்வேறு விசயங்களில் ஒத்துப் போனாலும், இந்து மக்கள் கட்சி போன்ற இங்குள்ள சில இந்து அமைப்புகள் நாங்கள் ஈழத்தை ஆதரிக்கின்றோம் என்கிறார்கள். இந்து நாடு என்ற அடிப்படையில் ஆதரிக்கின்றோம்; இதைப் புரிய வைப்பதற்காக வாஜ்பாய், அத்வானி, மோடி போன்றவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள். நடைமுறையில் இதை செய்வார்களா? தமிழக அரசியல் சூழலால் சொல்கிறார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அது ஒரு இந்து நாடு என்ற அடிப்படையில், இந்துத்துவா அஜண்டா உள்ள பி.ஜே.பி இதற்கான முயற்சி எடுக்கலாமே! அவர்களும் முழுக்க முழுக்க ஈழத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவுமே தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றது; இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: இதுவரை இங்குள்ள நடைபாதை கோயிலை அகற்றினால் கூட இங்கு இருக்கின்ற இந்து முன்னணி போராடும். உதாரணமாக சேலம் கல்லூரி அருகே நடைபாதையில் உள்ள கோவில்களை அகற்றக்கூடாது என்பதற்காக கல்லூரி நிலத்தை உள்ளே தள்ளி கல்லூரியின் நிலத்தில் கோவிலை அமைத்திருக்கிறார்கள். பள்ளித் தளம் அனைத்தும் கோயில் செய்வோம் என்று பாரதியார் சொன்னதை இப்படி புரிந்து கொண்டு கல்லூரி நிலத்தை கோவில் தளமாக மாற்றிவிட்டார்கள். ஆனால் ஈழத்தில் ஆயிரக் கணக்கான இந்து கோவில்கள் அகற்றப்பட்டு விட்டன; இடிக்கப்பட்டு வருகின்றன; அது குறித்து எந்த ஒரு சிறு நிகழ்வையும்’ போராட் டத்தையும் தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் செய்யவில்லை என்றால் அதற் குள்ளும் அரசியல் இருக்கின்றது. மேலேயுள்ள தலைவர்கள் அதாவது பி.ஜே.பி.யில் அல்ல ஆர்.எஸ்.எஸ்.இல் மேலேயுள்ள தலைவர்கள் தலை அசைக்கவேண்டும்; இல்லாவிட்டால் நடக்காது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு உடன்பட்டு வரவில்லை என்று தான் நான் கருதுகின்றேன்.

ஊடகவியலாளர்: முகலாயர்கள் கோவில்களை இடித்துவிட்டார்கள் என்ற மிகப்பெரும் பரப்புரையை இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – இந்துத்துவா அமைப்புகள் செய்கின்றன. ஆனால் அவ்வளவு பெரிய கோயில்கள் ஈழத்தில் இடிக்கப்பட்டபோது, இவர்களுக்கு உண்மையில் இந்துக்கள் மீது பாசம் இருக்குமேயானால் அதற்கான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் தானே !
கொளத்தூர் மணி:நிச்சயமாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால் சிங்களர்கள் விநாயகரை கடலில் தூக்கிப் போட்டுவிட்டு, விநாயகர் குளிக்க சென்றுள்ளதாக அறிவிப்புப் பலகை வைத்தார்கள்; அப்போது இவர்களுக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். அனைத்து இந்து கோவில்கள் மீதும் குண்டு வீசியிருக்கிறார்கள்; அதற்கான எதிர்வினை இங்கு எதுவுமே இல்லை. சிறு சிறு செய்திகளுக்கு கூட போராடுகின்ற இவர்கள் அதற்காக எந்த போராட்டத்தையும் எடுக்கவுமில்லை, அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவுமில்லை என்பது, இவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஏதேனும் இருந்தால் போராடுவார்கள்; இந்து மக்கள் மத்தியில் ஏதேனும் சிக்கலை உண்டாக்கி தங்கள் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறார்களே தவிர, உண்மையில் அவர்கள் கொண்டிருக்கிற கொள்கைக்காக கூட அவர்கள் பேசவில்லை என்பது தான் இங்குள்ள நிலவரம்.

ஊடகவியலாளர்: இந்து மக்கள் மீதான பாசம் என்பது உண்மை அல்ல என்கிறீர்கள் !
கொளத்தூர் மணி:ஆமாம் அதைத் தானே இப்போது பார்க்கின்றோம். எதுவுமே செய்யவில்லையே !

ஊடகவியலாளர்: இராஜபக்சே தோற்றதற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சின்ன கமெண்ட் ஒன்று அடித்தார்; அது உங்களைப் போன்ற ஈழ உணர்வாளர்களை வைத்துதான். இனிமேல் இராஜபக்சே எதிர்ப்பு – ஈழம் என்று பேசியவர் களெல்லாம் கடையை மூடிவிட வேண்டியது தான்; ஏனென்றால் அங்கு அதிபர் மாற்றம் வந்துவிட்டது, எனவே பாவம் இவர்கள் அதை வைத்து அரசியல் நடத்த முடியாது என்று கமெண்ட் அடித்திருந்தார். இதற்குத் தங்களின் பதில் என்ன?
கொளத்தூர் மணி: தமிழ்நாட்டில் நிலவுகிற கட்சி களெல்லாம் ஈழச் சிக்கலுக்கு முன்பு இல்லை என்பதைப் போல பேசுகிறார்கள். எப்போதும் தமிழ்நாட்டில் உள்ள சிக்கல்களுக்கு அல்லது இந்திய பேரரசோடு முகம் கொடுக்க வேண்டிய தேவைகளுக்குதான் இங்கு கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட ஒரு காலத்தில் அந்த சிந்தனையோடு இருந்தவர்கள் தான்; இப்போது வேண்டுமானால் மாறியிருக்க லாம். ஆனால் ஈழ பிரச்சனையைப் பொறுத்த வரை இராஜபக்சேவுக்காக மட்டும் யாரும் பேசவில்லை. அந்த நாட்டு மக்களுக்கு தனி ஈழம் என்ற ஒரு நாடு வேண்டும் என்பதும், இன்னும் எங்களைப் போன்ற இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து வரவேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் கூட அவ்வாறான ஒரு போராட்டம் இன்னொரு பகுதியில் நடக்கின்றதே என்ற மகிழ்ச்சியோடுதான் அதற்கு ஆதரவாக இருந்தோம்; அது தொடரத்தான் செய்யும். பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியோ அல்லது குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்காகவோ ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து இயக்கம் எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அவர் ஜனாதிபதியாக இருக்கக் கூடாது என்பதற்காக மட்டும் நாம் போராடவில்லை. ஒருவேளை இந்த இராஜபக்சே தோற்று போய் விடக் கூடாது என்று எங்களுக்கு ஒரு எண்ணம் இருந்தது; தோற்றுப் போய் விட்டாலே ‘அப்பா’ என்று பெரும்மூச்சு விட்டுவிட்டு போராடுகின்ற ஈழத் தமிழர்கள் கூட அமைதியாக இருந்து விடுவார் களோ என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதாக ஏமாற மாட்டார்கள் என்று தெரியும்; இருந்தாலும் சிறு மனநிலை மாற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சினோம்; அப்படி வரவில்லை. அதேபோல தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஈழத்துக்காக என்பது, ஒரு அடக்கப்படுகின்ற – ஒடுக்கப்படு கின்ற தேசிய இனத்திற்கு ஆதரவாக, ஒடுக்குகின்ற தேசிய இனத்திற்கு எதிராக போராடியவர்கள் தான். அது ஈழத்திலும் இருக்கும், இந்தியாவிலும் நடக்கும். தொடர்ந்து நாங்கள் இயங்கி கொண்டுதான் இருக்கப் போகின்றோம். அது அவர்களுக்குள்ள புரியாத தன்மை என்றும் சொல்லலாம் அல்லது எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற ஆணவம் என்றும் சொல்லலாம்; அது தான் அந்தப் பேச்சுக்கான காரணமாக நான் கருதுகிறேன்.

