சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

 

  • சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.
  • புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர்.
  • சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார்.

ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. மாநாட்டின் நோக்கத்தை விளக்கியும், மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததும் கள்ளக்குறிச்சியில் ஏழு இடங்களிலும், விழுப்புரத் தில் 10 இடங்களிலும் தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்றன.

மாநாடு சங்கராபுரம் பேருந்து நிலைய பொதுக் கூட்ட மேடையில் மாலை 5 மணியளவில் தொடங்கி யது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக “விடுதலைக் குரல்” குழுவின் புரட்சிகரமான பாடல் இசையுடன் நடத்தப்பட்டது. குழுவின் பாடலானது மக்களை பெருமளவிற்கு மேடைக்கு அருகே ஈர்த்தது. விடுதலைக் குரல் குழுவிற்கு மக்கள் நன்கொடை வழங்கினர்.

மாநாட்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் க.ராமர் தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.மதியழகன் வரவேற்பு கூறினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சி.சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில், 85 வயது நிறைந்த திராவிடர் கழகத் தோழர் பெரியார் பெருந்தொண்டர் மு.கலைச் செழியன் மற்றும் 75 வயது நிறைந்த தமிழ் படைப்பாளர் சங்கத்தின் சங்கராபுரம் தலைவர் அரங்க செம்பியன் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டு மேடைக்கு மறைந்த கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக் குளம் மோகன் நினைவாக பெயர் அமைக்கப் பட்டிருந்தது.

நிகழ்வில், கழத்தின் தலைமைக் குழு உறுப்பினர் நா. அய்யனார், விழுப்புரம் மாவட்ட தலைவர்

பூ.ஆ. இளையரசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாளர் மு.தமிழ்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.நாகராஜ் நன்றி கூறினார். மாநாட்டு நிகழ்வுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர் ஒருங்கிணைத்தார்.

பரப்புரை பயணத்திற்கான 3000 துண்டறிக்கைகளை கடுவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை நன்கொடையாக வழங்கினார். மாநாட்டிற்கான மாட்டுக்கறி பிரியாணியை கடுவனூரைச் சேர்ந்த கனகராஜ் ஏற்பாடு செய்தார்.

குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட மாநாட்டிற்காக, இரா. கார்மேகம், சி.சாமிதுரை, க.ராமர், பாக்கம் இராமச்சந்திரன், அழகர், பூபாலன், பெரியார் வெங்கட், ஆ.நாகராஜ், ந.வெற்றிவேல், ச.அன்புரவி, எடுத்தவாய் நத்தம் முருகன், புதியவன், சிவா, தமிழ், இளைய பெருமாள், மா.குமார், மு.குமரேசன், இரா.ஜீவா, மு.சபா, ஆ.அஜெய், கு.பாபா, இரா.வீரமணி ஆகியோர் கடுமையான களப்பணி செய்தனர். கழக வெளியீடுகள் ரூ.7500 க்கு விற்பனை ஆகின.

 

பெரியார் முழக்கம் 12052022 இதழ்

You may also like...