சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம்  27.11.22 ஞாயிறு காலை 10:30 மணி அளவில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், பரப்புரைத் திட்டங்கள்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு சந்தா திரட்டல், இயக்கத்திற்கு முழு நேரப் பணியாளரை நியமித்தல், இயக்க வளர்ச்சி நிதி திரட்டல் குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றன.

கழகத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) 2023 பிப்ரவரி மாதம் சனாதன எதிர்ப்பு “இளையோர் மாநாடு” சேலத்தில் ஒரு நாள் மாநாடாக மிகச் சிறப்பாக நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கம், பாட்டரங்கம், கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சனாதன எதிர்ப்பு கொள்கை உடைய சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்ட பொது மாநாடு என மாநாட்டு நிகழ்வுகள் தீர்மானிக்கப்பட்டன.

2)           2023 ஜனவரி 30,  காந்தியார் நினைவு நாளை ஒட்டி மதவெறி சக்திகளின் பயங்கரவாத செயல்களை விளக்கி “காந்தி முதல் கௌரிலங்கேஷ்” வரை எனும் தலைப்பில் “மதவெறி எதிர்ப்பு” தெரு முனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் சங்பரிவாரிகளின் வன்முறை செயல்பாடுகளைப் பரப்புரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

3) தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி அவற்றில் தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாவட்டக் கழகங்களைப் புதுப்பித்தல் / மாற்றியமைத்தல், கழக  செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் பற்றி கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

4) கழகத்திற்கென முழு நேரப் பணியாளர்களை நியமிப்பது குறித்தும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

5)  கழகத்தின் வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 2023 ஆம் ஆண்டிற்கான சந்தா சேர்த்தலை தோழர்கள்  டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சந்தாக்களின் முடிவு தேதியும் 31.12.2023 ஆகத் தான்  இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

6)           தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் குழந்தைகளுக்கான பழகு மகிழ்வு முகாம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மதியம் 2 மணி அளவில் தலைமைக் குழுக்கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராஜன், சூலூர் பன்னீர்செல்வம், சென்னை உமாபதி, மேட்டூர் சக்தி, விழுப்புரம் அய்யனார், காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 01122022 இதழ்

You may also like...