ஊடகவியலாளர்: பிரபாகரன், பெரியார் என்ற இருவரையும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக காண்பித்து இயக்கம் நடத்துகின்ற அமைப்பு களில் நீங்கள் ஒரு பிரதானமான அமைப்பாக இருக்கிறீர்கள். இங்கு பெரியாரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட பிரபாகரனை ஏற்றுக் கொள்கிறார்கள்; ஒரு ஹீரோவாக, வீரத்தின் அடையாளமாக, இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தலைவராக பக்கத்து மண்ணில் பிறந்த பிரபாகரன் பற்றி இங்குள்ள தமிழ் மக்களிடம் போய் சேர்ந்த அளவிற்கு, இந்த மண்ணில் தமிழர்களின் பல்வேறு விசயங்களுக்காக போராடிய பெரியாரை நமது தலைவர் என்று முழுமையாக கருதுகிற அளவிற்கு உணர்ச்சி வசப்படக்கூடிய நிலை ஏன் ஏற்படவில்லை?
கொளத்தூர் மணி:இரண்டையும் அச்சொட்டாக நாம் ஒப்பிட்டு பார்த்து விட முடியாது. அது இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே உள்ள ஒரு நாடு; அடக்கப்படுகின்ற தேசிய இனமும் ஒடுக்கிற தேசிய இனமும் வெளிப்படையாக தெரிகின்ற நாடு. ஆனால் இங்கு தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நம்மை ஒடுக்கிறவர்கள் யார் என்பதே தெரியவில்லை. இங்கு பிரதான எதிரி யார் ? நட்பு முரண் எது? பகை முரண் எது ? என்பது கூட வெளிப்படையாக தெரியாமல் இருக்கின்றது. இந்திய தேசியத்திற்கு எதிராக பேசுவதை விட அண்டை தேசிய இனங்கள் மீது பாய்கின்ற போக்கைத்தான் இங்கு அதிகமாக பார்க்கின்றோம். அது ஏதோ பாசிசம் போல இனத்தூய்மை – இனவாதம் பேசுகின்ற நிலைக்குக்கூடப் போய்விடுகிறது. ஆக இங்கு வெளிப்படையாக யார் ஒடுக்குகின்றார்கள் என்பது தெரியவில்லை. மொழி அடிப்படையில் பார்த்தாலும் இந்தி பேசுபவர்கள் ஒடுக்கிறார்கள் என்றும் சொல்லி விட முடியாது. தொடக்கத்தில் குஜராத்தியர்களாக இருக்கக்கூடிய, ராஜ° தானை சார்ந்த மார்வாடிகள், இவர்களின் நலன் மீதுதான் இந்திய தேசியம் எழுப்பப்பட்டது, கட்டப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது தான். பரந்த சந்தை வேண்டும் என்று விரும்புகின்ற இந்த நாட்டின் பெரும் வணிகர்கள் தொடர்ந்து இந்திய தேசியத்தைப் பாதுகாக்கின்றார்கள். தங்கெளுக்கென்று நாடே இல்லாத பார்ப்பனர்கள் இந்திய தேசியம் என்று பேசுகிறார்கள். இந்த இரண்டிற்கும் எதிரான போக்குதான் நம்முடைய விடுதலைக்காக இருக்குமே தவிர, அப்படியே அச்சொட்டாக ஈழத்தில் நடப்பதைப் போல் இங்கு நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே போல அங்கிருந்த இராணுவம், அங்கிருந்த உளவுத் துறை, அதனுடைய அளவு – ஆற்றல், அதோடு ஒப்பிடுகின்றபோது இங்கு வேறு மாதிரி இருக்கின்றது. எனவே அதே போன்ற போராட்டத்தை இங்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக் குறைவாக இருந்தது. இன்னொன்று தமிழ்நாட்டில் தொடக்கக் காலத்திலிருந்து பெரியாரைப் பொறுத்தவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருந்து இது பார்ப்பனர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் மீட்டுக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பார்த்தார். பெரியாரும் அம்பேத்கரும் மட்டும் தான் வேறுபட்டப் பார்வையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அதுவே பல பேருக்குப் புரிய வில்லை. அதையே பலபேர் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே இங்கு பல்வேறு சிக்கல்களுக்கு – செய்திகளுக்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அத்தனைப் பேரையும் புரியவைத்து, சரி செய்து முன்னேறு வதற்கு அதை புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு கூட இங்குள்ளவர்களின் மனநிலை இல்லை. ஜாதியத்திற்குள் பலபேர் இருக்கிறார்கள்; பழைய நிலையில் இருந்து தங்களை மாற்றிக் கொள்வதற்கு விரைந்து முன்வராதவர்களாக பலர் இருக்கிறார்கள் இது தான் இந்த நிலைக்கு காரணம் என்று நான் கருதுகின்றேன்.
ஊடகவியலாளர்: ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இன்னும் பலர் வைக்கின்ற ஒரு முக்கியமான விமர்சனம் என்னவென்றால் தமிழகத்தை விட அதிக அளவில் ஈழத்தில் ஜாதிய மனநிலை – பழைமைவாத மனநிலை இருக்கின்றது; இங்கிருப்பதைப் போல் ஒரு பெரியாரிய வீச்சோ, இடது சாரி சிந்தனையோ அங்கு மிகவும் குறைவு என்று சொல்கிறார்கள். எனவே அந்த போராட்டம் பின் தங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமா?
கொளத்தூர் மணி:அப்படியும் சொல்ல முடியாது. அங்கு பார்ப்பனர்களின் ஆதிக்கம் இல்லை; சைவர்களின் ஆதிக்கம் தான் அங்கு இருந்திருக் கிறது. அவர்கள் எண்ணிக்கையிலும் அதிகமான வர்களாக இருந்திருக்கிறார்கள். புலிகள் மேலோங்கி இருந்த காலத்தில் மட்டும் தான் அவர்கள் அடங்கி இருந்தார்கள், ஒழிந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. மீண்டும் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக் கின்றது. வெளிநாட்டுத் தமிழர்கள் ஈழத்துக்கு திரும்பும் போது ஜாதி உணர்வோடு தான் திரும்புவார்கள் என்ற நிலை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஆயுதம் என்பது அவர்களை அமைதியாக இருக்கச் செய்தது அவ்வளவு தானே தவிர அவர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. அங்கும் இடதுசாரி சிந்தனை இருக்கத்தான் செய்கிறது; பெரியாரியம் என்பது உயர் மட்டத்தில் இல்லை என்பது உண்மைதான். இனி வரும் காலத்தில்தான் அப்படி ஒரு மறுமலர்ச்சி வருமா என்று நாம் பார்க்கப் போகின்றோம்.

ஊடகவியலாளர்: இங்கு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு பொது சிவில் சட்டம் என்பதை தொடர்ந்து சொல்கிறார்கள்; நீங்களெல்லாம் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள அம்பேத்கரே பொது சிவில் சட்டம் சரி என்று சொல்லியுள்ளார் ஆனால் இங்குள்ள பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் எல்லாம் அந்த உண்மையைச் சொல்வதில்லை என்று பா.ஜ.க. தரப்பினர் சொல்கிறார்கள். பெரியாரும்கூட பொது சிவில் சட்டத்தை ஓரிடத்தில் ஆதரித்ததாக சொல்லப்படுகின்றது; பெரியார் – அம்பேத்கர் சொல்லும் வரையறையும் இவர்கள் சொல்லும் வரையறையும் ஒன்றா?
கொளத்தூர் மணி:எல்லோருக்கும் சமஉரிமை, ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பது வரவேற்கத் தக்கது தான். ஆனால் அது வருவதற்கு முன்னால் மத சுதந்திரம் என்று வழங்கப்பட்டுள்ள 25, 26 பிரிவுகளை அகற்றிவிட்ட பின்னால் வருமே யானால் வரவேற்கலாம், பாராட்டலாம். ஆனால் மத சுதந்திரமும் இருக்கவேண்டும் எல்லோருக்கும் ஒரே சிவில் சட்டம் வரவேண்டும் என்பது பிற மதத்தினருக்காக பேசுகிறார்கள். பொது சிவில் சட்டம் வருவதற்கு முன்பு இந்துக்களுக்குள் ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று சொல்லவேண்டும். அனைத்து இந்துக்களுக்கும் சமஉரிமை வேண்டும் என்று கேட்பார்களா அல்லது அதை ஏற்றுக் கொள் வார்களா என்று சொல்லவேண்டும். ஆனால் அதைச் சொல்ல மாட்டார்கள். அர்ச்சகராக நாங்கள் மட்டும்தான் இருப்போம் என்று போராட்டம் நடத்துவார்கள்; அதற்காக வழக்குப் போடுவார்கள்; அதற்கு உச்ச நீதிமன்றம் வரைப் போவார்கள். இவர்கள் முதலில் இந்துக்களுக்கு என்று ஒரு சமச்சீரான சட்டடத்தை கொண்டு வரட்டும்; அதற்கான குரலை முதலில் ஒலிக் கட்டும்; பொது சிவில் சட்டத்திற்காக நாங்களும் பேச வருகிறோம்.

ஊடகவியலாளர்: ஆக இவர்கள் கேட்பது இந்துக் களுக்கான சம உரிமை இல்லை என்கிறீர்களா?
கொளத்தூர் மணி: இவர்கள் இந்துக்களுக்கான சம உரிமை பற்றி எப்போதும் பேசுவதில்லை. இல்லையென்றால் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்று நாங்கள் கேட்கவேண்டியதில்லை. இந்துக்கள் உரிமை என்றால் தாழ்த்தப்பட்டவரும் இந்து தான், பிற்படுத்தப்பட்டவரும் இந்துதான். ஆக சூத்திர இந்துவும், பஞ்சம இந்துவும் அர்ச்சகராக முடியவில்லை என்றால் இந்துக்களுக்கான அமைப்பு இல்லை இது; இது பார்ப்பனர் களுக்கான அமைப்பு; இதை இந்துக்களுக்கான அமைப்பாக பொய்யாக காட்டிக் கொண்டிருக் கிறார்கள் என்பதுதானே அவர்கள் நிலை; நம்மவர்கள்தான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இந்து அமைப்புகள் பார்ப்பனர்களுக்காகவே!

