என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு
சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டிசம்பர் 23ஆம் தேதி சென்னை திரும்பிய கழகத் தலைவர், மீண்டும் திட்டமிட்டபடி பாரீஸ் நகரில் நடக்கவிருந்த ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் பங்கேற்க அந்நாட்டின் தமிழர்கள் விடுத்த அழைப்பையேற்று மலேசியாவிலிருந்து திரும்பிய அடுத்த நாளே 23ஆம் தேதி பாரீஸ் புறப்படத் தயாரானார்.
தொடர்ந்து சென்னை மாநகரம் கடும் மழையில் திணறிக் கொண்டிருந்தது. 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானத்தைப் பிடிக்க 7 மணிக்கே தலைமைக் கழக அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் இராசேந்திரன், மோகன் உள்ளிட்ட தோழர்களுடன் காரில் புறப்பட்ட போது கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தில் சாலைகளைக் கடந்து உரிய நேரத்தில் விமான நிலையம் சென்றடைய இயலவில்லை. 7 மணி நேரத்துக்குப் பிறகு விமான நிலையம் வந்து சேர நள்ளிரவு 2.30 மணியாகி விட்டது. விமானம் 10 மணிக்கே புறப்பட்டுவிட்டது. பயண டிக்கெட் ரத்தாகிவிட்ட நிலையில் பாரீஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனே அடுத்த நாள் 25ஆம் தேதி காலை 7.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்ய இரவு முழுதும் விமான நிலையத்தில் தங்கி, காலையில் பாரீஸ் புறப்பட்டார்.
மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை திரும்பினார். அடுத்த நாள் டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் கழக மாநாடு. கொட்டும் மழையிலும் கழகத் தோழர்கள் மாநாட்டை நடத்திட அயராது உழைத்தனர். மழையில் நனைந்து கொண்டே விளம்பரப் பதாகைகள், கழகக் கொடிகளைக் கட்டுதல் என்று பணிகளைத் தொடர்ந்தனர்.
மாநாடு அன்று காலை மழையின் வேகம் மேலும் கடுமையாகியது. மாநாட்டு நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்கள் வழியாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவியிருந்தது. கழகத் தலைவர் பொதுச் செயலாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் செய்திகள், பதிவேற்றப்பட்டு பல்லாயிரம் பேர் பார்த்தனர். எனவே, மாநாடு தொடங்கிய நாளில் காலையிலிருந்தே மாநாடு நடக்குமா என்று தோழர்கள் பலரும் அலைபேசிகள் வழியாக கேட்ட வண்ணமிருந்தனர். மாநாட்டு மண்டபத்துக்கே தோழர்கள் சென்றடையை முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து நின்றது. ஆனாலும், மாநாட்டில் பங்கேற்க முதல் நாளே வெளியூர்களிலிருந்து தோழர்கள் வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் தங்குவதற்கு மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோழர்கள் வெளியூரிலிருந்து வந்துவிட்டதால் மாநாட்டை திட்டமிட்டபடி நடத்தி விடலாம். பொது மாநாட்டு நிகழ்வுகளை மட்டும் இரத்து செய்துவிடலாம் என்று கழகத் தலைவர், பொதுச் செயலாளர், சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஆலோசித்து முடிவெடுத்தனர்.
கடும் மழையில் நனைந்தபடி மண்டபம் வந்து சேர்ந்த தோழர்களுக்கு உணவு கிடைக்காமல் போன நிலையில் அவசர அவசரமாக கழகத் தோழர்கள் காலை உணவுக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்தனர். நாத்திகன் குழுவினரின் எழுச்சி இசையோடு மாநாடு தொடங்கியது. வியப்பு என்னவென்றால் மாநாட்டு மண்டபத்தில் போடப்பட்டிருந்த 200 இருக்கை களும் தோழர்களால் நிரம்பி வழிந்ததுதான். அணிந் திருந்த கருப்புடை நீரில் மூழ்கிப் போய் தண்ணீர் சொட்ட கருஞ்சட்டைத் தோழர்களும் தோழமை அமைப்பினரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
“நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்க(க்) கூடியவர்கள்” என்ற மாநாட்டுக்காக தயாரிக்கப் பட்ட ‘பேட்ஜை’ ஒவ்வொருவரும் முழுமையாக ஈரத்தில் மூழ்கியிருந்த அந்த கருஞ்சட்டைகளில் கம்பீரமாக அணிந்திருந்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகச் சிறப்பாக தங்களுக்கான தலைப்புகளில் உரிய முன் தயாரிப்புகளோடு வந்து கருத்துகளை முன் வைத்து கருத்தரங்குக்கு மெருகூட்டினர். ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, பட்டிமன்றம் தொடங்கியபோது மின்சாரமும் தடைபட்டது. சுயமரியாதை இயக்கக் காலத்தை நினைவூட்டுவது போல் ஒலி பெருக்கி இல்லாமலே பட்டிமன்றமும் நடந்தது.
