நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் மொய்தின் உலவி, வருமான வரித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க பொதுச் செயலாளர் கி. குமார், இளந்தமிழர் இயக்கம் சார்பில் செந்தில், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் துரை. அருண் தொகுத்து வழங்கினார். மாவட்ட தலைவர் ஜான் மண்டேலா, செயலாளர் உமாபதி, அன்பு தனசேகரன், அய்யனார், ஏசு உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். 3.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்hபட்டம் 7 மணி வரை தொடர்ந்தது.
தற்போது உயர்நீதிமன்றத்தில் 18 பதவிகள் காலியாக உள்ளன. ஏற்கனவே தலைமை நீதிபதி, இரண்டாவது நிலையில் உள்ள நீதிபதி உள்பட 7 பார்ப்பன நீதிபதிகள் உள்ளனர். இப்போது புதிதாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலும், பார்ப்பனர் களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் 50 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை எட்டுவதற்கான கால வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். அதே நேரத்தில், பிற சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தேர்வு செய்யும் போது 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக தேர்வு செய்கிறார்கள். ஒரே பட்டியலாக அனுப்பினால் பார்ப்பனர்கள் இடம் பெறுவது பளிச்சென்று அம்பலமாகிவிடும் என்பதால், இரண்டு பட்டியலாக அனுப்பும் தந்திரமான முடிவை தலைமை நீதிபதி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுவரை பழங்குடி சமூகத்தைச் சார்ந்த எவரும் நீதிபதியாக வந்தது இல்லை. அருந்ததியர், மீனவர், யாதவர், பொற் கொல்லர், குயவர், வண்ணார், நாவிதர், பழங்குடியினர், முத்தரையர், சிறுபான்மையினர் போன்ற எத்தனையோ சமூகப் பிரிவினர் நீதிபதி களாக வந்ததில்லை. பெண்களுக்கான பிரதிநிதித் துவம் இல்லை. இந்த நிலையில், முதல் பட்டியலை தலைமை நீதிபதி அனுப்பி வைத்துள்ளார். இந்தப் பட்டியலை ஏற்கக் கூடாது என்று வழக்கறிஞர் சங்கப் பிரதிநிதிகள் டெல்லியில் சட்ட அமைச் சரவை சந்தித்து நேரில் வற்புறுத்தியுள்ளனர். காஷ்மீர் பார்ப்பனரான தலைமை நீதிபதி, தான் தயாரித்த முதல் பட்டியல் ‘தகுதி’ அடிப்படையிலானது என்றும் இரண்டாவது பட்டியல் ‘இடஒதுக்கீடு அடிப்படையிலானது’ என்றம் கூறும் சமாதானம் திறமை வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பதாகும் என்று கண்டனக் கூட்டத்தில் பேசியவர்கள் சுட்டிக் காட்டினர். நீதிபதி நியமனங்களில் இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகத்தினருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் (ஆர். காந்தி – எதிர் இந்திய அரசு வழக்கில்) எடுத்துக் கூறி அனைத்து உயர்நீதிமன்றங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத் தக்கது. பார்ப்பன தலைமை நீதிபதிக்கு எதிராக வெளிப்படையாக வழக்கறிஞர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்திருப்பது – பெரியார் ஊட்டிய உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி!
பெரியார் முழக்கம் 05032015 இதழ்