ஊடகவியலாளர்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட இந்துக் களுக்கான உரிமைக்காக அதிகம் பேசுகின்றீர்கள்; ஆனால் இந்துத்துவத்திற்கு எதிராக இருக் கின்றீர்கள். ஆனால் இந்துத்துவா அமைப்புகள் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட இந்துக்களாக பேசுவதில்லை; அப்படியானால் இந்துக்கள் உரிமை என்பதற்கான அவர்களின் வரையறை தான் என்ன?
கொளத்தூர் மணி: மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். கோவில் நுழைவுக்காக நாத்திகர் களான நாங்கள் தான் பேசுகின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் விடாத இடங்களில் போராடுகிறோம். அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்று நாங்கள் பேசுகின்றோம். இந்த இரண்டை யுமே அவர்கள் பேசுவதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டு இந்து அமைப்புகள் பேசுவதே இல்லை. நான் கேரளாவில் இருக்கும் ஆர்.எ°.எ° அமைப்பினரை சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பொறுத்தவரை பிறப்பின் அடிப் படையில் இல்லை, குணத்தின் அடிப்படையில் தான் வர்ணங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு இருப்பவர்கள் அந்த வாதத்தை வைப்பதோ, அதைப் பற்றி பேசுவதோ கிடையாது. கேரளாவில் தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கி அதற்கான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது அங்குள்ள இந்து அமைப்புகள் தீர்ப்பை வரவேற்றன. ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று இங்குள்ளவர்கள் வழக்குப் போடுகிறார்கள். வழக்குப் போடுபவர் தனி நபராக இருக்கட்டும்; அவர்களை ஏன் இந்து அமைப்புகள் கண்டிக்கவில்லை? எனவே இந்து அமைப்புகள் பார்ப்பனர்களுக்கான அமைப்பு தான்; பொய்யாக இவர்கள் அனைத்து இந்துக்களுக்குமானது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; நம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்துக்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கு என்று போராடினார்கள்; இந்துவாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட வில்லை; பார்ப்பனர்களுக்கும் கல்வி உதவித் தொகை வேண்டும் என்று கேட்க முடியாமல், இந்துக்களுக்கு கல்வி உதவி தொகை வேண்டும் என்று பேசுகிறார்கள். நம்மவர்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் பார்ப்பனர்களோடு நின்று ‘இந்துக்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கு’ என்று முழக்க மிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்மவர்களுக்கு நாம் புரிய வைக்க முடியவில்லை அல்லது பார்ப்பனர்கள் நம்மவர்களை நன்கு ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் என்றுதான் இதனை சொல்ல முடியும்.

ஊடகவியலாளர்: அப்படியானால் ‘இந்துக் களுக்கான உரிமை’ என்று இவர்கள் கேட்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டும் தானா?
கொளத்தூர் மணி: ஆம். அவர்கள் கேட்பது அவர்களின் பாதுகாப்புக்காக – அவர்களின் உரிமைக்காகவேதான் பேசுகிறார்கள். அவர்களின் மேலாண்மை சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள். எந்த பேஷ் வாக்களிடம் இருந்து ஆட்சி ஆங்கிலேயர்களால் பிடுங்கப்பட்டதோ, அவர்கள் கைக்கு மீண்டும் ஆட்சி வரவேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் இன் கோரிக்கை – உணர்வு. ஆனால் எல்லோரை யும் அவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள்; ஏன்? பி.ஜே.பி.யில் இஸ்லாமியர்கள் கூட இருக்கிறார்கள். பி.ஜே.பி.இல் சேர்ந்த பின்னால் இ°லாமியர் சிறுபான்மையினர் ஆக மாட்டர்கள் என்று அந்த இஸ்லாமியர்களும்கூட பேசுவதை நாம் பார்க்கின்றோம்.

ஊடகவியலாளர்: நீங்கள் இருக்கும் கொங்கு மண்டலம் சார்ந்த செய்தி இது; ‘மாதொருபாகன்’ நாவல் குறித்து உங்கள் அமைப்பின் பார்வை என்ன?
கொளத்தூர் மணி: ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய செய்திகளை அவர் பதிவு செய்திருக்கின்றார்; அதைப் பலரும் சொல்கிறார்கள். (ஊடகவியலாளர்: அப்படி இருந்தது உண்மையா?) அப்படி இருந்ததாக அண்மையில் கூட வயதான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கின்றார். அதை தவறு சொல்கின்ற இவர்களிடம் நான் வைக்கின்ற கேள்வி ஒன்று இருக்கின்றது; ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத தமிழ் சமூகத்தினர் அனைவரையும் சூத்திரன் – வைப்பாட்டி மகன் என்று சொல்கிறானே ! எத்தனை பேருக்குக் கோபம் வந்திருக்கின்றது? குழந்தை இல்லாதவள் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளியோடு தொடர்புகொண்டு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று மனுசா°திரத்தில் சொல்லியிருக்கின்றானே எத்தனை பேர் இது குறித்துப் பேசியிருக் கின்றார்கள்? சில சுயநல சக்திகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை எடுத்து வந்து இப்போது போராடுகிறார்கள்; அதுமட்டு மல்லாமல் போராட்டத்திற்கு அரசு துறைகளும் ஆதரவாக இருந்திருக்கின்றன. கோரிக்கையே இல்லாமல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் நூலை எரித்தார்கள், முழு அடைப்பு துண்டறிக்கையை நான் பார்த்தேன், துண்டறிக்கை யில் ஒரு கோரிக்கையும் இல்லை; தொடர்பு எண் இல்லை; அச்சகத்தின் பெயர் இல்லை ஆனாலும் காவல் துறை அனுமதிக்கின்றது.

ஊடகவியலாளர்: அரசு, நாவல் ஆசிரியருக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கான காரணம் என்னவாக நீங்கள் கருதுகிறீர்கள்?
கொளத்தூர் மணி: அரசு அல்ல; அங்கிருக்கின்ற அதிகாரிகள். அங்கிருக்கும் அதிகாரிகளும் அதே ஜாதியைச் சார்ந்தவர்கள். எனவே தான் பரமக்குடி தாக்குதலிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால், அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் அந்தந்த பகுதி ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்களாக இருக்க அனுமதிக்கக் கூடாது; இதே காரணத்தைச் சொல்லி தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை மாற்றக் கூடாது என்பது தான்.

