கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சேலம் : கொளத்தூர் நிர்மலா பள்ளி ஆசிரியரும் கழகத் தோழருமான செல்வேந்திரனின் தந்தை பெ.செல்லமுத்து கடந்த 04.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பெ. செல்லமுத்துவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 10.03.2024 அன்று கொளத்தூர், உக்கம் பருத்திக்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
முன்னதாக மறைந்த தோழர் பெ. செல்லமுத்துவின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் இரா. விஜயகுமார் தலைமை தாங்கினார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், உக்கம்பருத்திக்காடு கிளைத் தலைவர் சுப்பிரமணியம், TNEB ஈரோடு பெ.அன்புச்செழியன், மருத்துவர் வ.ப.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணம்மாள், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ம.விஜய் அமுல்ராஜ் ஆகியோர் தோழர் செல்லமுத்து அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் மறைந்த தோழர் செல்லமுத்துவின் கொள்கைப் பற்றையும், இயக்க நிகழ்வுகளில் அவரின் பங்களிப்பையும், தோழர்களோடு நகைச்சுவை உணர்வோடு கழக பணியாற்றிய பசுமையான நினைவுகளை பகிர்ந்தார். மேலும் இது போன்ற நிகழ்வுகளில் பார்ப்பனர்களை தவிர்த்து நடத்தப்படுவது என்பது திராவிட இயக்கம் ஏற்படுத்திய பண்பாட்டு புரட்சி என்பதையும் தனது நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டு பேசினார்.

தோழர் செல்லமுத்துவின் மகனும், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான செ.செல்வேந்திரன் நன்றி கூறினார். தோழர் செல்லமுத்துவின் உடலை கழகப் பெண்களே சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தோழர் செல்லமுத்துவின் நினைவாக அவரது பெயரன் யாழ் இன்பன் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000-யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...