மாநாடு – பிற்பகல் நிகழ்வுகள் நடந்து கொண் டிருக்கும்போதே, மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே சூழ்ந்து நின்ற மார்பளவு வெள்ளப் பெருக்கில் ஒரு மணி நேரம் நீந்திக் கடந்து, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த தோழர்கள், அங்கிருந்து மாற்று வாகனங்களை கிடைத்த வழிகளில் ஏற்பாடு செய்து, எழும்பூர்-சென்ட்ரல் தொடர் வண்டி நிலையங்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் சென்றடைந் தனர். கோவை செல்லும் தொடர்வண்டி மட்டும் இயங்கியதால், கோவை, திருப்பூர், ஈரோடு தோழர்கள் ஒரு வழியாக தொடர் வண்டியைப் பிடித்து விட்டனர். எழும்பூர் தொடர்வண்டி நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ற தோழர்கள் அங்கு ஒரு நாள் வரை காத்திருக்கும் நிலை உருவாகிவிட்டது.
மாநாடு முடிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, பெரியவர் சதாசிவம், வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் மண்டபத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. இரவு முழுதும் கொட்டித் தீர்த்த மழையில் மண்டபத்திலேயே மின்சாரமின்றி அன்று இரவு முழுவதையும் கழித்தனர். அடுத்த நாள் காலை 7 மணியளவில் வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கும் நிலையில் இனியும் தாமதிப்பது ஆபத்து என்று முடிவெடுத்து மண்டபத்துக்கு வெளியே சூழ்ந்து நின்ற வெள்ளத்தில் இறங்கி 1 மணி நேரம் நடந்து, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து வாகனங்களில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கழகத்தின் தலைமை நிலையத்திலேயே 4 நாள்கள், அதாவது 5ஆம் தேதி வரை தங்கிவிட்டனர்.
1ஆம் தேதி மாநாட்டுக்கு வந்த கழகத் தலைவரின் கார் – மாநாட்டு மண்டப வாயிலில் நீரில் மூழ்கி 4 நாள்களுக்குப் பிறகு இழு வாகனம் வழியாக மேட்டூருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. கழகத் தோழர்களின் இரு சக்கர வாகனங்களும் இதே கதிக்கு ஆளாயின.
உதவிப் பணிகள் தொடங்கின
மாநாடு முடிந்த அடுத்த நாளிலேயே மாநாட்டுக்கு உழைத்த சோர்வுகளை உதறிவிட்டு கழகத் தோழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சேவைகளைத் தொடங்கி விட்டனர். சமூகவலை தளங்கள் வழியாக திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிப் பெரியார் முழக்கம் இணைந்து மக்களுக்கு உதவிடும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அடுத்த நிமிடம் முதல் உதவிக் கரங்கள் ஆர்வத்துடன் நீண்டன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அலைபேசி வழியாக பலரிடம் உதவிகளைக் கேட்டார். பலர் பணமாக தர முன் வந்தனர். பலர் உதவிப் பொருள்களை வழங்க முன் வந்தனர். உணவுப் பொருள்கள் குவியத் தொடங்கின.
கொட்டும் மழையில் தோழர்கள் பம்பரமாக சுழன்றனர். இராயப்பேட்டைப் பகுதியில் உணவு தயாரிப்புக் கூடம் உருவானது. படகுகளில் உணவுப் பொட்டலங்களை ஏற்றிப் போய் வீடு வீடாக விநியோகித்தனர். உதவிகள் சென்றடைய முடியாத வெள்ளம் சூழ்ந்த பகுதிகளாக தேர்வு செய்து, கழக இளைஞர்கள் கடும் எதிர் நீச்சலில் உதவிப் பொருள்களை வழங்கியது, மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.
இராயப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பு வேலைகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தன. சமையல் கலைஞர்கள் கவுதம், கோபால் இருவரும் ஊதியம் ஏதுமின்றி உதவிட வந்தனர். கழகத் தோழர்களே உணவு தயாரிப்புகளில் இறங்கினர். தொடங்கிய உதவிப் பணிகள், இந்த இதழ் அச்சேறும் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதைக்குப் போராடும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அவர்களின் வாழ்வுரிமைக்கும் களத்தில் நிற்பார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். – இரா
பெரியார் முழக்கம் 10122015 இதழ்