ஊடகவியலாளர்: திராவிடர் இயக்கம் என்பது தமிழக வரலாற்றில் எதிரிகளாலும் தொடர்ந்து பேசப்படுகிறது; அது நல்லவிதமாகவோ எதிர்மறையாகவோ. எந்த தமிழுக்காக தமிழ் இனத்திற்காக திராவிடர் இயக்கம் பாடு பட்டது என்று சொல்கிறீர்களோ அதே தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் திராவிடர் இயக்கம்தான் துரோகம் செய்தது என்று சமீப காலமாக திராவிடர் இயக்கங்கள் குறித்து வருகின்ற விமர்சனங்களை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். ஒருவேளை, ஒரு சாதாரண ஆளோடு சண்டை போடுவதை விட, இந்த பயில்வானோடு மோதினேன் என்றால் பெருமையாக இருக்குமே என்று கருதிக் கொண்டு, தாங்கள் தலைவராக உயர வேண்டும் என்ற அவசர ஆசையில் செய் கிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் பொருளில்லாத வாதங்களை முன் வைக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. ‘திராவிடம் – திராவிடர்’ என்ற சொல் வட மொழி, அது தமிழ் இல்லை என்பதால் எதிர்க்கின்றோம் என்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம்… ‘சமூக நீதி’ என்று தானே சொல்கிறீர்கள் ‘குமுக நயன்மை’ என்று பேசுவதில்லையே? எனவே சமூக நீதியை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் பல நேரங்களில் சொல்வதுண்டு. ஏறு தழுவு தலை ‘ஜல்லிக்கட்டு’ என்று பேசு கிறார்கள் தமிழ் சொல்லா அது? ஆக ஒரு சொல் இன்னொரு மொழியில் இருக்கின்றது என்பதற்காக அதை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் தமிழ் நாட்டின் அனைத்து நன்மைகளும் திராவிடர் என்ற ஒரு சொல்லால் போய்விட்டது என்று பேசு கிறார்கள்; அதற்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்கவேண்டும். இராஜா என்று பெயர் வைப்பதனாலேயே அவன் அரசனாகி விடமாட்டான். திராவிடர் என்ற சொல்லுக்கு உள்ளடக்கமாக பார்ப்பனர் எதிர்ப்பு, பாலின சமத்துவம், ஜாதி சமத்துவம், பகுத்தறிவு எல்லா வற்றையும் சேர்த்து வைத்தார் பெரியார். இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் தனியாக பிரித்துப் பேசுவதாக நினைத்து பேசுகிறார்களே தவிர எல்லாவற்றையும் இணைத்து பேசாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பை பேசட்டும்; ஜாதி ஒழியவேண்டும் என்று தான் தமிழ்த் தேசிய பொதுவுடமை கட்சி (தமிழ்த் தேசிய பேரியக்கம்) பேசுகிறதே தவிர ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. ஜாதி எப்படி ஒழியும்? அதற்கான முயற்சி என்ன? தமிழர் என்று இணைய வேண்டுமானால் இணைவதற்கு தடை யானவற்றை அகற்ற வேண்டும்; அதற்கு என்ன முயற்சி என்று சொல்லவேண்டும். நீங்களெல்லாம் தமிழ்த் தேசியத்தை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கின்றீர்கள் என்று நம்மைப் பார்த்து சொல்கிறார்கள்; தமிழ்த் தேசியம் என்பதற்கு என்னவென்றே எங்களுக்கு விளக்கம் தெரியவில்லை. திராவிடர் இயக்கங்கள் செய்யாத எந்த புது செயல்களை இந்த தமிழ்த் தேசிய இயக்கத்தினர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் சொல்லவேண்டும். உதாரணமாக இங்கு இருக்கின்ற மைல்கற்களில் இந்தியில் எழுதப்பட்டதற்கு முதல் எதிர்ப்பு உடுமலைப் பேட்டையில் இருந்து வந்தது. அதை அப்போதைய பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தான் முன்னெடுத்தார்கள். அது அகற்றப்பட்ட பின்னால், நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசிய பின்னால் தான் இங்கு தமிழ்த் தேசியவாதிகள் பேசினார்கள். ஈழச் சிக்கலை பேசுகிறார்கள் சரி, ஈழத் தமிழர்களை கொல்ல ஆயுதம் போகிறதே என்று தடுத்தவர்கள் யார்? கோவை இராமகிருஷ்ணன் தலைமையில், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், ம.தி.மு.க தோழர்கள் தான் தடுத்து கைது ஆனார்கள். இந்த தமிழ் தேசியவாதிகளுக்கு ஒருவேளை அப்போது செய்தி தெரியாமல் இருந்திருக்கலாம்; அடுத்தேனும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை, வீரியமானப் போராட்டத்தை நிகழ்த்தினார்களா என்று சொல்லட்டும். தமிழ்த் தேசியத்திற்காக பேசுபவர்கள் திராவிடர் இயக்கத்தை விட கூடுதலாக இதைச் செய்கிறோம் என்று ஒரு செய்தி வரட்டும். அது கூட வேண்டாம், ஈழப் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்தற்காக சிறை சென்றவர்களின் பட்டியல் எடுங்கள்; அல்லது தமிழ்வழிக் கல்விக்காக நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை நடத்துபவர்களின் பட்டியலை எடுக்கட்டும், எல்லாவற்றிலுமே தமிழ்த் தேசிய வாதிகளின் பங்கு குறைவாகத் தான் இருக்கும். நாங்களும் தமிழ்த் தேசிய வாதிகள் தான்; ஆனால் அவர்கள் எங்களை அப்படி ஏற்றுக்கொள் வதில்லை. இவர்கள் தமிழ்த் தேசியத்தை பேசுகிறார்கள், அதற்காக செயல்படுபவர்களாக பெரியார் இயக்கத்தினர் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் என்பது தான் எனது கருத்து.

ஊடகவியலாளர்: சமீபத்தில் ஜெயமோகன் கூட எழுதினார்; திராவிடர் இயக்கத்தினால் பலன் பெற்றவர்கள் இடைநிலை ஜாதியினர் மட்டும் தான்; பிராமணர்களையும் தலித்துகளையும் ஒதுக்கி வைத்தார்கள்; இடைநிலை ஜாதி ஆதிக்கம் பெறுவதற்கு மட்டும்தான் திராவிடர் இயக்கம் பயன்பட்டது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு திராவிடர் இயக்கம் ஒன்றும் செய்ய வில்லை என்று ஒரு வாதம் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: இதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். அது என்னவென்றால் இடைநிலை ஜாதியினர் தங்கள் இழிவு நீங்கியவுடன் பெரியார் இயக்கத்தைவிட்டு தள்ளிப் போய்விட்டார்கள். தொடக்க காலத்தில் பெரியார் காங்கிரஸ்காரராக இருந்த போதி லிருந்தே ஜாதிக்கு எதிராகப் பேசியதற்கு வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் அனைத்து இடங்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக வரமுடிய வில்லையே என்று ஏன் பெரியாருக்கு மட்டும்தான் தோன்ற வேண்டுமா? தாழ்த்தப்பட்ட தலைவர் களால் இப்படி ஒரு குரல் எழுப்பப்பட்டதா? பெரியார் சொல்லி நீதிபதி வரதராஜன் அப்போதுதான் நியமனம் பெறுகிறார். பறையர் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களே யானால் நீங்கள் வடிகட்டிய முட்டாள்கள் ஆவீர்கள் என்று பெரியார் சொன்னார். பெரியாருடைய சிந்தனை சரியாகத்தான் இருந்தது. ஆக ஒரு இயக்கத்தைப் பயன்படுத்தி பலன் பெற்றவர்களாக யாரோ இருந்தாலும், அந்த இயக்கத்திற்குத் தத்துவம் கொடுத்தத் தலைவரின் சிந்தனை எவ்வாறு இருந்தது என்றுதான் பார்க்கவேண்டும்.
