சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்
சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்வு, மக்கள் கலை விழாவாக ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் (திமுக) முனைவர் ஏ. ரியா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர்.
பறையிசை, சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள், கானா பாடல்கள் என கலை நிகழ்சிகளுடன் விழா சிறப்புடன் நடைபெற்றது. நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்” புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை மாவட்டக் கழகம் சார்பில், புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கான சந்தா, கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றறசு, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, பகுதிச் செயலாளர் காமராஜ், வட்ட கழகச் செயலாளர்கள் லைனர் கே.பிரபு, க.வே மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : காலை முதல் மாலை வரை விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் என பெரும் திரளான பொதுமக்கள் குழந்தைகள் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகம் அருகில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 15.01.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.
விழாவிற்கு திருப்பூர் திவிக தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். விழாவின் முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் த.மு.எ.க.ச. மாவட்டச் செயலாளர் குமார் பொதுமக்கள் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திவிக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மார்க்சிய பொதுவுடைமை கட்சி இரவி, காளியம்மாள் ஆகியோர் பொங்கல் வழங்கி சிறப்பித்தனர். அடுத்த நிகழ்வான சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆடிட்டர் இரவி அவர்கள் தொடங்கி வைத்தார். அப்பகுதி வாழ் சிறுவர், சிறுமியர், ஆண்கள் பெண்கள் என திரளாக உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாலை சிறுவர், சிறுமியர் பங்கேற்ற திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, நடன நிகழ்சிகள் நடைபெற்றது.
திவிகமாநகர தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, அய்யப்பன், ராமு, லட்சுமணன், முட்டைக் கடை கணேசன் ஆகியோர் காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்கள். இரவு 7.00 மணியளவில் பொங்கல் விழா குறித்தும் தமிழ்ப் புத்தாண்டு குறித்தும் கழகத் தோழர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினார்கள்.
கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, திவிக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, இணையதள பொறுப்பாளர் பரிமளராசன், மாநில பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவு நிகழ்வாக பரிசளிப்பு விழா ஆரம்பமானது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டு குறித்தும் பொங்கல் விழா குறித்தும் உரையாற்றி கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி விளையாட்டுப் போட்டிகள் திருக்குறள் ஒப்புவித்தல் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வினை துவங்கி வைத்தார்.
தொடர்ந்து கழகத் தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசளித்தனர். முடிவில் கழகத் தோழர் ராசசிங்கம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்வில் தோழர்கள் சரசு, திலகவதி, சிரிஜா, இராமசாமி, மோகன், பல்லடம் பழனிச்சாமி, சண்முகம், எஸ்.கருப்புசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தோழர்கள் முத்துலட்சுமி, நஜ்முனிசா, வசந்தி, கதிர் முகிலன், மாணவர் கழகத் தோழர் ஈழமாறன், முத்தமிழ், பெரியார் பிஞ்சுகள் யாழிசை, பிரபன்யா வெற்றிமாறன், தழல் சிறகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் : 15.01.2023 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மேட்டூர் நகரச் செயலாளர் சு.குமரப்பா தலைமையில் நடைபெற்றது.
மேட்டூர் நகர படிப்பகத்தில் பொங்கல் வைக்கப்பட்டுபடிப்பகத்தின் முன் பந்தல் போடப்பட்டு கரும்பு கட்டப்பட்டிருந்தது. பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் மற்றும் மேட்டூர் நகர தோழர்களும், பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 26012023 இதழ்