செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு – நினைவு பொதுக் கூட்டம்
1929ஆம் ஆண்டு பிப். 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு, தமிழக சமூக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமும், திருப்புமுனையும் கொண்ட மாநாடு ஆகும். மாநாட்டின் தலைப்பே, “தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு” (திராவிட என்ற பெயரில் அல்ல) என்பதாகும். பெரியார் முன்னின்று ஏற்பாடு செய்த இந்த மாநாட்டின் தலைவர் டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியன். மாநாட்டை திறந்து வைத்தவர் டாக்டர் சுப்பராயன். கொடி ஏற்றியவர் பி.டி.இராசன். மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முதல் தீர்மானமாக மாகாணங்களுக்கு உரிமைகள் வழங்குவது பற்றி கருத்து கேட்க வந்த பிரிட்டிஷ் தூதுக் குழுவான சைமன் கமிஷனை வரவேற்க வேண்டும் என்றும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
தீண்டாமை ஒழிப்பு; வர்ணாஸ்ரம ஒழிப்பு; பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடுவது ஒழிப்பு; மதக் குறியீடுகளை புறக்கணித்தல்; விவாகரத்து உரிமை; பெண்ணின் திருமணத்துக்கு குறைந்தபட்ச வயது 16; கல்வி நிறுவனங்களில் தாய் மொழிக் கல்வி; பொது நிதியிலிருந்து அனைவருக்கும் கட்டாயக் கல்வி; உயர் கல்விக்கு பொது நிதியை செலவிடாதிருத்தல்; தீண்டப்படாத வகுப்புப் பிள்ளைகளுக்கு இலவசப் புத்தகம்; உணவு, உடை வழங்குதல்; கடவுளுக்கு தரகன் கூடாது; கோயிலுக்காக ஒரு காசு கூட செலவழித்தல் கூடாது; புதிதாய் எந்தக் கோயிலும் கட்டக் கூடாது; உற்சவ கொண்டாட்டங்களை நிறுத்தி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குச் செலவிடுதல்; தீண்டப்படாத மக்களுக்கு அரசு நிலம் வழங்கி, பயிர் செய்ய நிதி உதவி செய்திடல்; தீண்டப்படாதவர்கள் எனப்படும் மக்களுக்கு அரசுப் பதவிகளில் முன்னுரிமை வழங்குதல்;
மற்ற வகுப்பு சிறுவர் சிறுமியருக்கு சமமான அந்த°தைப் பெறும் வரையில் தீண்டப்படாதார் என்று சொல்லப்படும் பெண் குழந்தைகளுக்கு புத்தகம், உடை, உணவு வழங்குதல்; பள்ளி பாடத் திட்டத்தில் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் கருத்துகளை தடை செய்தல்; ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை; ஆண்களைப் போலவே பெண்களும் எல்லா வேலைகளையும் செய்ய வாய்ப்பு; தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பெண்களை மட்டுமே நியமித்தல்; மதக் கொள்கைகளை பரப்பும் நாடகம், நூல்களை நடிகர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் நடிக்காமலோ எழுதாமலோ இருத்தல்; சாதி வேறுபாடு காட்டும் ஓட்டல்களின் அனுமதியை நீக்கம் செய்தல்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகளில் ஜாதி பேதத்தை ஒழித்தல்; தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி, சித்த மருத்துவத்தை வளர்த்தல், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்ப தொண்டர் படை உருவாக்குதல் என்று பல புரட்சிகரமான தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நாட்டையே அதிர்ச்சியுறச் செய்த மாநாடாக அது விளங்கியது.
அந்த மாநாடு நடந்த செங்கல்பட்டில் கடந்த 19.2.2015 அன்று காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நினைவு பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. கூட்டத்துக்கு வே. சரவணன் தலைமை தாங்கினார். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, அய்யனார், ஜான் மண்டேலா, செங்குட்டுவன், தினேஷ் குமார், தெள்ளமிழ்து ஆகியோரைத் தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறன் சிறப்புரையாற்றினார். உ. ராஜ்குமார் நன்றி கூறினார். மாநாட்டு தீர்மானங்களை நினைவுகூர்ந்து தோழர்கள் பேசினர்.
(மாநாட்டு நினைவுகள் உள்ளே)
பெரியார் முழக்கம் 12032015 இதழ்