எல்லா நேரங்களிலும் பெரியார் அப்படி சரியாக இருந்தார் என்பதற்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும். இந்த தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த பத்மநாபன் (ஆளுநராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்) அவர்கள், ஒருமுறை அவருடைய மாணவப் பருவ சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளும் போது சொல்கிறார்… “தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறு வதற்கு என்ன செய்யலாம்? என்பதற்காக இளைஞர்கள் நாங்கள் ஒரு குழுவாக சென்று அம்பேத்கரைச் சந்தித்தோம்; அவர் எங்களைக் கடிந்து கொண்டார்; தமிழ்நாட்டில் இராமசாமிப் பெரியார் இருக்கும்போது என்னிடம் எதற்கு வந்தீர்கள்? போய் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்” என்று. ஆக அம்பேத்கர் பெரியாரைப் புரிந்து வைத்திருந்தார்; அந்தப் புரிதல் இந்தத் தலைவர்களுக்கு இல்லையே என்பது வருத்தம் தான்.
ஊடகவியலாளர்: மதமாற்றம் குறித்து வந்த பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்தே வந்திருக்கிறீர்கள்; இந்து மதத்திற்கு திரும்பும் கிறிஸ்துவ – இஸ்லாமியர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்? என்று உங்களைப் போன்ற பெரியாரிஸ்டுகள் கேட்ட கேள்விக்கு, பி.ஜே.பி.யினர் தற்போது ஒரு பதில் சொல் கிறார்கள்; எல்லோரும் தாய் மதத்திற்குத் திரும்புங்கள், ஜாதி தெரியாத இஸ்லாமியர்களை நேரடியாக பிராமண ஜாதியில் சேர்த்துக் கொள்கிறோம் என்று இராமகோபாலன் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்; இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: உமாசங்கர் மதமாற்றத்திற்காக பேசுகிறார் என்கிறார்களே இதற்கு என்ன நாம் சொல்லப் போகிறோம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. மதம் மாற்றம் என்று சொன்னால் ‘தாய் மதம் திரும்புதல்’ (கர் வாபஸி) என்ற புதிய சொல்லை சொல்கிறார்கள்; இது அப்போது ஆரிய சமாஜமே கொண்டுவந்தது தான். ஒரு ஆயிரத்திற்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்னால் நின்றசீர் நெடுமாறன் என்ற சமணரை சைவராக்கினார்கள். தர்மசேனன் என்ற சமணனை இவர்கள் திருநாவுக்கரசர் ஆக்கி னார்கள். அப்படியானால் சைவர் களெல்லாம் மீண்டும் தாய் மதமான சமண, பௌத்த மதத்திற்குப் போவார்களா என்று தெரியவில்லை. அல்லது பழந்தமிழர்களுக்கு மதமே கிடையாது என்று சொல்கிறார்கள்; ஆக இவர்கள் எங்கே போவது? 1800 க்கு பின்னால் – 1900 க்கு பின்னால் என்று ஏதேனும் வரம்பு வைத்திருக் கிறார்களா என்று தெரியவில்லை. மதம் மாறுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்; 18 வயது நிரம்பிய ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கின்றது; வாக்குகளை சேகரிக்கும் உரிமை கட்சிகளுக்கு இருக்கிறது. அதே போல தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அழைக்கின்றார்கள்; போகின்றார்கள்; அதை ஏன் இவர்கள் தடுக் கின்றார்கள். மதம் மாற்றுவதற்கு வேறு யாரும் பேசக்கூடாது, நாங்கள் மட்டும் மாற்றுவோம் என்று பேசிக் கொண்டிருக் கிறார்கள். பார்ப்பன ஜாதியில் சேர்த்துக் கொள்கிற நிலைமை வராது; வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்பது அப்போது தெரியும். ஒருவேளை சேர்த்துக் கொள்வதென்றால் நஜ்மா ஹெப்துல்லாவை, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை முதலில் பார்ப்பனர்களாக சேர்த்துக் கொள்ளட்டும்; மகிழ்ச்சி நமக்கு. தாய் மதம் திரும்புவதற்கு அவர்கள் கட்சியில் இருப்பவர்களை முதலில் கேட்டுப் பார்க்கட்டும்; அவர்களெல்லாம் முன்னுதாரணமாக இருந்தால் பல பேர் வர வாய்ப்பிருக்கின்றது. அம்பேத்கர் சொன்னார்… ‘பௌத்த இந்தியா மீது இந்து படையெடுப்பு நடந்தது; இந்து இந்தியா மீது முகலாயர் படை யெடுப்பு நடந்தது; அதன் மீது ஆங்கிலேய -ஐரோப்பிய படையெடுப்பு நடந்தது என்று. தமிழ்நாட்டில் இந்து மதம் எப்போதிலிருந்து இருந்தது? சைவர்கள் – வைணவர்கள் சண்டை போட்டதை கல்கிகூட எழுதியிருக்கிறார். சைவ மதம் தனியாக இருந்தது; வைணவ மதம் தனியாக இருந்தது. ஒரு காகம் கோவில் மேல் உள்ள சிறுகல்லைத் தள்ளி தனது மூக்கில் இரத்தம் வந்தபோதுகூட ‘ஆஹா வைணவக் கோவிலை இடிக்கிறாயா! மகிழ்ச்சி’ என்று பேசிய சைவனைத் தான் கல்கி தனது நாவலில் காட்டுகிறார். ஆக ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்த சைவனும் வைணவனும் எப்போது இந்து ஆனார்கள்? கல்கி காலத்தில்கூட இரண்டு மதங்களாக இருந்ததைத் தானே எழுதுகிறார். அப்படி பிரித்தால் யார் பெரும்பான்மை மதம் என்பது தெரியும். இவர்கள் தங்களுக்கு வசதியானதை, தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற ஆணவத்தோடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதை எதிர் கொள்ள வேண்டிய ஆற்றலையும் நோக்கத்தையும் நாம் இணைத்து கொள்ளவேண்டும் அல்லது ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஊடகவியலாளர்: அம்பேத்கர் பற்றி இந்துத்துவா அமைப்புகள் தொடர் திரிபுகளை செய்வதாக சுட்டிக்காட்டி, அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ் க்கான தலைவர் அல்ல, எங்களுக்கான தலைவர் என்று சொல்லி வருகிறீர்கள்; பெரியாரை இராமசாமி நாய்க்கர் என்று வெளிப்படையாக விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள் –இடதுசாரி சிந்தனை என்ற தத்துவமே ஆபத்து, வன்முறை என்று விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள், அம்பேத்கரை மட்டும் அவ்வப்போது எங்கள் தலைவர் என்று சொல்லிக் கொள்வதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: அதற்குள் ஒரு சதி இருக்கின்றது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல இது பார்ப்பனர்களுக்கான அமைப்பு. மற்றவர்கள் மீது ஏவி விடுவதற்கு, ஏவல் ஆட்கள் இவர்களுக்கு எப்போதும் வேண்டும். எனவே போராடுகிற சக்தியுள்ள அல்லது ஆயுதம் ஏந்தக் கூடியவர்கள் அல்லது உடல் பலம் உள்ளவர்கள் இவர்களுக்கு வேண்டும்; பொய்யாக சொல்லி, பிற்படுத்தப் பட்டவர்களை மட்டும் எதிரிகளாகக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களை கைவசப்படுத்தி வைக்கிறார்கள். பழங்குடி மக்களிடம் போய் வேரூன்றி அவர்களை தங்கள் கைவசப்படுத்தி விடுகிறார்கள். அம்பேத்கருக்கு எதிராக பேசி விடுவார்களேயானால் அவர்களெல்லாம் எதிராகப் போய்விடுவார்கள். அம்பேத்கர் இந்துயிசத்தின் தத்துவம், இந்துமதப் புதிர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்; இராமனை கிருஷ்ணனை விளாசித் தள்ளியுள்ளார்; மனுதர்மத்திற்கு எதிராக எழுதினார், ஆய்வு செய்தார்; மனுசாஸ்திரத்தை எரித்தார்; இவ்வளவும் செய்தவரை தெரியாமல் இவர்கள் பேசுவதாக சொல்லமுடியாது, தெரிந்தே பேசுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் கைபிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கரை எதிர்க்காமல் இருக்கிறார்கள். வெளிப்படையாக எதிர்க்காமல் இருக்கிறார்கள் அவ்வளவுதான்; உள்ளுக்குள் எதிரான கருத்துகள் இருக்கத்தான் செய்யும்.

