அய்.அய்.டி. முற்றுகை: 70 தோழர்கள் கைது
சென்னை அய்.அய்..டி.யில் மாணவர்கள் தொடங்கிய அம்பேத்கர்-பெரியார் சிந்தனை வட்டத்துக்கு அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகம் தடை போட்டுள்ளது. இது நாடு முழுதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்கிறது. ஊர் பேர் இல்லாமல் மத்திய மனித வளத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடிதத்தின் அடிப்படை யில் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. துறை சார்ந்த அதிகாரி ஒருவர், அந்த மொட்டைக் கடிதத்தை இணைத்து சென்னை அய்.அய்.டி.க்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். கடிதம் வந்த அடுத்த சில நாட்களிலேயே சிந்தனை பேரவைக்கு அய்.அய்.டி. தடை போட்டுள்ளது. அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகத்தின் இந்த மனுதர்மத்தைக் கண்டித்து, பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளும், இயக்கங் களும் போராடி வருகின்றன. தடையை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் முதல் தேதி மாலை 4 மணியளவில் அய்.அய்.டி. முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டக் களமாக மாறி நிற்கும் ‘மத்திய கைலாஷ்’ அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மே 17 இயக்கம், இளந் தமிழர் இயக்கம், மார்க்சிய லெனினிய கட்சி (மக்கள் விடுதலை) அமைப்பு களைச் சார்ந்த தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். “அய்.அய்.டி. நிறுவனத்தில் ‘வந்தே மாதரம்’ மாணவர் வட்டம், ஜெய்ஹிந்த் மாணவர் வட்டம், ‘இராமாயண’ பிரச்சார வட்டம், வசிஷ்டர் வட்டம் என்று பல்வேறு மாணவர் வட்டங்கள் செயல்படு கின்றன. ஆனால், அம்பேத்கர், பெரியார் வட்டத்துக்கு மட்டும் தடை போடுகிறார்கள். இதே கல்வி வளாகங் களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன உயர்ஜாதி மாணவர்கள் போராடினார்கள். அதற்கு நிர்வாகம் முழுமையாக ஒத்துழைக்கிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்குப் போராடிய தலைவர்கள் பெயரை பயன்படுத்தினால் அவர்களால் ஏற்க முடியவில்லை. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை அய்.அய்.டி. நிர்வாகமே, காங்கிர° ஆட்சியின் கொள்கைகளை எதிர்த்து ஆர்.எ°.எ°. பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி, கிரன்பேடி, அரவிந்த் நீலகண்டன் போன்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, மோடிக்கு ஆதரவாக பேச வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன், ‘சோதிடம் ஒரு அறிவியலே’ என்று ஒரு சோதிடரை அழைத்து வந்து தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தது. மோடியின் நில ஆக்கிரமிப்புச் சட்டம்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடும் கொள்கைகள்; மக்கள் பிரச்சினை களாகும். இவற்றை விமர்சிக்கும் உரிமை, மாணவர்களுக்குக் கிடையாதா? அய்.அய்.டி. துறைகளில் பேராசிரியர் பெயர்களை இந்தியில் எழுதுவதாகக் கூறி, சம°கிருத இந்தியில் எழுதியிருக்கிறார்கள். இந்தி தெரிந்த மாணவர்களுக்கே அதைப் படிக்கத் தெரியவில்லை. இவையெல்லாம் பார்ப்பனியத் திணிப்பு அரசியல் அல்லவா?” என்று கேட்டார்.
தொடர்ந்து அய்.அய்.டி.யை முற்றுகையிட முழக்கங்களுடன் புறப்பட்ட 70 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள சமூகநலக் கூடத் தில் அனைவரும் வைக்கப்பட்டனர். அங்கு தோழர்கள் நாத்திகன், இளைய ராஜா – பெண்ணுரிமை ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர். தோழர்கள் செந்தில் (இளந்தமிழர்), அருண்ஷோரி (மக்கள் கட்சி), விநாயகம், பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அ ருண், அன்பு. தனசேகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் அம்பேத்கர்-பெரியார் கொள்கை சக்திகள் இணைந்து நிற்க வேண்டிய களத்தை பார்ப்பனிய சக்திகள் உருவாக்கியிருப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்கள். 7 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கழகப் பொறுப்பாளர்கள் தபசி. குமரன், பிரகாசு, அருண், சுகுமார், ஜான் மண்டேலா, ஏசு, தெட்சிணா மூர்த்தி, விஜயன், மாரிமுத்து, மனோகர், செந்தில், மாணவர்கழக அமைப்பாளர் பாரி. சிவக்குமார், அசுரன், காஞ்சி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தினேஷ், செங் குட்டுவன் உள்ளிட்ட
70 தோழர்கள் கைதானார்கள்.
பெரியார் முழக்கம் 04062015 இதழ்