சேலம் மாவட்ட கழகத்திற்குப் பாராட்டு
திராவிடம் – சனாதனத்தை விளக்கும் 1000 தெருமுனைக் கூட்டங்கள்: சேலத்தில் கூடிய கழக செயலவை முடிவுகள்
ஜூன் 1 முதல் 30 வரை தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்களின் பட்டியல் தயாரிப்பு
சேலத்தில் கடந்த மே 21ஆம் தேதி சேலம் குகை ஜி.பி.கூடத்தில் நடந்த கழகச் செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்.
சேலம் மாவட்டக் கழகத்திற்குப் பாராட்டு : திராவிடர் விடுதலைக் கழகம் ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் நடத்தி முடித்த மாநில மாநாடு மாபெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. தேர்தல் அரசியல் சார்பற்ற பெரியார் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்களும் ஆண்களும் இலட்சிய உறுதியோடு திரண்டு நின்ற காட்சி, கழகத்தை பலராலும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த மாநாடு. பெரியாரியத்தை அடுத்த தலைமுறை வீரியத்தோடு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை உறுதியாக்கி யிருப்பதோடு எதிரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. இந்த பெரும்பணியை ஆர்வத்தோடு சுமப்பதற்கு முன்வந்து ஒரு மாத காலத்திற்கு மேலாக அயராது உழைத்த சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு இந்த செயலவை பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் சுவர் எழுத்துக்களை எழுதி, மக்களை சந்தித்து, நிதி திரட்டி, மாநாட்டு விளம்பரங்களை செய்து ஆர்வத்துடன் மாநாட்டுக்கு திரண்டு வந்து மாநாட்டின் வெற்றிக்கு பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். மாநாட்டின் பேரணி எழுச்சியும், கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட ஆழமான சிந்தனைகளும், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரையும், வெளியிடப்பட்ட குறும்படங்களும் மாநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன. இந்த எழுச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், ஏராளமான இளைஞர்களை இயக்கத்திற்கு கொண்டு வந்து சேர்க்கவும் உறுதியளித்து தோழர்கள் களம் காண முன்வர வேண்டும் என்று இந்த செயலவை கேட்டுக்கொள்கிறது.
வி.பி.சிங் சிலை: முதல்வருக்குப் பாராட்டு : சமூக நீதிக்காக பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்து, பார்ப்பன உயர் ஜாதி எதிர்ப்புகளைப் புறந்தள்ளி, ஒன்றிய அரசுப் பதவிகளில் முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27ரூ இட ஒதுக்கீட்டை வழங்கி இந்திய அரசியலில் மண்டல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவரும், தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவருமான வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை இந்த செயலவை பாராட்டி மகிழ்ந்து வரவேற்கிறது.
1000 தெருமுனைக் கூட்டங்கள் : தமிழ்நாட்டில் திராவிடத்திற்கும் சனாதானத்திற்கும் இடையிலான போராட்டம் கூர்மையடைந்து வருகிறது. சமூகத்தை வேத காலத்திற்கு இழுத்துச் செல்ல மோடியின் ஆட்சிக் காலமே சரியான தருணம் என்று கருதி சனாதனத்தை நியாயப்படுத்தி திராவிடத்தை கொச்சைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் முதல் சங் பரிவாரங்களும், பார்ப்பனிய பாஜக மதவாத சக்திகளும் மக்களிடையே உண்மைக்கு மாறான பொய்யான வரலாறுகளையும், அறிவியலுக்கு எதிரான கருத்துகளையும் பரப்பி குழப்பி வருகிறார்கள். இதை முறியடிக்க சனாதனம் கடந்த பல நூற்றாண்டுகளாக சமூகத்தை பார்ப்பனியமயமாக்கிய ஆபத்துகளையும், திராவிடம் இதை எதிர்த்து விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதைக்கும், வாழ்வுரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை உருவாக்கியிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு எது “திராவிடம்! எது சனாதனம்! விளக்க கூட்டங்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 தெருமுனைக் கூட்டங்களை ஜூலை 1 முதல் நடத்துவது என்று இந்த செயலவை தீர்மானிக்கிறது.
தீண்டாமை கிராமங்கள் ; பட்டியல் தயாரிப்பு: ஜாதித் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், அவை முடிவுக்கு வரும்வரை நீண்ட காலம் சமுதாயத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டாக வேண்டும். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக சமூகக் கட்டமைப்பாக இறுகிப் போய் கிடக்கும் இந்த அமைப்பை தமிழ்நாடு, ஏனைய மாநிலங்களை விட ஓரளவு அசைய வைத்திருக்கிறது என்றாலும் இப்போதும் பல்வேறு வடிவங்களில் இந்த பாகுபாடு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த கண்ணோட்டத்தில் கடந்த ஏப்ரல் 29, 30 சேலத்தில் நாம் நடத்திய மாநில மாநாட்டில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுப்பதாக முடிவு எடுத்தோம்.
அதற்கான செயல்திட்டங்களாக முதல் கட்டமாக ஜூன் 1-இல் தொடங்கி ஜூன் 30ஆம் தேதி முடிய, பட்டியல் இன மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுத்தல், பொதுக் கோயில்களில் வழிபட உரிமை மறுத்தல், செருப்பு அணிந்து வீதிகளில் நடமாட தடை, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட பல்வேறு தீண்டாமை வடிவங்களை பின்பற்றும் கடைகள், ஊர்கள், இடங்களைப் பற்றியப் பட்டியலை தயாரிக்க வேண்டும். அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அந்தப் பட்டியலை அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆதிதிராவிடர் நலத்துறை, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நல ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகிய அமைப்புகளிடம் ஜூலை 10ஆம் தேதிக்குள் நேரில் மனு அளித்து இந்த பாகுபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
மூன்றாவது கட்டமாக ஆகஸ்ட் 28இல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என்று இந்த செயலவை முடிவு செய்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இதற்கான இயக்கங்களை தீவிரமாக முன்னெடுக்கவும் இந்த செயலவை தீர்மானிக்கிறது.
பெரியார் முழக்கம் 25052023 இதழ்