ஊடகவியலாளர்: அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது ஒரு உத்தி என்கிறீர்களா?
கொளத்தூர் மணி: நிச்சயமாக உத்தி தான். சில அம்பேத்கரிஸ்டுகளே பி.ஜே.பி யில் சேரக்கூடிய நிலையில் இப்படி பேசுகிறார்கள். அம்பேத்கரை பொறுத்தவரை இந்துத்துவாவிற்கு எதிராக இருந்திருக்கிறார். இந்து மதம் என்பது நமக்கான உரிமையை எப்போதும் கொடுக்காது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்; எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி மக்களுக்கு சொல்லியிருக் கிறார்.

ஊடகவியலாளர்: தமிழகத்தில் 31 இடங்களில் கோட்சே சிலை வைப்பதாகவும், காந்தியை ஏன் கோட்சே சுட்டுக்கொன்றார் ? அதன் நியாயங்கள் என்ன? என்பதை நாங்கள் அறிக்கையாக கோட்சேவின் வாக்குமூலத்தை வெளியிடப் போகின்றோம் என்று சொல்கிறார்கள். காந்தியை கொன்றவர் இந்துத்துவாவாதி என்று இதுவரை உங்களைப் போன்றவர்கள் பேசி வந்தீர்கள்; ஆனால் இப்போது அவர்களே நாங்கள் தான் காந்தியை கொன்றோம், அதற்கான காரணத்தை வெளியிட்டு, நாங்கள் வெளிப்படையாக பேசுவோம் என்று சொல்லக் கூடியதை எந்த விதமான மாற்றமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
கொளத்தூர் மணி: ஆட்சிக்கு வந்துவிட்ட ஆணவ மாகத்தான் தெரிகிறதே தவிர, வேறொன்றும் இல்லை. கோட்சே வாக்குமூலத்தை வெளி யிடட்டும். அவர்கள் எதையும் காட்டாமல்தான் பேசுவார்கள். ரிக் வேதத்தை என்னவென்றே காட்டாமல் வேதத்தில் எல்லாம் இருப்பதாக சொல்வார்கள்; ரிக் வேதத்தை படித்தால் ஒன்றும் இருக்காது. “டேய் மாப்ள தண்ணி வாங்கி தர்றன், கறி வாங்கி தர்றன் வா அவன அடிக்கலாம்” என்பதைப் போலத்தான் சமஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கின்றான். கருப்பர்கள் வருகிறார்கள் இவர்களை தாக்குவதற்கு இந்திரனே வா, உனக்கு சோமபானம் வைத்திருக்கின்றேன், மாமிசம் வைத்திருக்கின்றேன் (ஊடகவியலாளர் : கருப் பர்கள் என்று குறிப்பிடுவது தமிழர் களையா?) ஆம் தஸ்யூக்கள் என்று தமிழர்களைத் தான் சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்தவர்கள் தமிழர்கள் என்று அம்பேத்கர் சொல்வார். இந்தியா முழுவதும் பரவியிருந்த இந்நாட்டு மக்களை அல்லது வேறு வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்வதைப்போல இவர்களுக்கு முன்பு நீண்ட காலங்களுக்கு முன்பாக வந்து அமர்ந்தவர்களைத் தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதைப் போலத்தான் கோட்சேவின் வாக்குமூலத்தை படிக்கட்டும். அதில் ‘நான் மட்டும் தான் குற்றவாளி, ஆப்தே கூட குற்றவாளி இல்லை’ என்று தான் சொல்கின்றான். சாவர்கார் உட்பட யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்கின்றான். முற்றும் முழுதாக கையில் சிக்கிக் கொண்ட இவன் மறுக்க முடியாது; வேறு வழியில்லை, நாம் எப்படியும் தண்டிக்கப்பட போகிறோம்; ஒரு வீரப் பெருமை யோடு சாகலாம் என்பதற்காக அவன் சொன்னது தான் அது; ஆம் இதற்காகக் கொன்றேன் என்று சொல்கிறான். காந்தி உண்ணாவிரதம் இருந்ததை சொல்கிறான். இ°லாமியர்களுக்காக இருந்தார், பாகி°தானுக்கு பணம் கொடுக்கச் சொன்னார் என்ற காரணத்தை அதில் சொல்லியிருக்கிறான். 1944 ஆம் ஆண்டே கத்தி எடுத்துபோய் காந்தியை கொலை செய்ய முயற்சித்தவன் இவன்தான். இதற்காக 1944 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே கைது செய்யப்பட்டிருக்கிறான். அப்போது காந்தி பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கச் சொல்ல வில்லையே! ஆனாலும் இவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள். அவர்கள் வெளியிடட்டும் அதைப் பற்றி பேசுவதற்கு நமக்கு வசதியாக இருக்கும் (ஊடகவியலாளர் : வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறீர்கள்) இவர்கள் இப்போது ஒன்றும் வெளியிடப் போவதில்லை; ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது இருந்து கொண்டு தான் இருக்கிறது; 1979 ஆம் ஆண்டே மொரார்ஜி தேசாய் இருந்தபோதே வெளியிட்டு விட்டார்கள். 1993 இல் வெளிப் படையாகவே பேசப்பட்டது – எழுதப்பட்டது. ‘நான் ஏன் கொலை செய்தேன்’ என்று கோபால் கோட்சே புத்தகம் எழுதினார். புதிதாக ஒன்றும் வெளியிட போவதில்லை அதேபோல கோட் சேவுக்கு சிலை வைப்பதாக சொல்வதும் புதிதல்ல. காந்தியை நான் தேசப்பிதா என்று ஏற்றுக் கொள்ள மேட்டேன் என்று நாடாளுமன்றத்தில் அத்வானி சொல்லியிருக்கிறார்; கோட்சே ஒரு தேசபக்தர் என்று 2010 க்கு முன்பே தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனா தலைவர் பால்தாக்ரே சொல்லியிருக்கிறார். இப்போது வெளிப்படையாக பலர் சொல்கிறார்கள்; இப்போதுதான் இந்து மகா சபையின் தீர்மானமாக போட்டு, மீரட்டில் சிலை வைக்கப்போவதாக சொன்னார்கள்; இப்போது அதற்கும் அந்த அரசு தடை விதித்துவிட்டது. சமூக அமைதியைக் குலைக்கிறார்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டு மேல் முறையீட்டில் உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிக்காக இவர்கள் பேசுவது என்பது முதலில் நீதிமன்ற அவமதிப்பாக நான் பார்க்கின்றேன். இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தேசப்பிதா என்று ஏற்றுக்கொண்ட காந்தியை, அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிற படத் திற்குச் சொந்தகாரரான காந்தியை, நம்முடைய பணத்தாள்கள் அனைத்திலும் பதியப்பட் டிருக்கும் காந்தியை…

ஊடகவியலாளர்: பணத்தாளில் இருந்து காந்தி படத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே ?
கொளத்தூர் மணி: ஆம் பேச தொடங்கிவிட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவோமோ மாட்டோமோ, இப்போதே எல்லாம் செய்துவிட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் ஆட்சி ஐந்து ஆண்டு காலம் இருக்குமோ அல்லது அதற்கு முன்னால் போகுமோ தெரியாது; இருப்பதற்குள் முடித்து விட வேண்டும் என்ற துடிப்பை நாம் பார்க்க முடிகின்றது. அவர்கள் தொடர்ந்து பொய் பேசு கிறார்கள்; பொய்யை ஆராய்வதற்கு மக்களுக்கு நேரமில்லை; வாரம் ஒரு பொய் வந்து கொண் டிருக்கிறது. இவர்கள் இப்படி துணிச்சலாக பேசுவதை மக்களுக்கு விளக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. கோட்சே யார்? அவருக்கு பின்னணியாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் யார்? இந்து மகா சபை என்ன? என்பதை நாம் பேச வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே இதை வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

ஊடகவியலாளர்: இதை இந்து மகா சபை சொல்கிறது, இதை பால்தாக்ரே சொல்கிறார், ஆனால் இதை மோடி சொல்லவில்லையே? என்று பி.ஜே.பி யினர் சொல்கிறார்கள்?
கொளத்தூர் மணி: மோடி இந்த நாட்டின் தலைவர்; தேர்தல் நேரங்களில் பேசாத பேச்சையெல்லாம் (அனைத்து செய்திகளையும்) பேசிகொண் டிருந்தவர். இப்போது இதை பற்றி பேசவில்லை என்பதே அவர் அவற்றை ஏற்றுக்கொண்டார் என்பதற்கான அடையாளம் என்று சொல்லு கின்றோம். கோட்சே தேசபக்தன் என சாக்ஷி மகராஜ் என்கின்ற பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகிறார்; அந்த நாடாளுமன்றத்தின் தலைமை அமைச்சராக இருப்பவர் மறுப்போ அல்லது அது அவரின் தனிப்பட்ட கருத்து என்றோ சொல்லவேண்டும் ஆனால் சொல்ல வில்லை. காந்தியை மறக்கடிப்பதற்காகத் தான் அந்த நாளில் தூய்மை பாரதம் என்று ஏதோ சொன்னார்கள். நமக்கெல்லாம் அம்பேத்கர் நினைவு நாளில் (டிச-6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால்) அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் நடத்தவே அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் காந்தி இறந்த அதே ஜனவரி 30 ஆம் நாளில் சிலை வைக்கிறோம் என்கிறார்கள். திருச்சியில் விஷ்வ ஹிந்து பரிசத் மாநாட்டை அதே ஜனவரி 30 ஆம் தேதியில் என அறிவிக்கிறார்கள் என்றால் இவர்களின் ஆணவத்தையும் தமிழக அரசின் கேவலமான செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி தானே தவிர அவர் மீதான விசாரணை முடியவில்லை; விசாரணை முடிந்து, குற்றவாளியாக உறுதி செய்யப்பட்ட பின்னால் பிரபாகரன் படம் வைக்கக் கூடாது என்றால் அதில் பொருள் இருக்கலாம். ஆனால் இப்போதே பிரபாகரன் படம் வைத்தால் அகற்றுகிறார்கள், வீட்டில் யாரேனும் நாள் காட்டி வைத்திருந்தாலும் தேடிப் போய் பார்த்து வழக்குப் போடுகிறார்கள். இவராவது ராஜீவ் காந்தி ஆனால் ஒரிஜனல் காந்தியை – இந்த நாட்டின் தந்தையைக் கொன்ற கொலைகாரனுக்கு சிலை வைக்கின்றோம் என்கிறார்கள். காங்கிர° காரர்கள் கூட ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை; இந்த நாட்டின் ‘தேச பக்தர்கள்’ எல்லாம் எங்கே போய் விட்டார்கள் என்றும் தெரியவில்லை. மீண்டும் திராவிடர் இயக்கங்கள் தான் இவற்றைப் பேசி வருகின்றன.

ஊடகவியலாளர்: தமிழகத்தில் சமீபத்தில் இன்னொரு முக்கிய பிரச்சனையாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மதப் பிரச்சாரம் செய்கிறார் என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன; தமிழக தலைமைச் செயலாளர் மதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி யுள்ளர்; 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்திக்கவேண்டிய ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மதப் பிரச்சாரம் செய்வது தவறு என்று இந்து அமைப்புகள் சொல்லும் இந்தப் பிரச்சனையை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: ஒரு அரசு அதிகாரி தனது பணிக் காலத்தில் ஒரு மதத்திற்கு ஆதரவாக காட்டிக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; அது கூடாது என்று தான் கருதுகின்றோம். அதேவேளையில் கோவில் கும்பாபிஷேகத்தில், சங்கராச்சாரி தரிசனத்தில் கலந்துகொள்கின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, நீதிபதிகளை இந்த நடுநிலையாளர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி எனக்கு வருகிறது. உமாசங்கர் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்வது தவறு என்கின்ற போது, இவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள், இராமாயணப் பிரசங்கத்தில் கலந்து கொள் கிறார்கள் ஏன் யாரும் அதைப்பற்றி பேசுவ தில்லை? இந்த நாட்டில் எந்த அரசு அதிகாரியும் அரசு சார்ந்தவரும் அல்லது நீதிபதியோ யாரும் எந்த ஒரு மதத்திற்கு ஆதரவானவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்களின் மத நம்பிக்கையை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளட்டும்; வெளியில் காட்டக் கூடாது என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டுமே தவிர உமாசங்கருக்காக மட்டும் பேசக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

ஊடகவியலாளர்: என்னவிருந்தாலும் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்லியிருக்கிறாரே; அப்படியானால் பெரியாருக்கு நம் மொழி குறித்த பார்வை இல்லையென்று தான் பொருள் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றதே?
கொளத்தூர் மணி: தினத்தந்தியில் செய்தி பார்த்துவிட்டு பேசுபவர்களைப் போல் பேசுகிறார்கள்; பெரியாரின் எழுத்துக்களை ஆழ்ந்து படித்தவர்களுக்கு தெரியும். தமிழ் புலவர்கள் மீது எனக்குள்ள கோபமெல்லாம் இந்த மொழியை அறிவியல் மொழி ஆக்க வில்லையே என்பது தான் என்று பெரியார் சொல்லியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் தமிழில் புதுமை இலக்கியங்களைப் படைத்து தருபவர்களுக்கு நான் பரிசு தருகிறேன் என்று பெரியார் அறிவித்துள்ளார். தமிழுக்காக பேசும் எந்த தலைவர்களும் இப்படி அறிவித்தாக நான் அறியவில்லை. தமிழர்களுக்கு நேற்று என்று பேசாமல் நாளைய தமிழகத்துக்கான செய்திகளை எழுதி வாருங்கள், இவ்வளவு பரிசு தருவேன், இவ்வளவு பிரதிகள் இலவசமாக அச்சிட்டு தருவேன் என்று அறிவித்தவர் பெரியார். அதே போல இந்த தமிழ் என்பதற்கான சிக்கல்கள் வருகின்ற போதெல்லாம், தமிழர் களுக்கான சிக்கல்கள் வருகிற போதெல்லாம் அதை எதிர்த்தார் இந்தி வந்த போதும் அதை அப்படிக் கருதித் தான் எதிர்த்தார். இன்னும் கேவலம் என்னவென்றால் அரசியல் தெரியாதவர்கள் பேசினால் கூட ஏற்றுக் கொள்ளலாம்; அரசியல் தெரிந்தவர்கள் கூட ‘பெரியார் பெட்ரோல் டின் வைத்துக்கொண்டு இந்தியை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது ஊற்றி எரிக்கச் சொன்னார் என்று காங்கிரஸ்காரர் இங்கு இதே நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன்; அவர் அறியாமல் பேசுகிறார். அரசியல் தெரிந்தவராக நாம் இதுநாள்வரை நம்பிக் கொண்டிருந்தவரும் எழுதுகிறார். குலக்கல்வி திட்டத்தின் போது பெரியார் பேசியதை இதோடு இணைத்து ஏதாவது பெரியார் மீது எழுதிவிட முடியும், எழுதி விடலாம், எழுதிவிட்டால் எல்லோரும் நம்மை உற்று கவனிப்பார்கள் என்ற உளவியல் சிக்கலாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன்.

ஊடகவியலாளர்: பெரியார் கூட தன்னுடைய தலைவராக அம்பேத்கரை சொல்லியுள்ளார் !
கொளத்தூர் மணி: ஆம், அம்பேத்கரை ஏற்றுக் கொள்ளுங்கள், என்னுடைய தலைவராக அவரைத் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பெரியார் பேசியிருகிறார். ஆக அவர்களுக்குள் ஒத்த சிந்தனை – ஒத்த போக்கு இருந்தது. பலமுறை இருவரும் ஒரே நேரங்களில் ஒரே குரலை எழுப்பியுள்ளார்கள். ஆனால் இந்தத் தலைவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை; தெரிந்தும் பேசுகிறார்களா? தெரியாமல் பேசுகிறார்கள் என்பதும் புரிய வில்லை. தமிழ்த் தேசியவாதிகள் சிலர் தெரிந்தும் பேசுகிறார்கள்; தெரியாமல் பேசும் பல புதியவர்கள் இருக்கின்றார்கள்; ஏன் இந்த போக்கு என்று புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக ‘திராவிடர் கழகம்’ என்ற பெயர் மாற்றம் குறித்து பெரியாரிடம் சத்தியமூர்த்தி தொலைபேசியில் சொன்னதாக சொன்னார்கள்; சத்தியமூர்த்தி 1943 இல் இறந்துவிட்டார், 1944 இல் எப்படி பேசமுடியும் என்று விடுதலை இராசேந்திரன் பதில் எழுதினார் உடனே இராஜாஜி என்றார்கள்; ஆனால் ‘திராவிடர் கழகம்’ பெயர் மாற்றம் குறித்து ஆண்டு முழுவதும் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் குடிஅரசு பதிவில் இருப்பதை சுட்டிக்காட்டி நாம் பல முறை எழுதிய பின்னரும், மீண்டும் மீண்டும் அதே பொய்யைப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆக இவர்களிடம் விளக்கமளித்து என்ன பயன் விளைவிக்கும் என்று எங்களுக்குப் புரியவில்லை; அவர்களுக்குப் புரிந்துகொள்கின்ற அறிவாற்றல் இல்லை என்றும் சொல்ல முடியாது; இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என்று பேசாமல் அமைதியாக விட்டுவிட வேண்டியது தானா என்றுகூட கருதுகிறோம்; ஆனாலும் தொடர்ந்து விளக்கங்களை அளித்துக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.
இளைஞர்களிடம் போகவில்லை

ஊடகவியலாளர்: அம்பேத்கர், இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் 18 சதவீத இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார்; சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இந்துக்கள் மட்டும் போட்டியிடக் கூடிய தொகுதி, தாழ்த்தப்பட்டவர்கள் தனித் தொகுதி தான். தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அம்பேத்கர் திட்டமிட்டே ரிசர்வ் தொகுதி கொடுத்திருக்கிறார் – இந்து எஸ்.சி என்று வரையறுத்துள்ளார். ஆனால் மதம் இல்லை என்று சொல்லும் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் போன்றவர்கள் மத மாற்ற உரிமை என்ற பெயரில் கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள். மதம் மாறக் கூடாது என்ற எங்கள் கருத்துதான் அம்பேத்கர் கருத்து; பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் மாற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்வதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: இது தவறான பொய்யான செய்தி. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பட்டியல் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான பட்டியல் 1935 ஆம் ஆண்டு சட்டத்திலேயே வந்துவிட்டது. அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் உரிமையை வழங்கவேண்டும் என்று மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர, இந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று 1950 ஜனவரி 26இல் நடைமுறைக்கு வந்தபோது அரசியல் சட்டத்தில் இல்லை. 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடிஅரசுத் தலைவர் வெளியிட்ட ஒரு அறிவிக்கையில் (நோட்டிபிகேசனில்) தான், இவ்வொதுக்கீடு இந்துக்கள் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட அறிவிக்கையை வெளியிட்டவர் ஒரு இந்துத்துவாவாதியான இராஜேந்திரபிரசாத். அவர் வெளியிட்ட அறிவிக்கையால் வந்ததுதானே தவிர அரசியல் சட்டத்தில் அப்படி ஒரு சொல்லே இல்லை; அப்படி பேசுபவர்கள் அரசியல் சட்டத்தை நன்றாக படிக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

ஊடகவியலாளர்: திராவிடர் இயக்கம் என்றால், ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழி உணர்ச்சி போன்ற பல்வேறு விசயங்கள் பாரம்பரியமாக இருப்பதாக சொல்கின்றீர்கள்; இன்றைய சராசரி இளைஞர்களிடம் திராவிடர் இயக்கம் குறித்த பார்வை நேர்மறையாக இருக்கின்றதா? இந்த அமைப்பினால் வந்தோம் என்ற உணர்வு இருக் கின்றதா? இதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: மிகக் குறைவாக தான் இருக்கின்றது.

ஊடகவியலாளர்: அதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்?
கொளத்தூர் மணி: திராவிடர் இயக்கத்தின் குறையாகத்தான் சொல்லவேண்டும். நாம் போதிய அளவு அவர்களிடம் செய்திகளை எடுத்துச் செல்லவில்லை. ஊடகங்களும், பாடத்திட்டமும் தான் மாணவர்களிடையே, இளைஞர் களிடையே செய்திகளை எடுத்துச் செல்ல முடியும். ஊடகங்கள் இதைச் செய்வதில்லை; எனவே பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். குறைந்தது இட ஒதுக்கீடு பற்றி மட்டுமாவது பாடத் திட்டத்தில் கொண்டு வந்திருக்கவேண்டும்; இதுவரை அப்படிப்பட்ட முயற்சி ஏதும் இல்லை. எல்லா இடங்களிலும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பி.ஜே.பி கூட கடந்த முறை, தமிழகத்தில் ஆதரிக்கிறோம் என்று சொன்னார்கள்; இருந்தும் ஏன் பாடத்திட்டத்தில் வரவில்லை? நம்மவர்கள் அக்கறை இல்லாதவர் களாக இருக்கின்றார்கள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களை விட அதிகாரிகளாக இருப் பவர்கள் கூடுதல் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன். போதிய அளவு நாம் எடுத்துச் செல்லவில்லை என்றாலும் மேல்நிலைப் பள்ளி – கல்லூரி மட்டத்தில் இருக்கும் மாணவர்களில் பலர் இப்போது புதிதாக எல்லா இடங்களிலும் எங்கள் அமைப்புகளை நோக்கி வருவதையும் நாங்கள் பார்க்கின்றோம். தனியார் – சுயநிதிக் கல்லூரிகளில் பெற்றோர்களால் பல இலட்சம் பணம் கொடுக்கப்பட்டு இடம் வாங்கி தந்திருக்கிறார்கள் என்ற நிலை இருக்கும் போது போராட்டத்திற்கு வருவதற்கு மாணவர்களுக்குத் தயக்கம் இருக்கின்றது; ஆனால் பலர் இவை குறித்த விவாதத்திற்குள் இப்போது வருகிறார்கள். இதற்கான பெரும் பங்கு தமிழ்த் தேசியவாதிகளையே சாரும்.

ஊடகவியலாளர்: அந்த திருச்செங்கோடு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடர்த்தியாக இருக் கின்றது; அந்த சமூகத்தைச் சார்ந்த இயக்கங்கள் அதிக அளவில் ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்கள். தற்போதும் உள்ள திருச்செங்கோடு, கோவில் தேரோட்டம், தெரு, பகுதி முதலியவற்றை அப்படியே குறிப்பிட்டு, ஒரு நூறு வருடத்திற்கு இங்கு பெண்கள் எந்த ஆணோடும் சென்று குழந்தை பெற்றுக் கொள்ள லாம் என்ற மரபு இருந்தது என்று சொல்லும் போது, இப்போ திருக்கும் இளைஞர்களுக்கு இது அவமானமாக இருக்கின்றது; எனவே தான் பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்துகின்றார்கள் என்று சொல்லப்படு கின்றதே?
கொளத்தூர் மணி: உதாரணமாக, எனது நண்பர் பற்றியோ, ஒரு தோழியைப் பற்றியோ இவள் ஒழுக்கம் கெட்டவள், இவளோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஒருவர் எனக்கு கடிதம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது தவறான செய்தி என மறுக்க வேண்டும் அல்லது அமைதியாக விட்டுவிட வேண்டுமே தவிர, அதை பத்தாயிரம் படி எடுத்து இப்படி எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கின்றது என்று பரப்பினால் இதில் அவமானப்படுத்தப்படுவது யார்? விரும்பி காசு கொடுத்து நூலை வாங்கி படித்தவர்களுக்கு மட்டும் தெரிந்திருந்த செய்தியை இவர்கள் பத்தாயிரம் –இருபதாயிரம் படி என்று எடுத்து பரப்பியுள்ளார்கள் என்றால் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? படி எடுத்துக் கொண்டு அதிகம் இழிவுபடுத்தியவர்கள் மீது தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்?

ஊடகவியலாளர்: இவர்கள் சொல்லும் பண்பாட்டு பாதுகாப்பு என்பது உண்மை இல்லை என்கிறீர்களா?
கொளத்தூர் மணி: அப்படி இருந்திருந்திருந்தால் பல்லாயிரம் படி எடுத்துக் கொடுப்பார்களா? எட்கர் தர்ஸ்டன் 1909 இல் ‘தென்னிந்திய குடிகளும் குலங்களும்’ என்று எழுதியுள்ளார்; அதில் கொங்கு வேளாளர் பற்றி என்ன எழுதியுள்ளார் என்பதை இவர்கள் படித்துப் பார்க்கட்டும். அப்படியானால் அந்த நூலை எரிக்கவேண்டும்; சூத்திரன் என்று சொல்லுகின்ற மனுசா°திரத்தை எரிக்கவேண்டும்; குழந்தை இல்லை என்றால் யாருடனும் சென்று குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுகின்ற ரிக் வேதம், மகாபாரதம் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் சேர்த்து எரிக்கவேண்டும். அதை விட்டு விட்டு இந்த நூலுக்கும் மட்டும், அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை திடீரென வருகிறது என்றால் யாரோ ஒரு சுயநலமி தூண்டிவிட்டிருக்கின்றார். நான் கேள்விப்பட்ட வரை அந்த ஊர்க் கல்வி நிறுவனங்கள் மீது இவர் கடுமையான விமர்சனம் செய்து எழுதிய கட்டுரைகள் தான் காரணம் என்று அறிகின்றேன். அதே சமுதாயத்தில் தோன்றியவர்கள், எதிர்ப்பு அறிக்கை விட்டிருக்கிறார்கள்; அங்கிருக்கும் மருத்துவர் ஒருவர் எதிர்ப்பு அறிக்கை விட்டிருக்கிறார். அவர் என்னிடம் சொன்னார்… “அப்படி ஒரு தெரு இருக்கின்றது; தேவடியாள் தெரு என்பதை மட்டும் தேரடித் தெரு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர அப்படி இருக்கத் தான் செய்கிறது; இன்னும் மூன்று பேர் அங்கு இருக்கின்றார்கள்; சில தினங்களுக்கு முன்பு அவர்களை அழைத்துப் பேசினேன்” என்று. இதற்குள் பெரிய அரசியல் இருப்பதாகத்தான் புரிந்து கொள்கிறேன். காலூன்றுவதற்கு எதை வேண்டுமானலும் செய்யலாம் என்ற நோக்கத்தில், அந்தப் பகுதிப் பெண் களைக் கேவலப்படுத்தியவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் தான் என்பது எனது கருத்து.

ஊடகவியலாளர்: இது கருஞ்சட்டைகள் ஒன்றிணையும் நேரம் என்று பேராசிரியர் சு.ப.வீ ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்; கொள்கைரீதியாக உங்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது; பல அபாயங்களை சந்திக்க வேண்டி உள்ள தற்போதைய சூழலில் திராவிடர் இயக்கங்கள் ஒன்றிணைவதற்கான திட்டம் அல்லது நிர்பந்தம் இருக்கின்றதா?
கொளத்தூர் மணி : கொள்கை வேறுபாட்டால் எங்களுக்குள் பிரிவு ஏற்படவில்லை; நடைமுறை சிக்கல்களால் வந்தது; கொள்கையில் ஒன்றுபட்டுதான் இருக்கின்றோம். எனவே ஒருங்கிணைந்து போராடுவதில் தவறு இல்லை. ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் அமைப்பும், கோவை இராமகிருஷ்ணன் அமைப்பும் தனித்தனியாக பிரிந்தோம். ஈழ விடுதலை உள்ளிட்ட பல சிக்கல்களில் இணைந்து நின்றுப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல அமைப்புகளோடு கலந்துகொண்டோம். அப்படி இருக்கும்போது பெரியாரை ஏற்றுக்கொண்ட இயக்கங்களோடு கலந்துகொள்வதற்கு தடை ஏதும் இல்லை. காலப்போக்கில் அப்படி ஏற்படக் கூடியக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். அப்படி ஒரு நிலை வரலாம் – வரவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன். அப்படிபட்ட இணைப்பு தேவையான ஒன்று தான்; அமைப்பு ஒன்றாக இணைய வாய்ப்பில்லை என்றாலும் கூட்டமைப்பாக செயல்பட தடை ஏதும் இருக்காது; காலம் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்: இதே நேர்முகம் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவரிடம் இதே கேள்வியை கேட்ட போது… ‘இப்போது நாங்கள் யாரும் யாரையும் விமர்சிப்பது கிடையாது; ஆனால் எதிரிகளைக் கூட நாங்கள் பயன்படுத்திக் கொள்வோமே தவிர ஒரு போதும் எதிரிகளுக்கு எங்கள் பிளவு சாதகமாக இருக்காது’ என்பதைப் போன்ற ஒரு ஃபேவரான பதிலைத் தான் சொல்லியிருக்கிறார்; பாடலாசிரியர் அறிவுமதியும் இதே கோரிக்கையை வைத்தார்; சு.ப.வீ.யும் சொன்னதால் இப்படி ஒரு கேள்வியை தங்கள் முன் வைத்தேன்.
கொளத்தூர் மணி : 2000 ஆம் ஆண்டில் நாங்கள் தனியாகப் பிரிந்து அமைப்பு தொடங்கிய போதே, மேடைகளில் பிற பெரியார் இயக்கங்களை விமர்சிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தோடுதான் இணைந்தோம். இடையில் ‘குடிஅரசு’ தொடர்பான ஒரு சிக்கலின் போது மட்டும் பேசப்பட்டதே தவிர மற்ற எந்த நேரங்களிலும் நாங்கள் பேசியதில்லை. மற்ற இயக்கங்களோடு எல்லாம் இணைந்து செயல்படும் போது இவர்களோடு இணைந்து நிற்பதில் தடை இருக்க முடியாது; அது கருதிப் பார்க்கவேண்டிய ஒன்று தான்.
(நிறைவு)

பெரியார் முழக்கம் 26022015 இதழ்

You may also like...

Leave a Reply